பாக்டீரியாவின் DNAவில் படம் ஓட்டும் விஞ்ஞானிகள்... அடுத்து மனிதர்கள்தான்!

பாக்டீரியா DNA

நாளை வீக்கெண்ட்! பீச் பக்கம் போனால் குதிரை சவாரி செய்யலாம். ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும், அந்தக் குதிரையை ஒருவன் செலுத்தும் காட்சிதான் சர்வதேச அளவில் முதன் முதலாக ரெக்கார்டு செய்யப்பட்ட மோஷன் பிக்சர் என்பது? அதன் பெயர் ‘Sallie Gardner at a Gallop - the Muybridge movie’. இப்போது அந்த பிரபலமான காட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்தக் காட்சியை அப்படியே ஒரு பாக்டீரியாவின் DNAவில் பதிவு செய்துவிட்டு, பின்பு அதையே வெளியே பிரதி எடுத்தும் காட்டி இருக்கிறார்கள். பாக்டீரியாவே சிறியது, இதில் அதன் DNAவில் எல்லாம் எப்படி பாஸ் இப்படி பண்ண முடியும்? அது தானே உங்கள் கேள்வி?

DNAவில் தகவல்களைச் சேமிக்கலாம்

உலகிலேயே மிக அடர்த்தியான தகவல் சேமிக்கும் இடம் எது தெரியுமா? ஒரு DNA! பொதுவாக ஒரு DNA என்பது பல்வேறு நியூக்ளியோடைடுகளால் ஆனது. இதில் ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளிலும் தகவல்களைச் சேமிக்க முடியும். முதன்முதலாக DNA Fountain என்ற வழிமுறையைப் பயன்படுத்தி ஒரு குறும்படம், ஒரு கம்ப்யூட்டரின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஒரு அமேசான் கிஃப்ட் கார்ட் என்று மூன்றையும் மொத்தம் 6 பைல்களாக நியூக்ளியோடைடுகளின் உள்ளே சேமித்து சாதனை படைத்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து தற்போது ஒரு பாக்டீரியாவின் DNAவில் ஒரு சிறிய வீடியோவை GIF பார்மட்டிலும், கூடவே ஒரு புகைப்படத்தையும் சேமித்து அசத்தியிருக்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பாக்டீரியா DNA

எப்படி சாத்தியம்?

பொதுவாகவே ஒரு பாக்டீரியாவை வைரஸ் தாக்கும் போது, தன்னைப் பாதுகாக்கும் முயற்சியாக அந்த வைரஸ் கிருமியைக் கூறுகளாக வெட்டி தன் DNAவில் பதுக்கிக் கொள்ளுமாம். இப்படி சேமித்து வைத்த வைரஸ் அதுனுள்ளேயே தங்கி விடும். இது எதற்கு என்றால், பின்னாளில் இதே போன்று வைரஸ் தாக்கம் நிகழும் போது, இருக்கும் வைரஸை ஆராய்ந்து, சுதாரித்து அதைத் தவிர்த்து விடும். இந்தப் பாதுகாப்பு அமைப்பு முறைக்கு CRISPR என்று பெயர். இயற்கையின் இந்தச் செயல்பாட்டை நமக்குச் சாதகமாக மாற்றித் தகவல்களை சேமிக்க பாக்டீரியாவை பயன்படுத்தினால் என்ன? இதுதான் இந்த ஆராய்ச்சியாளர்கள் முதலில் கேட்ட கேள்வி!

என்ன தொழில்நுட்பம்?

இதற்காக E.Coli பாக்டீரியா ஒன்றை தேர்வு செய்தார்கள். பதிவு செய்யப்பட வேண்டிய GIF வீடியோ மற்றும் புகைப்படத்தை சிறிய அளவில் (36x26 Pixels) கருப்பு வெள்ளை பிக்ஸல்களாக மாற்றிக்கொண்டனர். பின்பு அதை மின்சாரம் கொண்டு பாக்டீரியாவின் DNAக்குள் செலுத்தியிருக்கின்றனர். அந்த E.Coli பாக்டீரியாவும் வெள்ளந்தியாக இது வைரஸ் என நினைத்து அதை தன் DNAவில் பதுக்கிக் கொண்டது. சரி, இப்போது பதுக்கியாயிற்று, அடுத்து இதை வெளியில் எடுத்து அந்த புகைப்படம் மற்றும் வீடியோவின் தரம் குறைந்துள்ளதா எனப் பார்க்க வேண்டுமே? ஒருவேளை தரம் குறைகிறது என்றால், இதை தகவல்கள் சேமிக்கும் முறையாக, அதாவது ஒரு மெமரி கார்டு போலவோ, ஒரு ஹார்ட் டிஸ்க் போலவோ பயன்படுத்த முடியாதே?

பாக்டீரியா DNA

ஒரு DNAவை சாதாரணமாக ஆராய்வது போல், அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து அதில் ஒளிந்திருக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கொண்டு உயிர்கொடுத்திருக்கிறார்கள். வெளியே வந்த படம் மற்றும் வீடியோ அசலை போலவே 90% இருந்ததாம்! ஆராய்ச்சிக் குழுவிற்கு அடித்தது ஜாக்பாட்! இது ஒரு சிறிய படிதான் என்ற போதிலும், இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதனால், அடுத்து புத்தகங்கள், பெரிய திரைப்படங்கள் போன்றவற்றை வாழும் பாக்டீரியாவிற்குள் பதுக்கும் முயற்சியில் இறங்கவுள்ளனர்.

அடுத்து மனிதன்?

ஓர் உயிரணுவுக்குள் தகவல்களைச் சேமித்து வைக்கலாம் என்றால், வருங்காலத்தில் மனிதனின் செல்களில் அவனின் சுற்றுச் சூழலில் நடக்கும் தகவல்களைச் சேமிக்க முடியும். இதுக் குறித்து நரம்பியல் விஞ்ஞானியான ஷிப்மன் பேசுகையில், “இந்த ஆராய்ச்சி, இதுவரை நம் மூளையின் செல்களில்தான் தகவல்களைச் சேமிக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கியுள்ளது. விரைவில் மனிதனின் செல்களிலும் நாம் தகவல்களைச் சேமிக்கத் தொடங்கலாம். உங்களுக்குப் பிடித்த படங்கள், பாடல்கள் போன்றவற்றை உங்களுக்குள் வைத்துக்கொள்ளலாம்!” என்று ஆச்சர்யப்படுத்தினார்.

அப்போ, இனி எல்லா இடமும் வெறும் டாட்டா தானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!