Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"இந்தப் பயணம் என்னை அச்சுறுத்தியது!"- ஜென் Z இளைஞர், ஊர் சுற்றி ஆன கதை

எளிய குடும்பத்தில் பிறந்தவரான குமார் ஷா, அரசு பள்ளியில் பயின்ற ஒரு சுட்டிப் பையன். சிறு வயது முதலே கதை சொல்ல வேண்டுமென்று யாராவது கேட்டால் போதும், தன்னைச் சுற்றி இருக்கும் மரம், கொடி, பூச்சி, பறவை போன்றவனவற்றை வைத்தே கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிட்டு ஒரு புராணமே பாடி விடுவார். அபாரமான கதை சொல்லல் திறமை அவருக்கு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைகளால் படித்து முடித்த பின் கிடைக்கும் வேலைக்குச் செல்கிறார். யாருக்கோ அடிமைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வும் அவரை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சட்டென நண்பர்களை அழைத்து, 'இனிமே நான் மத்தவங்க கிட்ட கை கட்டி வேலைப் பார்க்கப் போறதில்ல. ஐ க்விட்' என்று சொன்னவுடன் பெரிதாக யாரும் அதிர்ச்சியடையவில்லை. மாறாக, 'ஆமான்டா இது உனக்கு சரிபட்டு வராது. ஊர் சுத்த போ' என்கிறார்கள். 'என் கதை என்னைக் கைவிடாது' என்ற நம்பிக்கையில் ஒரு பையுடன் ஊர் சுற்றக் கிளம்புகிறார் குமார். அந்தப் பயணம் இதோ, இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுவதில் வந்து நிற்கிறது.

இந்த முறை தன் இந்திய சைக்கிள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குடியம் குகைக்குச் சென்றார் குமார். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தக் குகைகளில் வாழ்ந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் ஊர் சுற்றும் பயணத்தைத் தொடர்ந்தார். 

ஒரு புத்தர், ஒரு யானை, ஒரு ஆமை!

குமார், இந்தப் பயணத்துக்கு ஒரு சைக்கிள், ஒரு செல்போன், சில ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் தேவையான பிற அடிப்படைகளை மட்டும்தான் வைத்திருப்பார். சைக்கிள் பயணம் என்பதால் ஒரு கிராம் கூடுதல் எடை கூட பெரும் சுமையாக மாறிப் போகலாம். ஆனால் மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர ஒரு புத்தர் பொம்மை, ஒரு யானை பொம்மை, ஒரு ஆமை பொம்மையையும் குமார் பையில் எல்லா பயணங்களின் போதும் வைத்திருப்பார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், குமார் மேற்கொண்ட முதல் இந்தியப் பயணத்துக்கு எதேச்சையாக பேருந்தை மட்டும் பயன்படுத்தியுள்ளார்.  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு நீண்ட அந்தப் பயணத்தில் பல்வேறு மனிதர்களிடம் பேசியும் உறவாடியும் பல இடங்களுக்குச் சென்றுள்ளார். தான் சந்தித்த மனிதர்கள் சொன்ன கதைகளை வைத்து பல புதுமையான இடங்களுக்குப் போனாலும், அவரே அறியாமல் ஏதாவது ஒரு புத்தர் கோயில் அவர் கண்ணுக்குத் தென்பட்டுவிடும். இப்படி குமார் இறங்கித் தேடிப் போகும் இடத்தில் புத்தர் ஆழ்ந்த தியானத்தில் சிலையாக அமர்ந்திருந்த சம்பவங்களே அதிகம். இதனாலேயே புத்தருக்கு அந்தப் பையில் ஒரு இடம். குமாரைப் பொறுத்தவரை அவரைத் துரத்தும் ஒரு நண்பர் புத்தர். இதனால் புத்தர் மீது குமாருக்குத் தீராக் காதல் ஒட்டிக் கொண்டுவிட்டது. 

யானை கதை! 

அவர் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணத்துக்கு முன்னோட்டமாக, அண்மையில் தென் தமிழக எல்லையில் யானைகளைக் காண வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளுடன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார் குமார் ஷா. அப்போது சில நாள்களில் அவர், வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி 200 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில் கடந்திருக்கிறார். அந்தப் பயணத்தின் இடையில் முதுமலை யானைகள் பண்ணையைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு எண்ணிலடங்கா யானைகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. யானை கூட்டத்தில் ஒன்றுக்கு மட்டும் ஆண்குறி விறைப்பாக இருந்துள்ளது. அதைச் சுற்றிலும் பெண் யானைகள். காலில் சங்கிலி கட்டப்பட்டிருந்த அந்த ஆண் யானையால் ஒன்றுமே செய்ய முடியாமல் மற்ற யானைகளை முறைத்துக் கொண்டிருந்தது. யானைகளைப் பார்க்க வேண்டுமென்று ஆர்வத்தோடு வந்த குமாருக்கு இந்தக் காட்சி மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. மிகுந்த வெறுப்புடன் சைக்கிளை மிதிக்கத் தொடங்கியவர், கேரளாவில் உள்ள கோடநாடு வருகிறார். அந்த அழகான காலைப் பொழுதில், ஏரித் தண்ணீர் பளிங்கு நிறத்தில் இருந்துள்ளது. அப்போது தூரத்தில் மூன்று யானைகள். தண்ணீர் குடிக்க வருகின்றன. யானையைப் பார்த்த குமார், அங்கிருந்து சென்னையை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். "எத்தனையோ இடங்களில் யானைகளைப் பார்த்திருந்தாலும், ஏரியில் நீர் பருக வந்த யானைகளைப் பார்த்த அனுபவம் எதற்குமே ஈடாகாது" என நெகிழ்கிறார் குமார். 

