'எந்த வரி வந்தாலும் என்கிட்ட சாப்பாடு 10 ரூபாய்தான்' - மதுரையில் ராமு தாத்தாவின் சேவை | Whichever tax may come, my food will be 10 rupees only, Madurai grand father Ramu's service

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (15/07/2017)

கடைசி தொடர்பு:11:33 (17/07/2017)

'எந்த வரி வந்தாலும் என்கிட்ட சாப்பாடு 10 ரூபாய்தான்' - மதுரையில் ராமு தாத்தாவின் சேவை

 

மதுரையில் 10 ரூபாய்க்கு மதியம் ஃபுல் மீல்ஸ் வழங்கிவரும் தாத்தாவை, விகடன் வாசகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிப்பு தட்டாது. அப்படி ஒரு சேவையைச் செய்துவருகிறார் 87 வயது ராமு தாத்தா. சலூன் கடை சைஸில் 1967-ம் ஆண்டு ஒண்ணே கால் ரூபாயில் தொடங்கிய ஹோட்டல் சேவையை தற்போது 10 ரூபாய்க்கு நடத்திவருகிறார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அவரின் கடைக்கு இல்லை என்றாலும், அவருடைய தேவையை, சேவையைப் பூர்த்திசெய்தலின்போது ஜி.எஸ்.டி வரி அவரைத் தாக்கத்தான் செய்கிறது . ராமு தாத்தா என்னதான் செய்கிறார் என நேரில் சென்று பார்த்தோம். புன்னகை மாறாமல், ``வாங்க தம்பி சாப்பிட'' என்று அழைத்தார் . அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சுக்கொடுத்தோம்...

10 ரூபாய்

``எனக்கு ஜி.எஸ்.டி பற்றியெல்லாம் எதுவும் தெரியாது தம்பி. நான் வாங்கும் சில பொருள்கள்ல விலைவாசி உசந்திருக்கு. கேட்டதுக்கு, `மத்திய அரசு ஜி.எஸ்.டி போட்டிருக்கு'னு சொன்னாங்க. வேற ஒண்ணும் தெரியாது. என் கடைக்கு யாரும் வந்து ஜி.எஸ்.டி வரி கேட்கலை. அப்படியே நான் பெரிய ஹோட்டல் கட்டி, வேற லெவல்ல சாப்பாடு போட்டாலும், என்கிட்ட என்ன வரி வசூலிச்சாலும் சாப்பாடு விலையை அதிகப்படுத்த மாட்டேன்''  என்று நெகிழ்ந்தார் .

``1957-ம் ஆண்டு  வள்ளலார்  மடத்தைப் பார்க்க, வடலூருக்குச் சென்றேன். அங்கே சேவை மனப்பான்மையோடு பலரும் தொண்டுசெய்தனர். அதைப் பார்த்தது முதல் மனதில் `இப்படியான சேவையைத்தான்  நாம செய்யணும். காசு என்ன பெரிய காசு!' என்று நினைத்தேன். இருந்தாலும் சேவை செய்ய காசு வேண்டும் அல்லவா என்று சிறிய ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.  இரண்டு ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் பல வருடங்கள் வேலைசெய்தேன். ஹோட்டலில் வேலை செய்ததால் சாப்பாடு இலவசம். சம்பளப் பணத்தை குருவிபோல் சேர்த்து, நல்ல நிலைக்கு வந்தேன். மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சின்னக் கடையைத் தொடங்கி ஒண்ணே கால் ரூபாய்க்குச் சாப்பாடு வழங்கத் தொடங்கினேன்.

மதுரை உணவு

இப்போ மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் சாப்பாடு கடை வைத்திருக்கேன். பேருந்துக்கு வரும் ஏழை பயணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் முதியவர்கள், பெரிய ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், கண் பார்வையற்றவர்கள் எனப் பல்வேறு தரப்பட்டவர்கள் கடைக்கு வந்து சாப்பிட்டுச் செல்வார்கள். மனதுக்கு சந்தோஷமா இருக்கும். இந்தச் சேவையைப் பாராட்டி போலீஸ் உயர் அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் எனக்கு நிறைய பணம் வழங்குகிறார்கள். அதைச் சேமித்து, பூங்கா முருகன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு டிரை சைக்கிள் மூலம் சாப்பாடு கொண்டுபோய் இலவசமாக உணவு வழங்குகிறோம். எனக்கு ஏழு குழந்தைகள். யாரும் இப்ப எனக்கு உதவி செய்யலை. என் மனைவி பூரணத்தம்மாள்தான் எனக்கு உதவியாக இருந்தாள். கடந்த வருடம் அவளும் மறைந்துவிட்டாள். அவள் உயிர் பிரியும்போது `ஏங்க நம்ம ஹோட்டல் சேவையை கைவிட்டுடாதீங்க' என்று சத்தியம் வாங்கியபடி கண்ணீர் வடித்தாள். அப்படியே ஓரிரு நிமிடம் ஆடிப்போனேன். அவளின் வார்த்தையைக் கேட்டு தற்போது நம் கடையில் சாப்பிட்டுச் செல்பவர்களிடம் வரும் சிரிப்பை என் பூரணத்தாள் சிரிப்பாகவே எண்ணுகிறேன். எந்த வரி வந்தாலும் நான் என் சேவையை நிறுத்த மாட்டேன். என் பூரணத்தாளை நெஞ்சு நிறைய நினைப்பேன்'' என்றார் ராமு தாத்தா.


டிரெண்டிங் @ விகடன்