Published:Updated:

பூச்சூட்டு விழாவில் பெண்ணுக்கு விதைப் பொட்டலம் கொடுத்த மாப்பிள்ளை விவசாயி

பூச்சூட்டு விழாவில் பெண்ணுக்கு விதைப் பொட்டலம் கொடுத்த மாப்பிள்ளை விவசாயி
பூச்சூட்டு விழாவில் பெண்ணுக்கு விதைப் பொட்டலம் கொடுத்த மாப்பிள்ளை விவசாயி

பூச்சூட்டு விழாவில் பெண்ணுக்கு விதைப் பொட்டலம் கொடுத்த மாப்பிள்ளை விவசாயி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பூச்சூட்டும் விழாவில் மணப்பெண் ராஜலெட்சுமிக்கு நவதானிய விதைப்பொட்டலத்தைக் கொடுத்து விதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் நம்மாழ்வார் ஐயாவிடம் பயிற்சி பெற்ற இயற்கை விவசாயி மாப்பிள்ளை கருப்பசாமி.

கருப்பசாமியிடம் பேசினோம், ‘’விவசாயிக்கு மூலதனமே விதைதான். அதனாலதான் விதையை விதை..ன்னு சொல்லாம ’விதை முதல்’னுதான் சொல்லுவாங்க. பழங்காலத்தில் நாடே கடும்பஞ்சத்துல இருந்த நிலையில் மூட்டை மூட்டையாக விதைநெல் இருந்தும்கூட அதை அரிசியாக்கி சாப்பிட்டு பசியாற நினைக்காமல், அடுத்த தலைமுறையினருக்கு விதைக்காக விட்டு பசியைத் தாங்கிக்கொண்டவர்கள் நம் தமிழர்கள். ஊரே வெள்ளத்தில் அடித்துச் சென்றால்கூட விதைப்புக்காக விதை தேடி அலையக்கூடாது என்பதற்காகத்தான் கோயில் கோபுர கலசங்களில் விதைகளைப் பாதுகாப்பாக வைத்தார்களாம்.

அப்படிப்பட்ட விதையை வீடுகளில் சேமித்து வைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களிடம்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள்தான் தானியக்குதிர்கள், மண்பானைகளில் சேமித்து வைத்துள்ள விதைகளை எடுத்து அவ்வப்போது வெயிலில் காயவைத்து அடுத்த நாள் மீண்டும் எடுத்து சேகரித்து வைப்பார்கள். விதைப்பு நேரத்தில் பெண்களே விதைகளை எடுத்து நிலத்துக்கு ஓலைப்பெட்டியில் எடுத்து வந்து வழிபாடு செய்த பின்னரே விதைப்புக்காக கணவனிடம் விதையை ஒப்படைப்பார்கள். பெண் என்றால் ’குலவிருத்தி’ என்பதால்தான் விதைசேமிப்பு பொறுப்பு பெண்ணிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பொறுப்பு பசுமை புரட்சிக்குப் பிறகுதான் பன்னாட்டு விதைநிறுவனங்கள் கைகளுக்குப் போய்விட்டதால்தான் இன்று விதைக்காகக் கையேந்தி நிற்கிறோம். கடந்த 6 வருசமா மானாவாரியில் இயற்கைமுறையில் விவசாயம் செய்து சேகரித்து வைத்திருந்த விதைகளை எனக்குப் பின், என் மனைவி என்பதால் விதைசேகரிக்கும் பொறுப்பை வருங்கால மனைவியிடம் ஒப்படைக்கணும்னு நினைச்சுதான் திருமண உறுதி செய்யும் பூச்சூட்டு விழாவில் எனது மண்ணில் விளைந்து நான் பாதுகாத்து வைத்த குதிரைவாலி, தினை, சிவப்புசோளம், வரகு, துவரை, உளுந்து, பாசி, தட்டை, கம்பு ஆகிய நவதானிய விதைகளைத் துணியில் பொட்டலமாகக் கட்டி சிறிய மண்கலயத்துக்குள் வைத்து ஒப்படைச்சுட்டேன்.

விதைப் பொட்டலங்களை சந்தோசமா வாங்கிக்கிட்ட ராஜலெட்சுமி, ''இனி விதை பாதுகாப்பும், இயற்கை விவசாய பணியும் உங்களுடையதல்ல நம்மளுடையது’’ என்று சந்தோசத்துடன் சொன்னார். திருமணத்துக்குப் பின் புரட்டாசி பட்டத்தில் இருவரும் சேர்ந்து தானிய விதைகளை விதைக்கப்போகிறோம்’’ என்றார் கருப்பசாமி.

அடுத்த கட்டுரைக்கு