ஷோகன், சாமுராய், சுப்ரா, மேக்ஸ் 100... சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் கலக்கல் பைக்ஸ்! | shogun, samurai, supra, max 100. these are some of the 2 stroke master pieces from Suzuki !

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (17/07/2017)

கடைசி தொடர்பு:21:43 (17/07/2017)

ஷோகன், சாமுராய், சுப்ரா, மேக்ஸ் 100... சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் கலக்கல் பைக்ஸ்!

கால ஓட்டத்தில் மறைந்துபோனதை திடீரென ஒருநாள் காணும்போது, உள்ளத்தில் உற்சாகம் பொங்குவதை உதடுகள் காட்டிக்கொடுத்துவிடும். அதைப்போலத்தான், 2 ஸ்ரோக் பைக்குகளும்! ஒருசிலருக்கு இதன் சத்தத்தைக் கேட்டாலே உற்சாகம் கரைபுரளும். எத்தனையோ நவீனமான பைக்குகள் வந்திருந்தாலும், 2 ஸ்ட்ரோக் க்ளாசிக் பைக்குகளில் சாலையில் கெத்தாகச் செல்லும்போது, எல்லா கண்களும் நம்மீதுதான் இருக்கும். இந்த ‘ஃபன் டு டிரைவ்’ காரணத்தாலேயே எந்த நிலையில் இருந்தாலும் சரி, பழைய 2 ஸ்ட்ரோக் பைக்கை வாங்கி, அதைப் பக்காவாக ரெடி செய்து ஓட்டிக்கொண்டிருப்பவர்களை, இன்றும்கூட ஆங்காங்கே சாலைகளில் பார்க்க முடிகிறது! 

அதைத் தன் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்துப் பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவில் 1980-1990க்கும் இடையிலான பத்து ஆண்டுகாலத்தில்தான், ஜப்பான் நாட்டின் முப்பெரும் டூ-வீலர் நிறுவனங்கள் போட்டி மிகுந்த இந்தியச் சந்தையில் கால் பதித்தன. Joint Venture முறையில், இந்திய நிறுவனமான எஸ்கார்ட்ஸ் உடன் யமஹாவும், டிவிஎஸ் உடன் சுஸூகியும் கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணி, தனக்கென தனி முத்திரையைப் பதித்தது என்பதுடன், இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்தது. யமஹா பைக்குகளைத் தொடர்ந்து மற்றொரு ஜப்பானிய நிறுவனமான சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளைப் பற்றி இப்போது பார்ப்போம்!

சுஸூகி AX100

சுஸூகி AX100

இந்திய பைக் மார்க்கெட்டில், 1984-ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளான புல்லட், ஜாவா, ராஜ்தூத் ஆகியவை பெரிதாகவும் கனமாகவும் இருந்ததால், அவற்றைக் கையாள்வது கடினமாக இருந்தது. மேலும் இந்தக் காரணத்தாலேயே அந்த பைக்குகளின் மைலேஜும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே, இந்த `ஹெவி-வெயிட்' பைக்குகளை, `லைட்-வெயிட்' பைக்கான சுஸூகியின் AX100 வீழ்த்தியதுதான் முரண். இந்தியாவின் வாகனச் சந்தையில் பெரிய புரட்சிக்கு வித்திட்ட இந்த பைக்கை, அப்போது மொபெட் தயாரிப்பில் வெற்றிகரமாக இருந்த இந்திய நிறுவனமான டிவிஎஸ், ஜப்பானின் சுஸூகியுடன் இணைந்து `இந்த் சுஸூகி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. `ஓர் இந்திய நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து, முதன்முதலாகத் தயாரித்த பைக்' என்ற பெருமை இதற்கு உண்டு. 7.8 bhp பவரை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், 98.2 சிசி இன்ஜினைக்கொண்டிருந்த இந்த பைக், போதுமான பெர்ஃபாமன்ஸுடன் அதிக மைலேஜையும் சேர்த்துத் தந்ததால், மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தது! இந்த பைக்கின் இன்ஜின், காலத்தைத்தாண்டிய பல நவீன தொழில்நுட்பங்களோடு இருந்ததால், சுமார் 20 ஆண்டுகாலத்துக்கு, எந்தவித மாற்றங்களும் செய்யாமல், இந்த பைக் நம் நாட்டில் விற்பனையானது!

