Published:Updated:

“தாய்மொழிக் கல்வியே கற்பதை எளிமையாக்கியது!” ‘தாய்த்தமிழ்ப் பள்ளி’ பல் மருத்துவர் செம்மலர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தாய்மொழிக் கல்வியே கற்பதை எளிமையாக்கியது!” ‘தாய்த்தமிழ்ப் பள்ளி’ பல் மருத்துவர் செம்மலர்
“தாய்மொழிக் கல்வியே கற்பதை எளிமையாக்கியது!” ‘தாய்த்தமிழ்ப் பள்ளி’ பல் மருத்துவர் செம்மலர்

“தாய்மொழிக் கல்வியே கற்பதை எளிமையாக்கியது!” ‘தாய்த்தமிழ்ப் பள்ளி’ பல் மருத்துவர் செம்மலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“என் தனித்திறமைகளை வெளிப்படுத்தச் செய்து, கல்லூரியில் தனி அடையாளம் கொடுத்தது தாய்மொழி வழிக் கல்விதான்" என்று கூறும் செம்மலர், பல் மருத்துவர். ஆங்கிலம் குறித்த பயத்துடன் கல்லூரிக்குள் வரும் பலருக்கும் தன்னம்பிக்கை அளிப்பவர். இவர் தனது கல்வியைத் தொடங்கியது தாய்த்தமிழ்ப் பள்ளியில்தான். தற்போது MDS தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் பேசுவதையும் கல்வி கற்பதையும் விரும்பாத சூழல் பலரிடம் உள்ளது. ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்ததும், அதன் கையைப் பிடித்து 'அ' என்று எழுதக் கற்றுக்கொடுக்கும்போது, அந்த எழுத்துகொண்ட சொல்லை வீட்டிலும் கேட்டுப் பழகியிருந்தால், எழுதவும் எளிதாகப் பழகும். இதன் தொடர்ச்சியாகச் சிரமமின்றிக் கற்றுக்கொள்ளும். இதை மனதில்கொண்டு, குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. அப்படி மேட்டூரில் இருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கியவர்தான் செம்மலர்.

“என் அப்பாதான் பள்ளியை நடத்திவருகிறார். சின்ன வயதில் நிறையக் கூட்டங்களுக்கு அப்பாவோடு செல்வேன். அது என்ன கூட்டம் என்று நினைவில்லை. ஆனால், அங்கு ஒருவர் பேசியது வார்த்தை மாறாமல் மனதில் பதிந்துவிட்டது. 'நாம் தாய்மொழியைத் தெளிவாகக் கற்றுக்கொண்டுவிட்டால், எந்தவொரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்' என்றார். நான் அப்போது மூன்றாவதோ, ஐந்தாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சுதான் என்னை இப்போதும் வழிநடத்துகிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலான என் பள்ளிக் காலத்தில் படிப்பைத் தவிர ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி என எதையும் விடமாட்டேன். பரதநாட்டியம் என்றால், அவ்வளவு பிடிக்கும். என் விருப்பத்தைப் பார்த்த பெற்றோர், மறுப்பேதும் சொல்லாமல் நாட்டியம் கற்றுக்கொள்ள அனுப்பினார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனித் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என இன்றைய பெற்றோர்கள் பலரும் நினைக்கிறார்கள். அது தவறானது என்பதற்கு நானே ஓர் உதாரணம்.

கல்வியை ஒரு சுமையாகக் கருதக்கூடாது என்பதைச் செயல்வடிவில் தாய்த்தமிழ்ப் பள்ளி கற்றுத்தந்தது. பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில்தான் படித்தேன். பரதநாட்டியம் இடையிடையே தொடர்ந்தது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். பொதுமருத்துவப் பிரிவில் சீட்டு கிடைக்கவில்லை. பல் மருத்துவப் பிரிவை எடுத்தேன். அதற்காக, சென்னைக்கு வந்தேன். சிறிய நகரத்தைவிட்டு அதிகம் வெளியே செல்லாத எனக்கு, சென்னைக் கல்லூரி வாழ்க்கை புதிய உலகைத் திறந்து காட்டியது.

தமிழ் வழியில் படித்த நான், கல்லூரியின் முதல் வருடப் புத்தகங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியானேன். பெரிய பெரிய புத்தகங்கள். அழுகையே வந்துவிட்டது. 'இங்கே டாப்பர் ரேங்க் வாங்குவதெல்லாம் தமிழ் வழியில் படித்தவர்கள்தாம்' எனக் கூறி பெரிய பட்டியலையே தந்து, சீனியர்கள் என்னைத் தேற்றினார்கள். ஆங்கிலத்தில் படிப்பதை தமிழில் பொருள்புரிந்து மனதில் பதியவைத்துக்கொள்வேன். நான் புரிந்துகொண்டதன் அடிப்படையில் எழுதுவேன். இந்தச் சமயத்தில், கல்லூரியின் ஒரு போட்டியில் கலந்துகொண்டேன். அதிலிருந்த எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு அழைப்பு வந்துவிடும். அது பெரிய தன்னம்பிக்கையைத் தந்தது. தயக்கங்களை விரட்டியது. மருத்துவம் பயிலும் இடத்தில் சிகிச்சைக்கு வரும் எளிய மக்களிடம் மற்ற மாணவர்களைவிட என்னால் சுலபமாகப் பழகி, அவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை, தாய்த்தமிழ்ப் பள்ளியில் படிக்கும் சூழல் கிடைத்ததுதான்" என்று புத்துணர்ச்சியுடன் கூறுகிறார் செம்மலர். இவரது தம்பியும் தமிழ்வழியில் படித்து இன்று, திருச்சி, NIT ல் பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயருக்குப் படித்து வருகிறார்.

மேட்டூர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் நிறுவனரும் செம்மலரின் தந்தையுமான தமிழ்க் குரிசில் அவர்களிடம் பேசினோம். "இந்தப் பள்ளியை 1998 ஆம் ஆண்டு தொடங்கினோம். என் மகனின் பிறந்த நாளும் பள்ளியின் தொடங்கிய நாளும் ஒன்று. எங்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இன்ஷியலாகத் தந்தை, தாய் இருவர் பெயர்களின் முதல் எழுத்துகளையும் பதிகிறோம். அரசுப் பாடத்திட்டத்தை நடத்துவதோடு, பண்பாட்டுக் கல்வியையும் அளிக்கிறோம். தமிழர் கலை, மொழி, பண்பாடு தொடர்பான அடையாளங்களைத் தெரியவைக்கிறோம். சிறுவயதில் விதைப்பதைத்தானே பின்னாளில் அறுவடை செய்ய முடியும். இங்குப் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியை மிகத் தெளிவாகக் கற்றுக்கொள்ளும் அடித்தளத்தை உருவாக்கித் தருகிறோம்." என்றார்.

தாய்மொழியோடு தன்னம்பிக்கையும் வளர்த்தெடுக்கும் பள்ளிக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு