Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 வருட வானிலை மாற்றங்களைப் பதிவு செய்யும் ’தனி ஒருவன்’ கேட்கும் அந்த ஒரு கேள்வி!

ஒல்லியான தேகம். நீள முடி. நீண்ட தாடி. முகத்தில் பனி வெடிப்புகள். பனியின் காரணமாக அந்த முகச் சுருக்கங்கள் கருத்துப் போயிருக்கின்றன. உயரந்த அந்த மலையின் உச்சியிலிருந்து பனிச் சறுக்கு உபகரணங்களை மாட்டிக் கொண்டு, படு வேகமாகக் கீழிறங்குகிறார் அந்தக் கிழவர். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு நாடக அரங்கம். டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போய் உட்காருகிறார். மேடைத் தயாராக இருக்க, அந்தக் கிழவரைத் தவிர அங்கு வேறு யாருமேயில்லை. சரி... நாடகத்தை ரத்து செய்துவிடலாம் என்று எண்ணி நாடக இயக்குநர் அந்தக் கிழவரை நெருங்குகிறார். அவர் யாரென்று தெரிந்ததும்... புன்சிரிப்போடு கைகுலுக்குகிறார். அந்த ஒற்றைக் கிழவருக்காக அந்த நாடகம் அங்கு அரங்கேற்றப்படுகிறது. அந்தக் கிழவரின் பெயர் பில்லி பார் (Billy Barr). இந்தக் கதை அமெரிக்காவில் நடந்தது. 

பனிகளின் பாதுகாவலன் பில்லி வானிலை

அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடரில் அமைந்திருக்கிறது " கோதிக் மலை". 1973ம் ஆண்டு... அப்போது பில்லிக்கு வயது 22. கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டிருந்தார். அந்தப் பனியும், மலையும், ஈரக்காற்றும் அவருக்கு ரொம்பவே பிடிக்கும். மலையிலிருக்கும் சிறு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஒன்றிரண்டு முறை போயிருக்கிறார் பில்லி. பணம், பணம் என எப்போதும் பணத்திற்குப் பின்னால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பொதுச் சமூக வாழ்க்கை அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அந்தப் பனியின் அடர்த்தியான குளிர் அளவிட முடியாத விருப்பத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. எதையும் யோசிக்கவில்லை. மலையை நோக்கி கிளம்பிவிட்டார். 

முதலில் மலையின் அடிவாரத்தில் 8ற்கு 10 என்ற அளவில் சிறு மர வீட்டைக் கட்டினார். சில நாள்கள் கூட அதில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தளவிற்கு குளிர். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக அந்தப் பனி மலையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். மலையின் மேல் சென்று தனக்கான வீட்டை... உலகை உருவாக்கிக் கொண்டார். " பசுமை இல்லத்தை"  உருவாக்கி தனக்கான காய்கறிகளை விளைவித்துக் கொண்டார். சோலார் பேனல்களைக் கொண்டு தனக்கான மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டார். அது மட்டுமில்லாமல், தனக்குப் பிடித்த "பாலிவுட் " படங்களைப் பார்க்க சின்ன ஹோம் தியேட்டரை உருவாக்கிக் கொண்டார். இப்படியாக, தனக்குப் பிடித்த மாதிரியான உலகை தானே உருவாக்கிக் கொண்டார். 

பனி மலையில் தனியாக பில்லியின் வீடு

பில்லி ஆரம்ப காலங்களில் தங்கிய மர வீடு...

முதல் ஒரு வருடம் அந்தத் தனிமையை அவருக்குச் சரிவர கையாளத் தெரியவில்லை. அவருக்குத் துணையாக இருந்தது அந்தப் பனியும் அங்கு வரும் சில மிருகங்கள் மட்டுமே. ஒரு பேப்பர், பேனாவை எடுத்துக் கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் பனிப் பொழிவை, அந்தப் பகுதியின் வானிலையைக் குறிக்கத் தொடங்கினார். அந்தப் பக்கம் வரும் மிருகங்களின் விவரங்களையும் குறிக்கத் தொடங்கினார். ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல... நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதைச் செய்து வருகிறார் பில்லி !

40 வருடங்களாக பில்லி எடுத்த பனி குறிப்புகள்

பில்லியைச் சமீபத்தில் யதேச்சையாக சந்தித்த ஓர் ஆராய்ச்சியாளர் அவரிடம் இருந்த 40 வருடங்களுக்கான வானிலைக் குறிப்புகளைக் கண்டு அசந்துப் போய்விட்டார். அவரிடம் இருந்த குறிப்புகள் மொத்த உலகின் " வானிலை மாற்றத்தின் " அத்தாட்சியாக இருக்கிறது. பில்லியின் குறிப்புகளைக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மிருகங்கள், பறவைகள், பனிப் பொழிவு, பூமி வெப்பமயமாதல், நீர் வழித்தடங்களைக் கண்டறிவது, தண்ணீர்த் திட்டங்களை உருவாக்குவது எனப் பல துறைகளிலும் அவரின் குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

பனி மலையும், சில குறிப்புகளும்

உலகமே இன்று பில்லியைக் கொண்டாடுகிறது. ஆனால், பில்லி எதைக் கண்டும் அசராமல் தனக்குப் பிடித்த பாலிவுட் படங்களைப் பார்த்தபடியும், தொடர்ந்துக் குறிப்புகளை எடுத்தபடியும் இருந்து வருகிறார். 

" நான் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று நினைத்தெல்லாம் இந்தக் குறிப்புகளை எடுக்கவில்லை. எனக்குப் போரடித்தது. என்ன செய்வதென தெரியவில்லை... அதான் குறிப்புகளை எடுத்தேன். எனக்கு அறிவியல் தெரியாது. ஆனால், இயற்கையின் மொழிப் புரியும். நான் பார்த்த கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் வெப்பம் அதிகரித்திருக்கிறது. கால நிலைகளின் பருவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தூசு அதிகமாகியிருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் 4 அல்லது 5 டிகிரி வரை சூடு அதிகரிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், கடந்த வருடம் 36 டிகிரி வெப்பம் உயர்ந்திருக்கிறது. 

எனக்கு வாழ்வதற்கு எந்த நோக்கமும் இல்லை. நான் அடைவதற்கு எந்த லட்சியமும் எனக்கில்லை. நான் யாரென்று யாருக்கும், எதற்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் இயற்கையை நேசிக்கிறேன். இயற்கை என்னை நேசிக்கிறது. திடீரென ஒரு நாள் நான் இறந்து விடுவேன்... ஆனால், பெரும் ஆசைகளோடு வாழும் நீங்கள் இந்த பூமியின் பிரச்னையை எப்படி தீர்க்கப்போகிறீர்கள் ?, நீங்கள் ஏற்படுத்தியுள்ள காயத்திற்கு எப்படி மருந்திடப் போகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் ? " 

பனி பாதுகாவலன் - பில்லி பார்

பில்லி பார் சமூகத்தைப் பார்த்து எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு, நாம் ஒவ்வொருவருமே பதிலைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த பதில் எங்கோ வேற்று கிரகத்தில் இல்லை... அது நமக்குள்ளே தான் இருக்கிறது !!!  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close