சுஸூகி சாமுராய்

எப்படி ஸ்ப்ளெண்டரில் இருக்கும் இன்ஜினைக்கொண்டு, ஹீரோ பல பைக்குகளைத் (HF Dawn, HF Deluxe, Splendor Pro, Splendor +, Passion Pro) தயாரிக்கிறதோ, அதைப்போலவே ஒரே இன்ஜின் - பல மாடல் பைக் என்ற உத்தியைப் பின்பற்றியது சுஸூகி. Supra, Samurai, Max 100R ஆகிய பைக்குகளை, இதற்கான சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். நாம் முன்பே சொன்னதுபோல, இந்த `லைட்-வெயிட்' பைக்கின் எடை, வெறும் 98 கிலோ மட்டுமே! இதனால் மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது, கையாள்வதற்கு மிகவும் சுலபமாக இருந்ததுடன், முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற பைக்காகவும் AX100 இருந்தது. மேலும், அப்போது விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இதன் பராமரிப்புச் செலவுகளும் மிகக் குறைவாக இருந்தது. ஜப்பானிய தயாரிப்புகளுக்கே உரித்தான தரம் மற்றும் நம்பகத்தன்மையும்கொண்ட தயாரிப்பாக, `இந்த் சுஸூகி AX100' பைக் பெயர்பெற்றது. இதன் தரத்தை எடுத்துரைப்பதுபோல, டிவிஎஸ் இதை `No Problem Bike' என்றே விளம்பரப்படுத்தியது. தவிர, இந்த பைக்கைக் காலத்துக்கு ஏற்றவகையில், சுஸூகி பலவித மாற்றங்களுக்கு உட்படுத்தியதால், விற்பனையில் தொடர்ந்து அசத்த முடிந்தது. பிறகு டிவிஎஸ்-ஸின் ரேஸிங் அணியிலும் இடம்பிடித்து, பைக் ரேஸ்களில் பல வெற்றிகள் மற்றும் கோப்பைகளைத் தட்டிச்சென்றது வரலாறு! 

சுஸூகி ஷோகன்

சுஸூகி ஷோகன்

யமஹாவுக்கு RX100 எப்படியோ, சுஸூகிக்கு ஷோகன் அப்படி; ஜப்பானிய மொழியில் `ஷோகன்' என்றால் `பாஸ்' என அர்த்தம். அதற்கேற்ப டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை, `Shogun The Boss' என்ற அடைமொழியுடனே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 7.8 bhp பவரை வெளிப்படுத்திய AX100 பைக்கின் இன்ஜினை அடிப்படையாகக்கொண்டுதான், ஷோகனிலிருந்த 108.2சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் தயாரிக்கப்பட்டது. ஆனால், புதிய Bore, Intake & Exhaust Ports ஆகியவற்றால், இது அதிக பெர்ஃபாமன்ஸை அளிப்பதுபோல வடிவமைக்கப்பட்டது. மேலும், இதன் எக்ஸாஸ்ட் பைப்பிலும், சிறிய Expansion Chamber மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரும் பொருத்தப்பட்டிருந்தன. இவை எல்லாம் ஒன்றுசேரும்போது, ஷோகனில் AX100 பைக்கைவிட சுமார் இருமடங்கு பவர் கிடைத்தது (அதாவது 14bhp)! எனவே, 0- 60 கி.மீ வேகத்தை, வெறும் ஐந்து விநாடிகளில் எட்டிப்பிடித்த இந்த பைக்கின் அதிகபட்ச வேகம், 110 கி.மீ-க்கும் அதிகம்.

 

சுஸூகி மேக்ஸ் 100

ஆக, 100சிசி RX100 பைக், 100 கிமீ வேகம் சென்றது என்றால், 110சிசி ஷோகன், 110 கிமீ வேகம் செல்லும். மேலும் இதன் எக்ஸாஸ்ட் சத்தமும் மிரட்டலாக இருந்தது. இப்படி அட்டகாசமான பிக்-அப் மற்றும் அதிரடியான டாப் எண்ட் பெர்ஃபாமன்ஸுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பைக் தயாரிக்கப்பட்டிருந்ததால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 25-40 கி.மீ வரைதான் மைலேஜ் கிடைத்தது. `All show, But No Go' என்ற கூற்றைப் பொய்யாக்கும்படியாக, பிகினி ஃபேரிங் உடனான பவர்ஃபுல் ஹெட்லைட், ஸ்டைலான இண்டிகேட்டர் மற்றும் டெயில் லைட், இன்ஜின் ஆர்பிஎம்-மைக் காட்டும் டேக்கோ மீட்டர், ஸ்போர்ட்டி பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பின்பக்க கவுல், வசதியான சீட், கில் ஸ்விட்ச் என AX100 பைக்கைவிட படு மாடர்ன்னாக இருந்தது ஷோகன். 1993 - 1998 வரை தயாரிப்பிலிருந்த இந்த பைக்கின் அப்போதைய ஆன் ரோடு விலை 44,000 ரூபாய் மக்களே! இப்போதும் யூஸ்டு பைக் மார்க்கெட்டில், கிட்டத்தட்ட அந்த விலைக்கே இது கிடைப்பதுதான், அந்த பைக்கின் அடையாளம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்