KB100... யமஹா மற்றும் சுஸூகியை எதிர்த்த ‘தனிஒருவன்’ 2 ஸ்ட்ரோக் பைக்! #KB100

உலகமயமாக்கலின் எதிரொலியாக, 1983-ல் எஸ்கார்ட்ஸ் - யமஹா மற்றும் 1984-ல் டிவிஎஸ் - சுஸூகி என இந்தியா - ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ச்சியாக கூட்டணி அமைத்தனர். அதன் வெளிப்பாடாக வெளிவந்த இந்த் சுஸூகி AX100 மற்றும் யமஹா RX100 ஆகியவை, அப்போது விற்பனையில் கோலோச்சிக்கொண்டிருந்தன. மற்றொரு இந்தியா - ஜப்பான் கூட்டணியான பஜாஜ் - கவாஸாகி, முன்னே சொன்ன பைக்குகளுக்குப் போட்டியாக, 1986-ம் ஆண்டில் களமிறக்கியதுதான் KB100.

KB125

சேட்டக் ஸ்கூட்டர் மற்றும் RE ஆட்டோக்களைத் தயாரித்துக்கொண்டிருந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தொழில்நுட்பரீதியில் கவாஸாகியுடன் இணைந்து பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கியது. உலக அளவில் விற்பனைசெய்யப்பட்ட KH125 பைக்கில், இந்தியாவுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்த பைக்தான் Kawasaki - Bajaj 100 என்றழைக்கப்படும் KB100.

கவாஸாகி KB100

சர்வதேச பைக் சந்தைகளில், தாம் விற்பனை செய்த நின்ஜா சீரிஸ் பைக்குகளால், பைக் ஆர்வலர்களின் மத்தியில் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனம் எனப் பெயர் பெற்றிருந்தாலும், தனது RD350 பைக்கினால், அப்போது இந்தியாவில் யமஹாதான் அந்தப் பெருமையைக்கொண்டிருந்தது. நிலைமை இப்படி இருந்தாலும், வேகமாகச் செல்லும் பைக்குகளின் மத்தியில் சீறிப்பாய்ந்த பைக்தான் KB100. சீட்டா (Cheetah) என வர்ணிக்கப்பட்ட இந்த பைக், அப்போதைய இளைஞர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றது; அதிக பவர், அருமையான மைலேஜ், நீளமான வீல்பேஸ், ரோட்டரி டிஸ்க் இன்டேக் வால்வு பொருத்தப்பட்ட 97.6சிசி இன்ஜின், இன்ஜின் ஆர்பிஎம்மைக் காட்டும் டேக்கோ மீட்டர் என KB100-ல் இருந்த நவீன வசதிகளே இதற்குக் காரணம். தவிர, முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களாக இருந்தாலும், பைக்கின் குறைவான எடையினால், இதனை பேலன்ஸ்டாக ஓட்டுவதும் கன்ட்ரோல் செய்வதும் எளிதாக இருந்தது.

 

KB100

மேலும், பைக் இயங்குகிறதா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு, இன்ஜின் மிகவும் ஸ்மூத்தாக இயங்கும் என்பதுடன், சீரான பவர் டெலிவரி (10.5bhp) காரணமாக, KB100-யை ஸ்டார்ட் செய்த சில விநாடிகளிலேயே, பைக்கின் டாப் ஸ்பீடை எட்டிவிட முடியும் என்பது ப்ளஸ். யமஹா மற்றும் சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இந்த கவாஸாகி பைக்கின் வீல்பேஸ் (1,260மிமீ) மற்றும் டயர்களின் அகலம் (18 இன்ச்) அதிகம். எனவே, ஒரு பெரிய பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வு கிடைத்தது; தவிர எந்த வேகத்திலும் பைக் நிலையாக இருப்பதுடன், திடீரென பிரேக் பிடித்தாலும் பைக் ஸ்கிட் ஆகும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதைய காலத்தில், இந்த பைக்கில்தான் முதல்முறையாக சென்ட்ரல் லாக்கிங், பார்க்கிங் லைட், டேக்கோ மீட்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச், இடதுபக்க ஹேண்டில்பாரில் சோக், 12V எலெக்ட்ரிக்கல் சிஸ்டம், பிரகாசமான 35W ஹெட்லைட், ஃப்யூல் கேஜ் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றிருந்தன; 1990-களில் சுமார் 20,000 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட இந்த பைக்கை, பொக்கிஷமாகப் பாதுகாத்துப் பயன்படுத்துபவர்கள் இன்றும்கூட இருக்கிறார்கள்.

கவாஸாகி KB125

யமஹாவின் RX135 மற்றும் சுஸூகி Shaolin போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் விதமாக, KB100-ல் இருந்த இன்ஜினை அடிப்படையாகக்கொண்டு, கூடுதல் சக்திவாய்ந்த KB125 பைக்கை அறிமுகப்படுத்தியது கவாஸாகி. இது பார்ப்பதற்கு KB100 பைக்கைப் போலவே இருந்தாலும், அதைவிட அதிகப் பவரை (12.5bhp) வெளிப்படுத்தியது. KB100 பைக்கின் Cast Iron இன்ஜினுடன் ஒப்பிடும்போது, முழுக்க அலுமினியத்தால் ஆன இன்ஜினைக் கொண்டிருந்தது KB125. இதுவும் ஒட்டுமொத்த தரம், அட்டகாசமான வேகம், துல்லியமான கையாளுமை, ஸ்மூத்தான இன்ஜின் என்ற பெயரைப் பெற்றது. என்றாலும், அது KB100 அளவுக்கு மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

கவாஸாகி 2 ஸ்ட்ரோக்

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் 'ஆஃப் ரோடு ஸ்க்ராம்ப்ளர் பைக்’கான, SX ENDURO 125 எனும் அட்வென்ச்சர் பைக் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடனான KB125 பைக்கான, KB125 Prowler எனும் மாடலையும் இக்கூட்டணி வெளியிட்டது. இவை யமஹாவின் RX-G & RX-Z பைக்குகளைவிடப் பவர்ஃபுல்லாக இருந்தன; ஆனால், சிறப்பான தயாரிப்புகளாக இருந்தாலும், இவை இரண்டும் விற்பனையில் ஜொலிக்காமல் பின்தங்கியதுதான் சோதனை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, யமஹாவின் RX மற்றும் சுஸூகியின் Shogun பைக்குகளைப் போல கவாஸாகியின் KB சீரிஸ் பைக்குகள் பிரபலமடையவில்லை என்றாலும், பைக் செக்மென்ட்டை மாடர்னாக மாற்றியமைத்த பெருமை, இவர்களையே சேரும். மேலும், ஜப்பானிய தயாரிப்புகளின் தரத்தை, யமஹா - சுஸூகி ஆகியோரைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எடுத்துரைத்தது கவாஸாகிதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!