வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (21/07/2017)

கடைசி தொடர்பு:12:36 (21/07/2017)

மாசு கலந்த நீரால் என்னென்ன பாதிப்புகள் வரும்? #VikatanData

தண்ணீர் மாசு

சென்னை நகரை பொறுத்தவரை கேன்களில் விநியோகிக்கப்படும் குடிநீர்தான் சூப்பர்ஸ்டார். எல்லோரும் வீட்டிற்கு, அலுவலகங்களுக்கு என்று குடிப்பதற்கு மட்டும் தேவைக்கேற்ப கேன்களாக வாங்கிக் குவிக்கிறார்கள். அதை விற்பவர்களும், ஒரு தடவை வாங்கினா நூறு தடவை வாங்கினது போல் காசு கேட்கும் நிலை. நமக்கும் இதனாலேயே குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைத்துவிட்டது, குளிப்பதற்கு மற்றும் பிற தேவைகளுக்குக் குழாய் நீரையோ அல்லது லாரி நீரையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. ஆனால், இதைத் தவிர்த்து, பலருக்கு இன்றும் அந்த லாரி நீரும், குழாய் நீரும்தான் குடிநீரே. அது அவ்வளவு தரமானதா, மாசு அடையாததா என்ற கேள்வியை ஒரு நாள் கேட்டால், அன்று முழுவதும் அந்தத் தண்ணீரை அருந்தவதற்கே மனம் வராமல் போய் விடும்.

ஒரு பெருநகரத்திலேயே இந்த நிலை என்றால், பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கும் மாவட்டங்கள், அதிலிருக்கும் கடைக்கோடி கிராமங்களின் நிலைமை? பலமுறை, தண்ணீரில் ஏகப்பட்ட நச்சுப் பொருள்கள் கலந்துள்ளதாகவும், குடித்தவர்களுக்கு வாந்தி, பேதி என்று செய்திகளைப் பார்க்கிறோம். இதுப் போக, மண் கலந்த குடிநீர், எண்ணெய் கலந்த குடிநீர், சாயம் கலந்த குடிநீர் எனப் பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் மக்களைக் கலங்க வைக்கிறது.

மாசு கலந்த நீரைக் குடித்தால் மட்டும்தான் பாதிப்பா?

பலரின் பொதுவான கருத்து, மாசு கலந்த நீரை குடித்தால் மட்டுமே பாதிப்பு வரும், குளிப்பதற்கு அல்லது மற்ற தேவைகளுக்கு அதை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதே. ஆனால் மாசுக் கலந்த நீரில் குளிப்பதனாலும் பல வியாதிகள் வரும். அதை கையால் தொட்டாலே ஆபத்து என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். தண்ணீரில் என்னென்ன நச்சுப் பொருள்கள் பொதுவாகக் கலக்கின்றன, அதனால் எந்தெந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன, வேறு என்னென்ன பாதிப்புகள் வருகின்றன என்று முதலில் அறிந்து கொள்வோம். மாசு என்பதன் வீரியத்தை உணர்ந்தாலே விழிப்புஉணர்வு ஏற்படும். தண்ணீரில் என்னென்ன மாசு கலந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்ற பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு...

தண்ணீர் மாசு

என்ன காரணம்?

பொதுவாகத் தண்ணீர் மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் மனிதனின் தவறான நடவடிக்கைகளால் மட்டுமே இது நிகழ்ந்து விடுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் தொடங்கி, ஏரி, குளங்களை நாமே அசுத்தப்படுத்துவது வரை, நீர் ஆதாரத்தைக் கெடுக்கும் செயல்கள் நடந்த வண்ணமே உள்ளன. அடிப்படை நீர் ஆதாரத்தில் மாசு ஏற்பட்டால் கூட ஓரளவுக்கு அதை சுத்திகரிக்க முடியும், ஆனால் குடிநீர் குழாய்களிலேயே எண்ணெய் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் கலந்தால் என்ன செய்ய முடியும்? அறியாமையாலும், வேறு வழியின்றியும் அதை பயன்படுத்தும் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். குடிமக்களுக்கு அடிப்படை ஆதாரங்களான நீர், உணவு, இருக்க இடம் என அனைத்தையும் தரவேண்டாம். குறைந்தபட்சம் குடிநீரையாவது தரமானதாகக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், அதற்கு முன், இருக்கும் நீர் ஆதாரங்களை மக்களே மாசுபடுத்துவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். குப்பைகள் கொட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது, சாயம் போகும் துணிகளை ஆற்றில் துவைப்பது என அனைத்துமே கேடுகளை மட்டுமே தரும். ஒவ்வொருவரும் நம்மைப் போலவே சுத்தமான நீரை மட்டுமே விரும்புவார்கள் என்று புரிந்து கொண்டால் மட்டுமே இதை நாம் சரி செய்ய முடியும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்