இந்திய வானவியலாளர்கள் கண்டறிந்த புதிய கேலக்ஸியின் பெயர்...சரஸ்வதி! #Saraswati

சரஸ்வதி

இனி ‘சரஸ்வதி’ என்பது கடவுளின் பெயரோ, அல்லது அழிந்து போன ஒரு நதியின் பெயரோ மட்டுமல்ல, ஒரு பிரமாண்ட கேலக்ஸி பெரும்கொத்தின் (Super cluster) பெயராகவும் விளங்கப்போகிறது. படங்களில் பார்ப்பதற்கு ஏதோ ஒரு பெரும் நகரத்தின் இரவு விளக்குகள் போல காட்சி அளிக்கும் இந்த நட்சத்திரக் கூட்டத்தைக் கண்டுபிடித்து, பெயரும் சூட்டியது நமது இந்திய வானவியலாளர்கள்! சுமார் நான்கு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில், 650 மில்லியன் ஒளியாண்டுகள் அளவில் இந்த ‘சரஸ்வதி' ரம்மியமாக வீற்றிருக்கிறாள் என்று ஆச்சரியப்படுத்துகின்றனர்.

அதென்ன கேலக்ஸி பெரும்கொத்து?

இப்பிரபஞ்சத்தில், நம் சூரியனைப் போன்று நட்சத்திரங்கள் பல தமக்குள் ஏற்படும் ஈர்ப்பு விசையால் ஒன்றோடு ஒன்று இணைந்து பிரமாண்ட கேலக்ஸியாக உருவாகிறது. இப்படி உருவான பல கேலக்ஸிகள் ஒன்றாக இணைந்து சூப்பர் க்ளஸ்டர் என்றழைக்கப்படும் கேலக்ஸி பெருங்கொத்தாக உருவாகிறது. நம் சூரியக் குடும்பம் பால்வெளி மண்டலம் என்னும் கேலக்ஸியின் ஓர் அங்கமாகவும், அந்த பால்வெளி மண்டலம்  ஐம்பதுக்கும் மேற்பட்ட கேலக்ஸிகளுடன் இலணியாக்கியா (Laniakea) என்னும் கேலக்ஸி பெரும்கொத்தாகத் திகழ்கிறது. இதைப் போல இந்தப் புதிய சரஸ்வதி கேலக்ஸி பெரும்கொத்தும் சுமார் 42 கேலக்ஸி கொத்துகள் சேர்ந்து ஒரு பெரிய கேலக்ஸி பெரும்கொத்தாக இருப்பதாகக் கூறுகிறார்கள் நம் ஆராய்ச்சியாளர்கள்.

சரஸ்வதி

என்ன சொல்கிறார்கள் வானவியலாளர்கள்?

இந்த ஆராய்ச்சிக் குழுவில் இருக்கும் ஷிஷிர் சங்க்யாயன், புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) பி.ஹெச்.டி மாணவர். இந்தக் கண்டுபிடிப்பு குறித்து அவர் பேசுகையில்,

“பிரபஞ்சத்தில் இந்த சரஸ்வதியை போல் பெரிய அளவில் இருக்கும் கேலக்ஸி பெரும்கொத்துகள் வெறும் நான்கு அல்லது ஐந்துதான். அதனாலேயே இந்தியா கண்டுபிடித்திருக்கும் இது வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும், இப்பிரபஞ்சத்தில் இருள் ஆற்றல் (Dark Energy) என்பது சமீபக் காலமாகத்தான் ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இதைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. இப்போது சரஸ்வதி குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் அனைத்து தகவல்களும் இறந்த காலத்தைச் சேர்ந்தவை. அதாவது இந்த இருள் ஆற்றல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் இருந்த நிலை. எனவே சரஸ்வதியை ஆராய்வதன் மூலம், இருள் ஆற்றல், பிக் பாங் மற்றும் பிரபஞ்சம் குறித்த இரகிசயங்கள் பலவற்றை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

‘சரஸ்வதி’ சில குறிப்புகள்

  1. இந்த சரஸ்வதி கேலக்ஸி பெரும்கொத்தின் எடை நம் சூரியனை விட 20 ஆயிரம் டிரில்லியன் மடங்கு அதிகம்.
  2. இது நம் பூமியில் இருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து இருக்கிறது.
  3. இது சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  4. இதனுள்ளே 42 கேலக்ஸி கொத்துகள் உட்பட 10,000 கேலக்ஸிகள் இடம்பெற்றிருக்கின்றன.
  5. இந்த ‘சரஸ்வதி’ போன்ற கேலக்ஸி பெரும்கொத்துகள் 1980களுக்கு பிறகே ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது..
  6. குறைந்தபட்சம் 10 மில்லியன் பெரும்கொத்துகள் அறியக்கூடிய பிரபஞ்சத்தில் இருந்தாலும், சரஸ்வதியை போல நான்கு அல்லது ஐந்து பெரும்கொத்துகள்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  7. ஆயிரக்கணக்கில் சூரியன்கள், கோடிக்கணக்கில் நட்சத்திரங்கள், கோள்கள், இதர அமைப்புகள், வாயுக்கள், இருள் ஆற்றல் மற்றும் அறிந்திரமுடியாத விஷயங்கள் பல சரஸ்வதியில் இருக்கலாம்.

இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி நமக்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய வானவியலாளர்களுக்குப் பூங்கொத்து நீட்டவேண்டிய தருணம் இது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!