Published:Updated:

‘சேரி பிஹேவியர் ’ என்று சொன்ன காயத்ரிக்கு சாரு நிவேதிதா சொல்லும் விநோத தண்டனை!

‘சேரி பிஹேவியர் ’ என்று சொன்ன காயத்ரிக்கு சாரு நிவேதிதா சொல்லும் விநோத தண்டனை!
‘சேரி பிஹேவியர் ’ என்று சொன்ன காயத்ரிக்கு சாரு நிவேதிதா சொல்லும் விநோத தண்டனை!

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, நான் சொல்வது உண்மை.  1977-ம் ஆண்டு சென்னையில் ஓர் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மில்லர்ஸ் ரோட்டில் உள்ள சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். அப்போது பக்கத்தில் உள்ள நேரு பூங்காவில் டிவி பெட்டி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டு, போய்ப் பார்த்தேன். அப்போது `வயலும் வாழ்வும்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.  அதோடு சரி, அதற்குப் பிறகு டிவி பக்கமே போனதில்லை.  நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பார்ப்பதில்லை. எந்த நிகழ்ச்சி பற்றியாவது தெரிந்துகொள்ள வேண்டியிருந்தால் மட்டும் அதை யூடியூபில் போட்டுப் பார்ப்பேன். அப்படிப் பார்த்ததுதான் அமெரிக்க `பிக் பிரதர்' நிகழ்ச்சி. மற்றபடி எந்த நிகழ்ச்சியையும் ‘லைவ்’ஆகப் பார்த்ததே இல்லை. 

1977-ம் ஆண்டுக்குப் பிறகு சரியாக 40 ஆண்டுகள் கழித்து ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்க்கிறேன் என்றால், அது `பிக் பாஸ்'தான். கான்செப்ட் அப்படி. சிறைக் கைதிக்குக்கூட பேப்பர், டிவி, நூலக வசதி எல்லாம் உண்டு. கொஞ்சம் வசதியானவராக இருந்தால், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால், சிறை அலுவலர்களே நமக்காக ஸ்பெஷலாகச் சமைத்தும் கொடுப்பார்கள். புகை, கஞ்சா, கைபேசி எல்லா வசதிகளும் கிடைக்கும்.

`பிக் பாஸ்'-ல் எதுவுமே கிடையாது.  நம்மோடு 14 பேர் இருப்பார்கள். மற்றபடி என்ன நேரம் என்றுகூடத் தெரியாது. புத்தகம் படிக்க முடியாது. பேப்பர், டிவி எதுவும் கிடையாது. வெளியுலகத் தொடர்பே இல்லை. சில கும்பகர்ணன்கள் இருக்கிறார்கள். ஒருநாளில் 20 மணி நேரம் தூங்குவார்கள். ம்ஹும். அந்த வேலை நடக்காது. பகலில் தூங்கக் கூடாது. இப்படியே நூறு நாள்கள் என்றால், பைத்தியம் பிடித்துவிடாதா? அதுதான் சவால். அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு அடிக்ட் ஆகிவிட்டேன். இப்படிச் சொல்வதால் `பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பாராட்டுகிறேன் என்று அர்த்தமல்ல. இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் சமூகம் எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இத்தனை சுலபமாக, இவ்வளவு நேரடியாக நம் சமூகச் சீரழிவு பற்றி வேறு எந்த ஊடகத்தின் மூலமும், கலைச் சாதனத்தின் மூலமும் தெரிந்துகொள்ள முடியாது.  

64 வயது வரை எந்த டிவி நிகழ்ச்சியையும் ‘லைவ்’வாகப் பார்த்திராத நானே எப்போது அடுத்த எபிசோட் வரும் எனக் காத்திருந்து பார்க்கிறேன் என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. காரணம், voyeurism. அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்க்கும் ஆர்வம். அடுத்தவர் டைரியைப் படிக்கும் ஆர்வம். தப்பு என்பதால், நம்மில் பலர் அதைச் செய்வதில்லை. ஆனால், ஒரு டிவி நிகழ்ச்சியிலேயே அதைப் பார்க்கலாம் என்கிறபோது ஆர்வம் கூடுகிறது. மேற்கு நாடுகளில் `peep show' என்பார்கள். செக்ஸ் லைவ் ஷோக்களை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது.  

`பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளைத் தடைசெய்வதால் மட்டும் சமூகத்தை நேர்செய்துவிட முடியாது. சாதியும் இனவெறியும் நம் மனதின் மூலையில் ஒளிந்துகொண்டிருக்கும்போது நிகழ்ச்சியைத் தடைசெய்வதால் ஆகப்போவது என்ன? நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் காயத்ரி என்பவர் மற்றொருவரைப் பார்த்து `சேரி பிஹேவியர்' என்கிறார். இதைப் பற்றி சமூக வலைதளங்களில் திட்டி எழுதுபவர்கள் அனைவரும் சாதி, இன உணர்வுகளிலிருந்து வெளியே வந்துவிட்டார்களா? அந்த காயத்ரி யார்?  நம்மில் ஒருவர்தான், நாம்தான் அவர் என்கிறேன் நான். பொதுவாகவே நம் சமூகத்தில் அதிகாரத்தில் இருப்பவரின் காலில் விழுகிறோம்; நமக்குக் கீழே இருப்பவர்களை ஏறி மிதிக்கிறோம். பிக் பாஸில் அதுதானே நடக்கிறது? எல்லோரும் கமல் காலில் விழுந்தார்கள். உள்ளே போனதும் தனக்குக் கீழே இருப்பவர்களை எட்டி உதைக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உதைத்ததால், அதைக் கமலும் கண்டுகொள்ளாததால் பரணி ஓடியே போய்விட்டார். தற்கொலை முயற்சியில் இறங்காததற்காக அவரைப் பாராட்டலாம்.

ஜூலி, மற்றவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் அடிமையாகிவிட்டார். உண்மையில், காயத்ரி ரகுராமை நிகழ்ச்சியிலிருந்து விலக்கி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கைதுசெய்வதல்ல அதற்குப் பரிகாரம். நம்முடைய தண்டனைமுறையே கொஞ்சம் மாற வேண்டும். ஒரு வாரம் அவர் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு சேரியில் வாழும்படி தண்டனை தர வேண்டும். அப்போதுதான் அவருக்குச் சேரியில் உள்ளவர்களும் மனிதர்கள்தான் என்பதும், பணக்காரர்களைவிட அவர்களிடம் மனிதாபிமானமும் அன்பும் மிகுந்திருக்கிறது என்பதும் தெரியவரும். மற்றபடி சிறைத் தண்டனை கொடுத்தால் அவரிடம் எந்த மனமாறுதலும் ஏற்படாது. இல்லாவிட்டால், மகாத்மாவின் `சத்திய சோதனை' புத்தகத்திலிருந்து தினம் ஓர் அத்தியாயத்தைப் படித்துவிட்டு, அவர் வீடு இருக்கும் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் வந்து அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து வாய்விட்டுப் படிக்கலாம். இரண்டு வாரம் இப்படிச் செய்ய வேண்டும். இதை சந்துரு போன்ற ஓய்வுபெற்ற ஒரு நீதிபதி மேற்பார்வையிட வேண்டும். இப்படிச் செய்தால் காயத்ரியிடம் கொஞ்சம் மனிதாபிமானம் வந்து ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