ஆமை கதை! 

யானைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்து சில நாள்களில், நண்பர் ஒருவரிடமிருந்து போன் வருகிறது. பெசன்ட் நகர் பகுதிக்கு வருமாறு அழைப்பு. அங்கு கிட்டத்தட்ட 400 ஆலிவ் ரிட்லி ஆமைகளை ஒன்றாகக் கடலில் விடும் நிகழ்வுக்காகத்தான் குமாரை அழைத்திருக்கிறார் நண்பர். ‘இந்தியப் பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடியுமா?’ எனக் குமார் குழம்பிக் கொண்டிருந்த நேரம் அது.

கடற்கரையில் விடப்பட்ட ஆமைகளில் ஒன்று கடலை நோக்கி வேகமாக விரைகிறது. குமாரின் கவனத்தை அந்த ஆமை ஈர்க்கிறது. அது மட்டுமே இப்போது குமாரின் சிந்தனையில் நிறைந்துள்ளது. இந்தியப் பயணத்தை சைக்கிளில் மேற்கொள்ள துணிவு குமாருக்கு இங்கிருந்துதான் பிறக்கிறது. ‘அந்த ஆமை என்னைப் பார்த்து, ‘என் அப்பா யாரென்று கூட எனக்குத் தெரியாது. என் அம்மா எங்கிருந்தோ வந்து என்னை இங்கு பெற்றடுத்துவிட்டு மறைந்துவிட்டாள். இப்போது என் சொந்த இடத்தைத் தேடி இந்தப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். இது ஒரு பெரிய கடல். இது என்னை அச்சுறுத்துகிறது. ஆனால் இது என் கனவு’ என்று கூறிவிட்டு கடலில் முதல் அடியை எடுத்து வைத்தது. அது இன்னும் சில அடிகள் எடுத்து வைத்து கடலுக்குள் சென்ற உடன் பின்னால் ஒருவர், ‘400 ஆமைகளை விட்டுருக்கோம். ஆனா, ஒரு சிலது மட்டும்தான் பொழச்சு பெருசாகும். மத்ததெல்லாம் போற வழியிலேயே இறந்திடும்’ எனக் கவலையோடு பேசினார்.' நான்தான் அந்த ஆமை. கடல்தான் இந்தியா. இந்தப் பயணம் என்னை அச்சுறுத்துகிறது. ஆனால் இது என் கனவு’ எனக் குமார் தீர்க்கமாக முடிவெடுத்ததும் இந்த இடத்தில்தான். 

"எதற்காக இந்த சைக்கிள் பயணம்?" எனக் குமாரிடம் கேட்டோம். "எந்தவித அடையாளமும் இல்லாமல்தான் வாழ விரும்புகிறேன். ஆனால், ஏதோ ஒரு அடையாளத்தில் இருந்தே ஆக வேண்டுமென்று இந்தச் சமூகம் வற்புறுத்துகிறது. அதற்காகவே என்னை, 'ஒரு கதைசொல்லி' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். கதைசொல்லி என்று கூறிக் கொண்டாலும், உண்மையில் நான் கேட்கும் கதைகள்தான் அதிகம். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன் என்றால் ஏதாவதொரு கிராமத்து முனையில் இருக்கும் டீ கடையில் நிறுத்துவேன். நான் ஒரு டீ வாங்கிவிட்டு அங்கு அமர்ந்திருக்கும், இன்னொரு நபருக்கு ஒரு டீ வாங்கி கொடுத்துவிட்டு பேச ஆரம்பிப்பேன். ஒரு சில நொடிகளில் அவரிடமிருந்து கதைகள் கொட்டும். பெரும்பாலும் அந்த ஊரைப் பற்றிய கதைகள்தான் அதிகம் இருக்கும். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சொல்லப்படாத கதை இன்னும் எத்தனை கோடி இருக்கிறதென்றே எண்ண முடியாது. அந்த டீ கடையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நபர் சொல்லும் கதைக்காகத்தான் இந்தப் பயணம் தொடர்கிறது" என்றவர், "என் கதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவற்றை நம்பித்தான் என் வாழ்க்கை இருக்கிறது. எல்லா தேவைகளுக்கும் என் கதைகளைத்தான் நம்பி இருக்கிறேன். நிறைய பள்ளிகளில் கதைசொல்லும் வகுப்பெடுக்க என்னை அழைக்கிறார்கள். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து எல்லாம் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூப்பிடும் ஒரே காரணத்துக்காக, நானும் பயணம் செய்கிறேன். வகுப்பை முடித்தப் பிறகு அவர்கள் என்ன கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு திரும்பிவிடுவேன். என் பணத் தேவைகள் எப்படியாவது பூர்த்தியாகிக் கொண்டுதான் இருக்கிறது" என்றார் சிரித்தபடி. 

இந்த ஆண்டு ஆளியார் நண்பர்கள் உதவியுடன் 'டிராவல் ஸ்கூல்’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் குமார். அனைத்து வயதினரும் சேர வாய்ப்பிருக்கும் இந்தப் பள்ளியை தொடர்ச்சியாக நடத்துவதுதான் அவரின் தற்போதைய திட்டம். கூடவே, கதை சொல்வதில் ஆர்வமிருக்கும் ஆசிரியர்களை இணைத்து, வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். அவர்கள் மூலம் மாணவர்களிடம் பயணத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதன்மூலம், பல நூறு குழந்தைகளுக்குக் கதைகள் சென்று சேர்கின்றன. இது ஒரு சங்கிலித் தொடர் போல, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

கதைசொல்லிகள் மறைந்தாலும் கதைகள் மறைவதில்லை! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement