Published:Updated:

நடுகல்- நமது வீரத்தை, கலாசாரத்தை எடுத்துக் கூறும் காலத்தின் கண்ணாடி

நடுகல்- நமது வீரத்தை, கலாசாரத்தை எடுத்துக் கூறும் காலத்தின் கண்ணாடி
நடுகல்- நமது வீரத்தை, கலாசாரத்தை எடுத்துக் கூறும் காலத்தின் கண்ணாடி

நடுகல்- நமது வீரத்தை, கலாசாரத்தை எடுத்துக் கூறும் காலத்தின் கண்ணாடி

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்'  என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் அர்த்தம் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடுசெய்யப்படுகிறது. 

வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களைத் தியாகிகளாகப் போற்றிய கலாசாரம் நம்முடையது. போரில் அல்லது போரில் வெற்றிபெற நவகண்டம் என்ற பெயரில் மாய்ந்தால், தன் இனத்தைக் காக்க மடிந்தால், ஊரைக் காக்க போராடி இறந்தால், கலாசாரத்தைக் காக்க தற்கொலைசெய்துகொண்டால் என உயிரைத் தியாகம்செய்த அனைவருமே வழிபாட்டுக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் எழுப்பி வழிபட்டதை சிலப்பதிகாரம் சொல்கிறது. நடுகல் வழிபாட்டை புறநானூறு, மலைபடு கடாம் போன்ற நூல்கள் சொல்கின்றன. இதற்கும் முன்பாக, தொல்காப்பியர் நடுகல் நடுவதற்கான ஆறு அமைப்புகள் பற்றிச் சொல்கிறார். வீர அவை, காட்சி, கால்கோல், நீர்ப்படை நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என உயர்த்திக் கூறுகிறார்.

நாட்டுக்காக இறந்த தியாகியின் பெயரையும் செயலையும் பொறித்தே நடுகல் அமைப்பர். அந்தக் கல்லை நீரால் கழுவி, நெய் தடவி அல்லது மஞ்சள் தடவி, வாசனைப் புகை காட்டி, துணி சார்த்தி  விளக்கேற்றுவர். மாலை சூட்டுவர், மயிற்பீலி வீசி, காப்பு நூல் கட்டி பக்தியோடு வணங்குவர். அவரவர் குல வழக்கப்படி கிடாய் அல்லது சேவல் பலியிட்டு, சோறிட்டுப் படைப்பர். சங்கு, துடிப்பறை ஒலிப்பர், வில், வேல், வாளால் நடுகல்லைச் சுற்றி வேலி அமைப்பர். வீரனுக்கு புரவி அளித்தல். பிடித்த பொருள்களைக் காணிக்கை அளித்தல் என பலவகை சடங்குகளைச் செய்வர் என வரலாறு கூறுகிறது. நடுகல் வழிபாடு எனும் மரபுகளும் நம்பிக்கைகளும் கேலிக்குரியவை அல்ல, அவை, நமது வீரத்தை, கலாசாரத்தை எடுத்துக் கூறும் காலத்தின் கண்ணாடி. இன்றும் செங்கம், தருமபுரி பகுதிகளில் நடுகற்கள் பல காணப்படுகின்றன. ஆனால், அவை வழிபடப்படுகின்றதா என்பது கேள்விக்குறியே.

அடுத்த கட்டுரைக்கு