உலகிலேயே சிறந்த பாடல் எது... விடை சொல்லும் அறிவியல்! | What's the world's best song?

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (22/07/2017)

கடைசி தொடர்பு:18:31 (22/07/2017)

உலகிலேயே சிறந்த பாடல் எது... விடை சொல்லும் அறிவியல்!

சிறந்த பாடல்

காலையில் பொதுவாக சோம்பலை போக்கவும், உத்வேகம் அளிக்கவும், மோட்டிவேட் பண்ற மாதிரி பாடல்கள். மதிய விருந்துக்கு பிறகு, அலுவலகத்தில் தூக்கம் வராமல் இருக்க, ரஹ்மான் சாங்ஸ், நைட்டானா ராஜா சாங்ஸ் - இது தான் இன்றும் பலரின் அன்றாட பிளேலிஸ்ட்! சிலர் மொழி பேதம் இல்லாமல், அந்த சிறந்த பாடல் அரைகுறையாக புரிந்தாலும் கூட, இசையின் ஆற்றலால் இழுக்கப்பட்டு அதையே கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இந்த ‘Channa Mereya’ வை தேய்ந்த ரெக்கார்டாக கேட்டுத் தீர்த்தவர்கள் இங்கேயே ஏராளம்!

சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உலகிலேயே சிறந்த பாடல் எது? பல கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் இசையில் இது தான் சிறந்தது என்று எப்படி திட்டவட்டமாக கூற முடியும்? ஏன், இங்கேயே ரஹ்மான் பாட்டு நல்லா இருக்கு என்று சொன்னால் சண்டைக்கு வரும் ராஜா விசிறிகள், ஹாரிஸ் பாட்டு நல்ல இருக்கே என்று சொன்னால், வரிந்துக் கட்டிக்கொண்டு வரும் யுவனின் யுவ யுவதி ஃபேன்கள் என ஏராளமான முரண்பாடுகள் உண்டு! அதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கேள்வியை அணுகினால் ஒரு பாடல் ஒருவருக்கு பிடித்துப்போகிறது என்றால், அந்த பாடலின் வசீகரத்தையும் தாண்டி, அதற்கு அவரின் அப்போதைய அகநிலையே காரணம் என்கிறது விஞ்ஞானம்.

இந்த விருப்பப் பாடல்கள் குறித்து நரம்பியல் மருத்துவர்களும், உளவியல் அறிஞர்களும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவற்றுள் சில…

எது சிறந்த பாடல்?

எது சிறந்த பாடல் என்று கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒரு பாடல் சிறந்ததா என்பதை கண்டறிய நூறு வழிகள் உண்டு. பாட்டை ஒருவர் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, அதில் டோபமைன் (Dopamine) சுரக்கிறதா என்று பார்க்கலாம். இந்த டோபமைன் எப்போது வரும் என்றால், உங்களின் ஒரு முடிவு உங்களுக்கே பிடித்துப் போக, உங்களை நீங்களே பாராட்ட நினைக்கும் போது வரும். அப்படியென்றால், உங்களின் பாடல் தேர்வும் இதில் அடங்கும் தானே? இதைத் தவிர கால்களை தரையில் தட்டுதல், தலையை இசைக்கு ஏற்ப ஆட்டுவது என ஒரு பாடலுக்கு நீங்கள் ஏகப்பட்ட கவனம் கொடுத்தாலே அது உங்களுக்கு பிடித்தமான பாடல் தான், சிறந்த பாடல் தான்!

சிறந்த பாடல்

எந்த ஜானர் பாடல்கள்?

பொதுவாக, ஒரு ஜானர் பாடல்கள் மட்டும் இயல்பாகவே உங்களுக்கு பிடித்துப் போவதற்கான காரணம், உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தான் என்கின்றனர் அறிவியலாளர்கள். உதாரணமாக திருமணம் நிச்சயமானவர்களுக்கு, திருமணம் நிகழ்வது போல அல்லது திருமணம் பற்றிய பாடல்கள் டக்கென்று பிடித்து விடும். காதல் தோல்வியில் இருப்பவர்களுக்கு சோக கீதம் ஏதாவது ஒன்று தேசிய கீதம் ஆகிவிடுகிறது. இதுவும் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாறும் ஒன்று தான்!

அப்படி என்றால் ஒரு இசையைமைப்பாளரின் திறமையால் மட்டும் ஒரு பாடல் வெற்றி பெற்று விட முடியாதா?

நிச்சயம் முடியும். அப்படி எந்த தருணத்திலும், வாழ்வின் எந்த நிமிடத்திலும் நம்மை ஈர்க்கும் பாடல்களை தான் நாம் ‘கிளாசிக்’ என்று கவுரவப்படுத்துகிறோம். உதாரணமாக, ரஹ்மானின் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை...’, இளையராஜாவின் ‘தென்றல் வந்து தீண்டும் போது...’. இப்பாடல்களை எப்போது கேட்டாலும் ஒருவித அமைதி கிடைத்துவிடும்.

இதுவா சிறந்த பாடல்?

ஆங்கில எழுத்தாளரான டாம் காக்ஸ் (Tom Cox) ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். “இது தான் சிறந்த பாடல் என்று ஒன்று இல்லை. அது மாறிக் கொண்டே இருப்பது. அன்றைய வானிலை தொடங்கி, உங்களின் மனோநிலை வரை பல உங்கள் விருப்பத்தை மாற்றி அமைக்கிறது” என்று தெரிவித்தார். அவ்வளவு தான், ட்விட்டர் பறவைகளுக்கு வந்ததே கோபம்! Toto - Africa என்ற பாடலை இது தான் சிறந்தது என்று ஒருவர் ட்வீட்ட, அதை ஆமோதித்து பல ட்வீட்களும், லைக்களும் பறந்தன.

ஆச்சர்யம் என்னவென்றால், பல அறிவியலாளர்கள் தொடங்கி ஏன் சிறந்த இசையமைப்பாளர்கள் வரை, அனைவருக்கும் இந்த ‘Africa’ பாடல் மிகவும் பிடித்தமான ஒன்றாம். Toto என்ற இசைக்குழு தயாரித்த இப்பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. இசைக்காகவே வாழ்ந்த, வாழ்த்து கொண்டிருக்கின்ற ஸ்டூடியோ இசைக்கலைஞர்களைக் கொண்டு பெரும் கவனத்துடன் ஒவ்வொரு நொடியையும் இழைத்திருப்பார்கள். அப்படி ஒரு சிரத்தையை, அசாத்திய உழைப்பை இப்பாடலை கேட்கும் போது நிச்சயம் உணர்வீர்கள்.

208,980,938 வியூஸ்களை YouTube-ல் அள்ளியிருக்கும் இப்பாடல், தலைமுறை கடந்து இன்றும் இளசுகளின் ஃபேவரெட்! “இது தான் சிறந்த பாடல் என்று அறிவியலாளர்கள் கூறுவதாக வந்த செய்தியை முகப்பில் படித்துவிட்டு, அது எந்த பாடலாக இருந்தாலும் திட்டலாம் என்ற எண்ணத்துடன் அந்த ஆராய்ச்சி குறித்து படிக்க இங்கே வந்தேன். ஆனால் அது Totoவின் ‘Africa’ பாடல் என்றவுடன் திட்ட மனது வரவில்லை” என்று மக்களே ஃபீல் பண்ணும் அளவிற்கு இதற்கு ஒரு மரியாதை உண்டு! நீங்களும் கேட்டுப் பாருங்கள், பிடித்துப் போகலாம். இது மாதிரி பாடல்கள் லவ் அட் ஃபர்ஸ்ட் ஹியரிங் தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்