Published:Updated:

''நான் இப்போ கல்யாணப் பொண்ணு!'' - மகிழ்ச்சிப் பூரிப்பில் இரோம் ஷர்மிளா

''நான் இப்போ கல்யாணப் பொண்ணு!'' - மகிழ்ச்சிப் பூரிப்பில் இரோம் ஷர்மிளா
''நான் இப்போ கல்யாணப் பொண்ணு!'' - மகிழ்ச்சிப் பூரிப்பில் இரோம் ஷர்மிளா

''நான் இப்போ கல்யாணப் பொண்ணு!'' - மகிழ்ச்சிப் பூரிப்பில் இரோம் ஷர்மிளா

ணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளாவுக்குத் திருமணம். தனது திருமணத்துக்கான விண்ணப்ப மனுவை இன்று கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அளித்தார் அவர். மனுவைப் பெற்றுக்கொண்ட சார் பதிவாளர் ரமேஷ், இந்தியத் திருமணச் சட்டத்தின்படி, 30 நாள்கள் அலுவலக பலகையில் விண்ணப்பம் ஒட்டப்பட்டு, ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார். காதலருடன் ஷர்மிளாவை ஜோடியாகக் கண்ட கேமரா கண்களுக்கும் மகிழ்ச்சி.  

பத்திரிகையாளர்களைச் சந்தித்த இரோம் ஷர்மிளா, ''நான் போராட்டக் களத்தில் இருந்து, குடும்ப வாழ்க்கையில் நுழைய இருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தைக் கொடைக்கானலில் எளிமையான முறையில் நடத்த இருக்கிறோம். திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலில்தான் வசிக்கப்போகிறோம். இங்கு நிலவும் அமைதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சராசரி பெண்ணாக வாழ ஆசைப்படுகிறேன். குடும்ப வாழ்க்கையில் நுழைந்தாலும், மீண்டும் போராட்டக் களத்துக்கு வரத் தயங்கமாட்டேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தேவைப்படும்பட்சத்தில் எனது போராட்டத்தைத் தொடர்வேன். காரணம், ஐ லவ் மை பீப்பிள். இனி, துப்பாக்கிக் கலாசாரம் எடுபடாது. அகிம்சை வழியிலான போராட்டங்கள்தான் வெற்றி பெறும்.

எனது போராட்டங்கள் அறவழியிலானதாகத்தான் இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட தார்மீக உரிமையிருக்கிறது. நான் என் மக்களுக்கான போராட்டத்தை எப்போது வேண்டுமானாலும் முன்னெடுப்பேன். வரும் செப்டம்பர் மாதம் புவனேஸ்வரில் நடக்கும் தெற்காசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதன் பிறகு, சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன். இப்போது நான் திருமணப் பெண். அந்தப் புது வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கக் காத்திருக்கிறேன்'' என்றார்.

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2000 ஆண்டு முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட ஷர்மிளா, 16 வருடங்களுக்குப் பின் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார். அவருடைய நீண்டநாள் காதலர், டேஷ்மாண்ட் கௌடின்ஹோ. பிரிட்டிஷ் குடியுரிமை கொண்டவர் எனினும், கோவாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஷர்மிளா சிறையில் இருந்த வருடங்களிலும் இவர்களின் காதல் உயிர்ப்புடன் இருந்தது. இந்தக் காதலுக்கு எதிர்ப்பும் வலுத்தது. ஷர்மிளாவின் காதலை மணிப்பூர் மக்கள் ரசிக்கவில்லை. அவரை அரசியல் தியாகியாக மட்டுமே அவர்கள் பார்க்க விரும்பினார்கள். எனவே, அவரது காதலை எதிர்த்தனர். 'வாழும் பெண் காந்தி' என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஷர்மிளாவை, அவர் தனது நோக்கத்தில் இருந்து திசைமாறிச் செல்வதாக விமர்சிக்க வைத்தது அவரின் காதல். 

இந்நிலையில், உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்ட ஷர்மிளா, மணிப்பூர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாகவும், தேர்தலுக்குப் பின் தனது திருமணம் நடக்கும் என்றும் அறிவித்திருந்தார். மணிப்பூர் தவுபால் தொகுதியில் முதலமைச்சர் வேட்பாளரை எதிர்த்து நின்ற ஷர்மிளா, 90 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். அந்த இரும்புப் பெண் தன் போராட்டத்துக்கும், தியாகத்துக்கும், இழந்த வாழ்வுக்கும் வயதுக்கும் நியாயம் கிடைக்காத துயரையும் உலர்ந்த புன்னகையுடன் கடக்கப் பழகினார். 

தற்போது ஷர்மிளாவுக்கு 45 வயதாகிறது. அவருக்காக இத்தனை காலம் காத்திருந்த டேஷ்மாண்ட், தங்கள் காதலின் உறுதியையும் உன்னதத்தையும் தன் மௌனத்தில் உரைத்தபடி ஷர்மிளாவின் அருகில் அமர்ந்திருக்கிறார். தனக்கான வாழ்க்கையை இன்னும் சில நாள்களில் வாழ ஆரம்பிக்கவிருக்கிறார் ஷர்மிளா. 

மகிழ்ச்சியும் வாழ்த்தும் பெண்ணே!

அடுத்த கட்டுரைக்கு