Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 ஸ்ட்ரோக் பைக்குகளில், யமஹா பெஸ்ட்... அதிலும் RX100-லாம் சான்ஸே இல்லை... ஏன்?

`2 ஸ்ட்ரோக்'. இதைக் கேட்டவுடன் பலரின் நினைவுகள், 1980-களை நோக்கிச் செல்லும். அப்போது இளையராஜாவின் பாடல்களைத் தவிர, யமஹா RX100 & RD350, சுஸூகி மேக்ஸ் 100R & ஷோகன், யெஸ்டி & ராஜ்தூத் பைக்குகளும் ட்ரெண்டிங்கில் இருந்தன. அந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கே உரிய நீல நிறப் புகை மற்றும் ஸ்பெஷலான எக்ஸாஸ்ட் சத்தம் அப்போதும் இப்போதும் எப்போதுமே பைக் ஆர்வலர்களின் ஊக்கத்தை இரட்டிப்பாக்கிவருகின்றன. அந்த பைக்குகளை ஓட்டும்போது கிடைக்கும் பரவச அனுபவத்தை, அந்த பைக்கை ஓட்டியவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உலகளவில் ஏற்பட்ட கடுமையான மாசுக் கட்டுப்பாடு விதிகளால் தன் இருப்பிடத்தை இழந்திருந்த 2 ஸ்ட்ரோக் தொழில்நுட்பத்தை, கேடிஎம் நிறுவனம் உயிர்ப்பித்திருக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க பொருள்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு,  இன்றைய மில்லினியல் யுகத்திலும் யூஸ்டு பைக் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதால், எந்த நிலையில் பைக் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் அவற்றைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்க இதன் ரசிகர்கள் எப்போதுமே தயார்! அவ்வளவு ஏன்? இன்னும் சில ரேஸ்களில் 2 ஸ்ட்ரோக் பைக்குகள் பயன்படுத்தப்படுவதே அதன் தரத்துக்கும் மங்காத புகழுக்கும்தான்! இந்தியாவில் பைக்குகளின் பொற்காலம் எனக் கூறப்படும் 1980-1990களில் அதிகம் விற்பனையான 2 ஸ்ட்ரோக் பைக்குகளை, மீண்டும் திரும்பிப் பார்ப்போமா? 

யமஹா RD350

யமஹா RD350

`பைக் என்றால் அதிக மைலேஜ் தரவேண்டும்' என்ற எண்ணம், மக்களிடையே பரவிக்கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த `பெர்ஃபாமன்ஸ் பைக்'தான் RD350. ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் ஜாவா யெஸ்டி ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக 1983-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை இந்தியாவில் இந்த பைக் விற்பனையானது. ஜப்பானிய நிறுவனமான யமஹாவிடமிருந்து அனுமதிபெற்ற எஸ்கார்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் இதைத் தயாரித்தது. அதாவது, ஜப்பானில் யமஹா 350B என்ற பெயரில் விற்பனையான பைக்தான், இந்தியாவுக்கு ஏற்ற சின்னச் சின்ன மாற்றங்களுடன் `RD350' என்ற பெயருடன் விற்பனைக்கு வந்தது. அதன் பெயரில் இருக்கும் RD-க்கு, Rajdoot என அர்த்தம் சொன்னாலும், அதன் உண்மையான விரிவாக்கம் `Race Developed'. அதற்கேற்ப ஆறு ஸ்பீடு கியர் பாக்ஸ், 7-Port 2 ஸ்ட்ரோக் அலுமினியம் இன்ஜின், பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு, இரண்டு சைலன்ஸர், இரண்டு கார்ப்பரேட்டர் என RD350-ன் இன்ஜின் என அந்தக் காலத்தில் மிகவும் மாடர்னான தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தது. 0 - 60 கி.மீ வேகத்தை, நான்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டக்கூடிய அந்த பைக், மிரட்டலான பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர்பெற்றது.