நம் `பிக் பாஸ்' எல்லாம் சும்மா ஜுஜூபி. அமெரிக்க பிக் பாஸில் அடிதடி நடந்து மூக்கு உடைந்து ஆம்புலன்ஸில் எடுத்துப் போட்டுக்கொண்டு போவார்கள். அடிதடி எப்படி ஆரம்பிக்கும் தெரியுமா? காயத்ரி போன்ற பேர்வழிகள் உலகில் எல்லா இடத்திலும் உண்டு. அமெரிக்கா என்பதால், நிகழ்ச்சியில் சில கறுப்பின மனிதர்களும் இருப்பார்கள். காயத்ரி அவர்களைப் பார்த்து, ``கருப்பிதானே, அப்படித்தான் பண்ணுவா” என்பாரா? உடனடியாக, காயத்ரியின் முகத்தில் ஒரு குத்து விடுவார் கருப்பி. அடுத்து என்ன? ஆம்புலன்ஸ்தான். இதுபோல் பல அடிதடி ரகளைகள் அமெரிக்க பிக்பாஸில் நடக்கும். அங்கே காயத்ரி போன்றோர் 15 பேரில் அதிகபட்சம் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் இங்கே, 12 பேர் அப்படி இருக்கிறார்களே? அதைத்தான் சமூகச் சீரழிவு என்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு பேர்தான் என்னைக் கவர்ந்தார்கள். கணேஷ் மற்றும் ஓவியா. கணேஷ் வாயே திறப்பதில்லை.  ஓவியா எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இரண்டு விஷயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஆரவ்விடம் ஓவியா `ஐ லவ் யூ' சொல்கிறார். அதற்கு ஆரவ் என்ன செய்ய வேண்டும்?  `எனக்கு விருப்பமில்லை. நாம் நண்பர்களாகவே இருப்போம்' எனச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் ஓவியாவிடம் பேசாமல் இருந்துவிட்டு, மற்றொருவரிடம் போய் `ஓவியா இப்படி என்னிடம் சொன்னார்' என்று சொல்கிறார். எத்தனை கேவலம் இது!  

இன்னொரு கொடுமை, கவிஞர் சினேகன் செய்தது.  மழையில் நனைந்தபடி ஓவியா `ஆட வா' என அழைத்தபோது, `சீ சீ, நான் ஏற்கெனவே குளித்துவிட்டேன்' என்றாரே, கவிஞர் இனத்துக்கே இழுக்கு ஐயா அது!  நான் முதலில் நினைத்தேன், `பெண்டாட்டிக்குப் பயப்படுகிறாரோ!' என்று.  பிறகுதான் தெரிந்தது, அவர் இன்னும் மணமாகாதவர் என்று.  “அது சரி, இப்படி இருந்தால் எந்தப் பெண்தான் துணிந்து தலையைக் கொடுப்பாள்?” என்றார் என் நண்பர்.  போகட்டும், நான் ஓவியாவின் தீவிர விசிறி ஆகிவிட்டேன்.  (`களவாணி' படத்தில் அவர் நடிப்பு!)

பிக் பாஸின் மற்றொரு பெரிய கொடுமை, பிரபலம் என்றால் தமிழ்நாட்டில் சினிமா தலைகளைத் தவிர வேறு ஆள்களே இல்லையா? சரி, நான் ஒரு லிஸ்ட் தருகிறேன்.

1. தமிழருவி மணியன்

2. இயக்குநர் பாலா ( `பிக் பாஸ்' வீட்டுக்கு அருகில் ஆம்புலன்ஸ் நிற்க வேண்டும்.)

3. சீமான்

4. ஜெ.தீபா

5. லீனா மணிமேகலை

6. த்ரிஷா (நாய்க்கு அனுமதி உண்டா?)

7. நயன்தாரா

8. நாஞ்சில் சம்பத்

9. சாரு நிவேதிதா (ஏற்கெனவே டென் டௌனிங் பப்பில் ஸால்ஸா, டேங்கோ எல்லாம் ஆடியிருக்கிறேன்)

10. சிம்ரன்

11. அர்ஜுன் சம்பத்

12. திருமாவளவன்

13. துரை முருகன்

14. மிஷ்கின்

15. மதுரை ஆதீனம்

(எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் பெயர்களைச் சேர்க்காததற்கு தொழில் போட்டி என்றோ, பொறாமை என்றோ நினைத்துவிடாதீர்கள். நீங்களே சொல்லுங்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி, கக்கன், மதர் தெரசா போன்றோர்களை மட்டுமே சேர்த்து `பிக் பாஸ்' நிகழ்ச்சி நடத்தினால், டி.ஆர்.பி ரேட்டிங் ஒரே நாளில் ஜீரோவுக்குப் போய்விடாதா?  அதனால்தான் இருவர் பெயரையும் நீக்கிவிட்டேன்.)