Published:Updated:

கிராம சபை ஏன்?.. எதற்கு?.. விளக்கம் தர களமிறங்கும் ‘உள்ளாட்சி உங்களாட்சி’!

கிராம சபை ஏன்?.. எதற்கு?.. விளக்கம் தர களமிறங்கும் ‘உள்ளாட்சி உங்களாட்சி’!
கிராம சபை ஏன்?.. எதற்கு?.. விளக்கம் தர களமிறங்கும் ‘உள்ளாட்சி உங்களாட்சி’!

"ஒவ்வொரு கிராமசபைக் கூட்டமும் முக்கியம். நம்ம கிராமத்து மக்களுக்கு அதைப் புரிய வச்சே ஆகணும். கிராமசபைக் கூட்டங்கள்ல, அவங்க ஒண்ணுகூடி நிறைவேத்துற தீர்மானம் ஒவ்வொரு கிராமத்தோட வளர்ச்சிக்கும் முதுகெலும்பு மாதிரி. ஆனா, கிராமசபைக் கூட்டங்களோட அவசியம் என்னன்னு பலருக்குத் தெரியமாட்டேங்குது. அந்தக் கூட்டங்கள் வெறும் சம்பிரதாயமாவே நடந்துட்டு இருக்கு. நம்ம கிராமத்து மக்கள நேரில் சந்திச்சு கிராமசபைக் கூட்டங்கள் பத்தியும், அதனால ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் பத்தியும் எடுத்துச் சொல்லப்போறோம்" என நம்பிக்கை மிகுந்த  வார்த்தைகளை உதிர்க்கிறார் ‘உள்ளாட்சி உங்களாட்சி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்கள், சென்ற வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து காலியாக இருக்கின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை. பல ஊராட்சிகளுக்கு  ஒரேயொரு சிறப்பு அலுவலர் இருப்பது போன்ற காரணங்களால் உள்ளாட்சிப் பணிகள் கடும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன. மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட முட்டிமோத வேண்டிய நிலை இருக்கிறது. 'குடிநீர் பிரச்னை', 'டாஸ்மாக் கடைகள் திறக்கும் பிரச்னை' என தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் விழிபிதுங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடக்க இருக்கின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 12,524 கிராமங்களில், கோடிக்கணக்கான மக்கள்  பங்கேற்கும் இந்தக் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. வெறும் கண்துடைப்பிற்கான கூட்டமாக இவை இல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்தும் களமாக இவற்றை மாற்றுவதற்கு ஏதுவாக, கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த களமிறங்கியுள்ளது ‘உள்ளாட்சி உங்களாட்சி’ அமைப்பு. இதனுடன் 'முகவரி அறக்கட்டளை', 'தோழன் அமைப்பு', 'சட்டப்பஞ்சாயத்து இயக்கம்', 'தாம்பரம் மக்கள் குழு', 'தருமபுரி மக்கள் குழு' எனப் பல்வேறு அமைப்புகளும் கைகோத்துள்ளன.

‘உள்ளாட்சி உங்களாட்சி’ ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் பேசுகையில், "கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளையும், சீரான நிர்வாகத்தினையும் இம்மாதிரியான கிராமசபைக் கூட்டங்கள் மூலமாகவே பெறமுடியும். அடிப்படை வசதிகளுக்காக மக்கள் போராட்டம், கிராம அலுவலகம் முற்றுகை போன்ற செய்திகள் வாடிக்கையாகி விட்டன. இந்தச்சூழலில் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளமாக இருக்கும் கிராமசபைகளில் மக்கள் அதிகளவில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். மக்களிடையே கிராமசபைக் கூட்டங்கள் குறித்து விளக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும்  ஜூலை 15-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பொதுமக்களையும், சமூகப் பணியாற்றிவரும் அமைப்புகளையும், தன்னார்வலர்களையும் நேரில் சந்தித்து, கிராமசபை பற்றிய வீடியோக்கள், துண்டுப்பிரசுரங்களை அளிக்க இருக்கிறோம். கிராமசபைக் கூட்டங்கள் முடிந்த பிறகும் உங்களுக்கு உதவ சமூக அமைப்புகள் தயாராக இருக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தும் வகையிலேயே இந்தச் சுற்றுப்பயணம்” என்றார்.

கிராமசபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து மேலும் பேசிய நந்தகுமார், “கிராமத்தைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திற்காகவும் மக்கள் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரிகளோ, பஞ்சாயத்துத் தலைவர்களோ மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. பல கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதும் இல்லை. முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபைக் கூட்டங்கள் பற்றி மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இந்தக்கூட்டங்களில் முக்கியத்தீர்மானங்களாக நீர்நிலைகளைத் தூர்வாரவும், குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடவும், புதிய மதுக்கடைகள் திறக்கப்படக்கூடாது மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் சந்திக்கும் மக்களிடம் வலியுறுத்த உள்ளோம்” என்றார் நம்பிக்கையுடன்.