Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எம்.ஜி.ஆர் என்றதொரு வாழ்க்கை!”

எம்.ஜி.ஆர்

ரலாறு மீண்டும் மீண்டுமாகத் திருத்தி எழுதப்படும்போது உண்மையைவிட அதில் சுவாரஸ்யமே அதிகம் உணரப்படுகிறது. வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த ஒருவரின் எழுபது ஆண்டுகால வாழ்க்கை புத்தகமாகும் நிலையில், அதன் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது  தவம் போன்ற மிகப்பொறுமையானதொரு காரியம். திராவிட அரசியலின் வழிவந்த ரா.கண்ணனின் 'MGR A Life' என்ற புத்தகம் அப்படியானதொன்று. பெங்குவின் பதிப்பக வெளியீட்டில் வந்துள்ள இந்தப் புத்தகத்தை உருவாக்க ஏழு வருட காலம் தேவைப்பட்டது என்கிறார் கண்ணன். இவரது முதல் புத்தகமான ‘Anna:The life and times of C.N.Annadurai' திராவிட அரசியலின் முதலாவது முதலமைச்சரான அண்ணாதுரையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியது.

'குள்ளமான உருவம்; குரலிலும் கம்பீரமில்லை, மேடைப்பேச்சுகள் எதுவும் அவ்வளவாக வசப்படவில்லை. ஆனால், அந்த மனிதர் முப்பது வருடகாலம் அரசியல் வழியாகவும் சினிமா மூலமாகவும் மக்களைக் கட்டியாள முடியுமா?' என்கிற ஆச்சரியக் கேள்வியுடன் தொடங்குகிறது எம்.ஜி.ஆர். குறித்த புத்தகம். 

புத்தக வெளியீட்டில்

'பாடுவது கவியா? இல்லை பாரி வள்ளல் மகனா?’ என்று எம்.ஜி.ஆருக்காக 'பணத்தோட்டம்’ படத்தில் கண்ணதாசன் எழுதியதுபோல, அவ்வளவு செழுமையாகத் தொடங்கிவிடவில்லை அவரது வாழ்வு. அப்பா கோபாலமேனன் இறந்ததும் தன் தாய் சத்தியபாமா மற்றும் அண்ணன் சக்கரபாணியுடன் அவர் சந்தித்த வறுமைக்காலங்களை விளக்குகிறது இந்தப் புத்தகம். 'பசிக்கொடுமையால் தனது பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது' என்று பயப்படும் சத்தியபாமா, அவர்களை வீட்டின் அறையில் பூட்டிவைப்பது, பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேரும் அண்ணன் - தம்பி இருவரும் அம்மாவுக்காக, சம்பாதிப்பதற்காக கம்பெனி மேனேஜர் சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, தனது மாஸ்டர் காளி ரத்னம் என அனைவரிடமும் அடிபட்டு, அடைபட்டு கம்பெனியிலேயே அடிமைகள் போன்று வாழ்க்கை வாழ்வது என்று எம்.ஜி.ஆரின் கசப்பான பால்ய காலத்தை விவரிக்கிறார் கண்ணன். 1958-ம் ஆண்டில் நேருவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டத்தில் அண்ணாவுடன் ஈடுபடும் எம்.ஜி.ஆர், நள்ளிரவு இரண்டு மணிக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். 

நான்கு நாள்கள் சிறையில் இருக்கும் அவருக்கு அலுமினியத்தட்டில் புழுக்கள் நெளியும் சிகப்பரிசி உணவு தரப்படுகிறது. 'இந்த உணவைச் சாப்பிடுவதா என்று வருத்தம் கொள்கிறார்' நடிகர் எஸ்.எஸ்.ஆர். "இதில் கவலைப்பட ஒன்றுமேயில்லை; என்னுடைய பால்யகாலத்தில் மூன்று வேளையும் இந்த உணவைத்தான் சாப்பிட்டு இருக்கிறேன்” என்று பதில் வருகிறது எம்.ஜி.ஆரிடமிருந்து. 