yamahaRD350

அதற்கேற்ப இந்த பவர்ஃபுல் பைக்கின் மைலேஜ் மிகவும் சுமாராகவே இருந்தது. இந்தக் குறைபாட்டைக் களையும்விதமாக, ‘HT’ (High Torque - 30.5bhp) & ‘LT’ (Low Torque - 27bhp) எனும் இரு வேரியன்ட்களில் வெளிவந்தது RD350. ஆனால், பைக்கின் விலையைக் கட்டுக்குள்வைக்க, இருபுறமும் 7'' டிரம் பிரேக்குகளையே பொருத்தியிருந்தது யமஹா. இதனால் 150 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய பைக்காக இருந்தாலும், திறன் குறைவான பிரேக்குகள் இருந்ததால், அனுபவமற்றவர்கள் இந்த பைக்கை ஓட்டும்போது ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. பைக்கர்கள் மத்தியில் அழியாப் புகழைப் பெற்றிருக்கும் RD350, யூஸ்டு பைக் மார்க்கெட்டில் அதிகப்படியான விலை மற்றும் டிமாண்டைப் பெற்றிருக்கிறது. 1983-ம் ஆண்டில் அறிமுகமானபோது புத்தம் புதிய RD350 பைக்கின் விலை வெறும் 18,000 ரூபாய் மட்டுமே! 27 ஆண்டுகள் முதல் 34 ஆண்டுகள் வரையிலான இந்த பைக்குகளின் தற்போதைய விலை, சுமார் 1.50 லட்சம் ரூபாயிலிருந்துதான் தொடங்குகிறது. அதுவும் பைக் நல்ல கண்டிஷனில் இருந்தால் 2.5 லட்சம் ரூபாய் வரை விலைபோவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆனால், இப்போதைக்கு இந்த பைக்கை வைத்திருப்பவர்கள் எவரும் அதை விற்பதற்குத் தயாராக இல்லை. தவிர, இந்த பைக்கை வாங்கியவுடன் பலர் செய்யும் முதல் விஷயம், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கை மாட்டுவதுதான்!

யமஹா RX100

யமஹா RX100

குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் சிக்கல் இல்லாத இன்ஜின் ஆகியவற்றால் புகழ்பெற்றிருந்த சுஸூகியின் AX-100 பைக்குக்குப் போட்டியாக, யமஹா அறிமுகப்படுத்திய பைக்தான் RX100. இரண்டுமே 100சிசி திறன்கொண்டவையாக இருந்தாலும், குணத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தன என்பதே உண்மை. 100சிசி-யில் ஒரு கம்ப்யூட்டர் பைக்காக சுஸூகி AX-100 இருந்தது என்றால், 100சிசி-யில் ஒரு பெர்ஃபாமன்ஸ் பைக்காக யமஹா RX100 இருந்தது. RD350 பைக்கைத் தொடர்ந்து RX100 பைக்கை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றது எஸ்கார்ட்ஸ் நிறுவனம். எனவே, ஜப்பானில் விற்பனையான RX100 பைக்கின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அசம்பிள் செய்யப்பட்டு இங்கு விற்பனைக்கு வந்தது RX100. அப்படி ஆரம்பகாலங்களில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் இன்ஜின் கேஸில், `Made In Japan' எனப் பதியப்பட்டிருக்கும். 11 bhp பவருடன் அட்டகாசமான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்திய இந்த பைக்கின் இன்ஜின், அளவில் 98சிசிதான் என்பதையே பலர் நம்ப மறுத்தனர். இன்னும் சொல்லப்போனால், 100சிசி-யில் 100 கி.மீ வேகம் செல்லக்கூடிய ஒரே பைக் இதுதான் மக்களே!

yamahaRX100

அதற்கேற்ப RX100 பைக்கிலும் 7-Port 2 ஸ்ட்ரோக் அலுமினியம் இன்ஜின், பராமரிப்பே தேவைப்படாத எலெக்ட்ரானிக் இக்னீஷன், இன்டேக் போர்ட்டில் Reed Valve போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. 1984-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட இந்த பைக், நாட்டில் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு 135சிசி இன்ஜின் - ஐந்து ஸ்பீடு கியர் பாக்ஸுடன், RX-G மற்றும் RX-Z எனும் இரு வேரியன்ட்களில்  RX100-ன் அடுத்த தலைமுறை மாடல் வெளிவந்தது. இதில் டேக்கோமீட்டர், டிஸ்க் பிரேக், பிகினி ஃபேரிங், ஃப்யூல் கேஜ், இன்ஜின் கில் ஸ்விட்ச் என மாடர்ன் வசதிகள் இருந்தாலும், குறைவான பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் காரணமாக இரண்டுமே RX100 அளவுக்கு இந்தியச் சந்தையில் வெற்றி பெறவில்லை. இறுதியாக, 2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை விற்பனையான RX135 பைக்கில், நான்கு ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. உடனடி பிக்கப், சுலபமான கையாளுமை, குறைவான எடை, காம்பேக்ட் சைஸ், பொறி பறக்கும் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் இன்ஜின் ஆகியவை இந்த பைக்கின் பிரதானக் காரணிகள்.

2 ஸ்ட்ரோக்

இன்று யமஹா பைக்குகளைப் பற்றிப் பார்த்துவிட்டோம்... நாளை சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளைப் பற்றிப் பார்ப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close