தல தோனி, கம்பேக் சி.எஸ்.கே நமக்குக் கற்றுத்தரும் 7 பாடங்கள்! #MondayMotivation | 7 Huge Lessons we can learn from Dhoni and CSK #MondayMotivation

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (17/07/2017)

கடைசி தொடர்பு:09:54 (17/07/2017)

தல தோனி, கம்பேக் சி.எஸ்.கே நமக்குக் கற்றுத்தரும் 7 பாடங்கள்! #MondayMotivation

சி.எஸ்.கே

எந்த ஒரு விஷயத்துலயும் ஜெயிச்சுட்டே இருக்கவும் முடியாது. தோத்துட்டே இருக்கவும் முடியாது. வாழ்க்கை ஒரு வட்டம். இப்படித்தான் எல்லாரோட வாழ்க்கையும் ஓடிட்டே இருக்கு. ஆனா ஒருத்தர் இந்த ரேஸ்ல இருந்து வெளியில போய்ட்டு மறுபடியும் இதே ரேஸுக்குள்ள வரும்போது மத்தவங்க கொஞ்சம் மிரண்டு போனா அவங்க கண்டிப்பா வெற்றியாளராத்தானே இருப்பாங்க?. ஆமா பாஸ்.. அப்படி கெத்தா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) டீம்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய 7 பாடங்கள் இதோ...

1. விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்!

ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் விமர்சிக்கப்படலாம்; குற்றஞ்சாட்டப்படலாம். சில நேரங்களில் உங்கள் மீதான விமர்சனம், குற்றச்சாட்டு சரியாக இருந்து அதற்கு உங்களுக்குத் தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் தண்டனைக்காலம் முடியும் வரை உங்கள் ஆதரவாளர்கள் உங்களைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும் அப்படி நடந்தால் 2 வருட தடைக்குப்பின் களமிறங்கும் சி.எஸ்.கே-வுக்கு இருக்கும் மரியாதை உங்களுக்கும் இருக்கும். அதற்கு நீங்கள் எல்லா விமர்சனங்களையும் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.

2. பலம்தான் ஆயுதம்!

ஐ.பி.எல் போட்டிகளில் எல்லா அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள்தான். ஆனால் ப்ளே ஆஃப் என்றால் சி.எஸ்.கே-வுடன் மோதும் அணி எது என்பதற்கான ஆட்டமாக அது பார்க்கப்படுவதற்கு காரணம் அந்த அணியின் தொடர்ச்சியான செயல்பாடுதான். அதே போலதான் உங்கள் செயல்பாடு தொடர்ச்சியாக இருந்தால் வருட இறுதியில் அப்ரைசலுக்கோ அல்லது தவறு என்று உங்களுக்குத் தெரிந்தாலும் பதவி உயர்வுக்கு பாஸ் சொல்வதற்கு பணிந்து செயல்படவோ வேண்டிய அவசியம் இருக்காது. பலத்தைப் பயன்படுத்துங்கள்.

3. மிஸ் செய்ய வையுங்கள்!

ஒரு வேலையில் உங்கள் தேவை இருக்கும் ஆனால் வேண்டுமென்றோ அல்லது தவறான முடிவால் நீங்கள் அந்த வேலையில் ஈடுபடமுடியாமல் போனால் நீங்கள் அந்த வேலையில் இல்லை அதனால் அந்த வேலை சிறப்பாக இல்லை என்பதை உணர வையுங்கள். உங்களை ஒரு வேலை மிஸ் செய்கிறது என்றால் அதற்கு தகுதியான ஆள் நீங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதே நிலைதான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும். கடைசி இரண்டு ஐ.பி.எல் சீஸன் டல்லடித்ததற்கு சி.எஸ்.கே இல்லாததும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

சி எஸ் கே

4. பொறாமைப்படட்டும்! 

உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் செய்யும் விதத்தைப் பார்த்து மற்றவர்களோ அல்லது போட்டியாளர்களோ பொறாமைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள். அதே விஷயம்தான் தோனிக்கும். சி.எஸ்.கேவை வழிநடத்தும் விதத்தைக் கண்டு வியந்து, இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் என் ஆடைகளை விற்றாவது தோனியை வாங்குவேன் என்று கூறியதுதான் சி.எஸ்.கே மற்றும் தோனியின் பெருமை.

5. தலைவர்களின் தலைவன் ஆகுங்கள்!

ஓர் அணி என்று இருந்தால் அதில் ஒரு தலைவர்தான் இருப்பார். ஆனால் ஓர் அணி முழுவதும் தலைவருக்கான தகுதியோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த அணியின் தலைவன் தலைவர்களை உருவாக்குகிறார் என்று அர்த்தம். தலைவனாக வேண்டும் என்பது மட்டும் லட்சியமாக இல்லாமல் தலைவர்களை உருவாக்குவது லட்சியமாக இருக்க வேண்டும். தோனியும் அதைத்தான் சி.எஸ்.கேவில் செய்திருக்கிறார். ஜார்ஜ் பெய்லி(ஆஸி), ஜேசன் ஹோல்டார்(மேற்கிந்தியத் தீவுகள்), டூப்ளெஸிஸ்(தெ.ஆ), முரளி விஜய்(பஞ்சாப்), சுரேஷ் ரெய்னா(குஜராத்) என அணிக்குள் வந்த வீரர்களைக் கேப்டனாகும் அளவுக்கு வழிநடத்தியுள்ளார். இதனை இவர்களே பேட்டிகளில் கூறியிருப்பது நம்மை தோனிக்கு சல்யூட் போட வைக்கும்.

6. அதிர்வுகளை ஏற்படுத்துங்கள்!

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் சில காரணங்களுக்காக வேலையை விட்டுச் சென்று விட்டு மீண்டும் அதே வேலைக்கு வருகிறீர்கள் என்றால் இரண்டு விஷயம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று அந்த நிறுவனத்துக்கு நீங்கள் அவசரமாக தேவைப்பட வேண்டும். இரண்டாவது உங்கள் வருகை அதிரடியாக இருக்க வேண்டும். இதுதான் என்று ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும், இன்று சி.எஸ்.கேவுக்கும் நிகழ்ந்தது. உங்கள் கம்பேக்கை அதிரடியாக வைத்திருங்கள்.

7. தோனியாக இருங்கள்!

 

உங்கள் அணி ஒரு தண்டனையில் இருக்கிறது அல்லது உங்களுக்கான வேலை உங்களிடம் தரப்படவில்லை. அதற்காக உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருங்கள். தடை நீங்கியோ அல்லது அந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும் போதோ உங்கள் பவர் என்ன என்பதைக் காட்டுங்கள். அது உங்களின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தல என்ற 7ம் நம்பர் எண் பதிக்கப்பட்ட சி.எஸ்.கே டி-ஷர்ட்டுடன் தோனி வெளியிட்ட படம்தான். அவருக்கு இந்த அணிமீது இருக்கும் காதலை வெளிப்பட்டுத்தியது. உங்கள் வேலை மீதான காதலை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

அப்பறம் என்ன பாஸ்....இந்த வருஷம் மஞ்சள் கலர் ஜெர்ஸி, விசில் போடு சத்தம், தல தோனி..,இப்படி உற்சாகமா ஆரம்பிக்கப்போற ஐபிஎல் மாதிரி இந்த வாரத்த ஆரம்பிங்க... இந்த வாரம் முழுக்க விசில்போடு தான்...


டிரெண்டிங் @ விகடன்