புத்தகத்தின்படி, உண்மையில் அவரைப் பின்னாளில் துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதாவுடன் ஏற்பட்ட ஆரம்பகால நட்பு வழியாகத்தான் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை,போக்கு மாறியிருக்கிறது. திராவிட அரசியலுக்கான தேவையையும், அண்ணாவையும் பெரியாரையும் அவர் எம்.ஆர்.ராதா மூலமாகத்தான் அறிந்துகொள்கிறார். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்தவர், 1953-ம் ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருகிறார். "காமராஜர் எனது தலைவர், அண்ணா எனது வழிகாட்டி” என்று வெளிப்படையாகவே அவர் குறிப்பிட்ட பகுதிகளும், அதன்பிறகு கழகத்தில் நிகழ்ந்ததும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி எம்ஜிஆர்

அண்ணாவின் இழப்பு அதன் பிறகு கிங்-மேக்கராக வலம் வந்த எம்.ஜி.ஆர், கலைஞரை கட்சியின் தலைமை ஏற்க வைத்து அழகு பார்த்தது. பிறகு 1971-ல் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், அதன் காரணமாக உருவான 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என தமிழகம் கண்ட திராவிட அரசியல் திருப்பங்களைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தனிப்பட்ட வாழ்க்கையில் எம்.ஜி.ஆர், தான் ஒரு நடிகனாகப் பரிமாணம் எடுக்க அவர் சந்தித்தத் துயரங்கள், அதற்கிடையே தனது முதல் மனைவியான தங்கமணியை இழந்தது. மீண்டும் இரண்டாவது மனைவியான சதானந்தவதியுடன் இணைந்து தொடங்கிய வாழ்க்கைப் போராட்டம், சதானந்தவதி இறப்புக்குப் பிறகான வி.என்.ஜானகியின் அறிமுகம், பிறகு அவரை மணந்துகொண்டது' என அவரது வாழ்க்கையில் முக்கியமாகப் பயணித்த பெண்கள் பற்றி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எது இருந்தும் தனக்கென்று ஒரு வாரிசு இல்லாமல் போனது, எம்.ஜி.ஆருக்கு அவரது இறுதிக்காலம்வரை ஒரு குறையாகவே இருந்திருக்கிறது. "யாராவது தனது பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்லி என் கையில் கொடுத்தால் அந்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்போது என் கரங்கள் நடுங்கும்” என்று எம்.ஜி.ஆர் சொன்னதாகவே புத்தகத்தின் ஒரு பகுதியில் வருகிறது.

எம்.ஜி.ஆரிடம் குறைகளும், அவர் மீது குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் அவரை மக்களிடம் ஒரு தலைவனாகச் சித்திரித்திருந்தது அவரது கொடுக்கும் குணம்தான். "எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல்குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்கள் அரசினை குற்றவாளியாகப் பார்த்தார்களே ஒழிய, அவரது கொடுக்கும் குணத்திற்காகவே அவரை குற்றவாளியாகப்  பார்க்க மக்கள் மனது ஏற்கவில்லை" என்கிறார் கண்ணன். 'எம்.ஜி.ஆரின் நிஜ குணம் இதுதான்' என்று தெரியாத அளவுக்கு சினிமாவில் அவர் காட்சிப்படுத்தப்படும்விதம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கண்ணதாசன், வாலி என அரசியல் அறிந்த கவிஞர்களை அவர் தனது நண்பர்களாக்கிக் கொண்டதும் அதற்கு ஒரு காரணம். சினிமாவில் அவர் பேசிய வெற்றி வசனங்கள்தான், 1977-ல் அவரை ஆட்சியைப் பிடிக்கச் செய்து, முதலமைச்சராக்கியதும். ஆனால், அ.தி.மு.க வென்றதும் முதல்முறையாக அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் இருந்ததுபோன்று ஹீரோவாகிவிடக் கூடிய சூழல் ஏற்படவில்லை. அவரது ஆட்சிகாலத்தின் முதல் ஓராண்டினை பல்வேறு பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன.

ஒரு கட்டத்தில் நடிப்பா அல்லது அரசியலா என்று முடிவுசெய்ய வேண்டிய குழப்பத்தில் எம்.ஜி.ஆர் இருந்ததாக புத்தகம் விவரிக்கிறது. நடிப்பில் ஏற்கெனவே சிவாஜி கணேசன் காலூன்றி இருந்ததால், இவர் தனது அரசியல் களத்தை வலுவாக்கிக் கொண்டதாக ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. உண்மையில் எம்.ஜி.ஆர் அரசியலைக்கொண்டே தனது சினிமாக்களத்தை வலுப்படுத்திக் கொண்டார், சினிமாவைக் கொண்டே அரசியலையும் அதன்வழியாக மக்களையும் தனதாக்கிக் கொண்டார். இல்லையென்றால் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இடம்மாறி இருக்கக்கூடும்.


"இருந்தாலும்...மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...;
இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்!"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close