Published:Updated:

அழுதுகொண்டிருக்கும் சிற்றாறு - ஒரு அவலக் கதை

அழுதுகொண்டிருக்கும் சிற்றாறு - ஒரு அவலக் கதை
அழுதுகொண்டிருக்கும் சிற்றாறு - ஒரு அவலக் கதை

அழுதுகொண்டிருக்கும் சிற்றாறு - ஒரு அவலக் கதை

சிற்றாறு, மேற்குத் தொடர்ச்சி மலையின் மணியாரம் என்று அழைக்கப்படுகிறது. சிற்றாறு என்றால் உங்களுக்கு தெரியுமோ என்னவோ, குற்றாலத்தில் அருவியாக விழும் நீர்தான் சிற்றாறு. 80 கிலோமீட்டர்கள் ஓடும் இந்த ஆறு, தாமிரபரணியின் முக்கியத் தோழமை நதி. உப்போடை, ஐந்தருவி ஆறு, ஹரிஹர நதி, அனுமன் ஆறு, அழுத கன்னியாறு என ஐந்து துணை நதிகளைக்கொண்டே சிற்றாறு பெருகி, சீவலப்பேரி அருகே தாமிரபரணியோடு கலக்கிறது. 17 அணைக்கட்டுகள் இந்த சிற்றாற்றின் மீது கட்டப்பட்டு, விவசாயம் செழிக்க உதவுகிறது. சிற்றாற்றின் நீர் வரத்தால், நேரடியாக 2,000 ஹெக்டேர் நில விவசாயமும், கால்வாய், குளங்கள் வழியாக 7,500 ஹெக்டேர் நில விவசாயமும் நடைபெறுகிறது. சரி, இந்தத் தகவல்கள் எல்லாம் எதற்கு என்கிறீர்களா... வருகிறோம் விஷயத்துக்கு.

ஆர்ப்பரிக்கும் அழகிய அருவிகளாக குற்றாலத்தில் விழும் இந்த சிற்றாறு, பல மூலிகைகளின் சாறுகளைப் பெற்று, ஆரோக்கியமாகத்தான் பிறக்கிறது. குற்றாலத்தில்தான் இது சீரழிவைச் சந்திக்கிறது. ஆம், குற்றாலம் என்ற உல்லாசப் பயண இடத்தில்தான் தனது உல்லாசத்தை இழக்கிறது இந்த அருவி. பல லட்சம் மக்களை ஒரு ஆண்டில் சந்திக்கும் இந்த ஆறு, சோப்பு, ஷாம்பு, பிளாஸ்டிக் கழிவு, எண்ணெய் அழுக்கு, பழைய துணிகள் எனப் பல வகைகளில் மாசு அடைகிறது. மூலிகை வாசனையோடு கீழே வரும் சிற்றாறு, கழிவுகளின் ரசாயனத் தாக்குதலால் குடிக்கவோ, குளிக்கவோ, விவசாயத்துக்கேகூட  லாயக்கு இல்லாமல் மாறி வருகிறதாம். கழிவுகளால் காரத்தன்மை அதிகமான இந்த ஆற்றில், நீர் வாழ் உயிரினங்கள் மெள்ள மெள்ளஅழிந்துவருகின்றன. இந்த நீர் பாயும் நிலங்கள் பாழ்பட்டுவருகின்றன. இந்த நீரை அருந்தும் மக்கள், நோய்களின் கிடங்காக மாறிவருகின்றனர். கால்நடைகள் இந்த நீரை அருந்துவதால், மலடாக மாறுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. இது, பயமுறுத்த சொல்லப்படவில்லை. உண்மையிலேயே நடந்துகொண்டுடிருக்கிறது. சரி, இதற்கு என்ன செய்யலாம்... குற்றாலத்தில் உடனடியாக ரசாயனக் கலப்புள்ள பொருள்களை குளிப்பதற்கு விற்பதைத் தடைசெய்ய வேண்டும். கழிவுகளை இந்த ஆற்றில் கொட்ட அனுமதிக்கக் கூடாது. நீர் தாங்கும் பகுதிகளைத் தூர் வார வேண்டும். நீர் வெளியாகும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதையெல்லாம் செய்தால், ஒரு நதியையும் அதன் வழியே இயற்கையையும் காக்கலாம். செய்வார்களா?

அடுத்த கட்டுரைக்கு