Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராடும் 300 பருத்தி வீராங்கணைகள்... இது அமெரிக்கா கதிராமங்கலத்தின் கதை!

இதமான வெயில் அந்தக் குளிரைக் கிழித்துக் கொண்டு அடித்தது. போராட்டம் முடிந்து , தங்கள் கைகளிலும், முகங்களிலும் ஒட்டியிருந்த புழுதியைக் கழுவிக் கொண்டிருந்தது அந்த மக்கள் கூட்டம். அந்த தேவாலயத்தில் அவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. உணவை அருந்திக் கொண்டே அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த விவாதங்களை நடத்துகின்றனர். அவ்வளவு நாட்கள் தொடர்ந்துப் போராடியிருந்தாலும், அவர்களின் பேச்சில் அத்தனை சோர்வு தென்படவில்லை. தங்கள் நிலங்களையும், நீரையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிற வேட்கை அதில் நிறைந்திருந்தது. 

அமெரிக்கா - 300 கன்னியாஸ்த்திரிகள் போராட்டம்

அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பெண்களில் ஒருவரான ஈவா ஒரு யோசனையை முன்வைக்கிறார். அது அங்குள்ள எல்லாருக்குமே சரியாகப்பட்டது. 87 வயதான  மூத்த கன்னியாஸ்திரி லிண்டாவிடம் இந்தத் திட்டத்தை முன்வைக்கிறார்கள். சோகம் கொண்டிருந்த அந்த சுருக்கமான முகத்தில் அத்தனை உற்சாகம் கொப்பளிக்கிறது. தன் பரிபூரண சம்மதத்தைத் தெரிவித்ததோடு, அந்த தள்ளாத வயதிலும் தானும் அந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வருவதாகச் சொல்கிறார். 

இந்தக் கதைகளின் களம், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலிருக்கும் லான்கெஸ்டர் (Lancaster ) கிராமப் பகுதி. கதை இது தான்... நியூயார்க் பகுதியிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரைக்கும் ஒரு மிக நீளமான ஷேல் கேஸ் பைப்லைன் அமெரிக்காவில் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பல இடங்களையும் இணைக்கும் வகையில் புதிய பைப்லைன்கள் அவ்வப்போது போடப்படுகின்றன. அந்த வகையில் பென்சில்வேனியாவின் வடகிழக்குப் பகுதியிலிருக்கும் " ஹைட்ராலிக் ப்ராக்சரிங் " கிணறுகளிலிருந்து ஷேல் கேஸை எடுத்து டெக்ஸாஸ் வழிப் போகும் பைப்லைனோடு இணைப்பது தான் திட்டம். இந்தப் பகுதிகளில் அதிகப்படியான விவசாய நிலங்கள் அமைந்திருக்கின்றன. 

அமெரிக்காவில் ஷேல் கேஸ் திட்டம்

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது " வில்லியம் நேட்ச்சுரல் கேஸ் " ( William Natural Gas ) எனும் பெரும் நிறுவனம். பல இடங்களிலும் நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகளுக்கு அதிகப் பணம் கூறுவதாக சொல்லியும், மறுப்பவர்கள் மீது வழக்குகள் பதிவது, மிரட்டுவது என பல வகைகளிலும் நிலங்களை கையப்படுத்தியிருப்பதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அப்படி, லான்கெஸ்டர் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளிடம் பேசி நிலத்தை வாங்கிவிட்டனர். ஆனால், இப்போது அவர்களுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருப்பது " 300 பருத்தி வீராங்கனைகள் " தான். 

அமெரிக்காவின் ஷேல் கேஸ் திட்டம்

"Adorers Of The Blood Of Christ " என்ற ஒரு கிறித்துவக் குழு உலகம் முழுக்கவே இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலும் கன்னியாஸ்திரிகளே இடம்பெற்றிருப்பர். இந்தப் பகுதியில் இந்தக் கிறித்துவக் குழுவுக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் 23 ஏக்கரில் இந்தக் குழாய் பதிக்கப்பட உள்ளது. இந்தக் கிறித்துவக் குழுவின் அடிப்படைக் கொள்கையே...
" வறுமை, போர், இன வெறி இல்லாத உலகை உருவாக்க வேண்டும். கடவுள் படைப்பின் ஆகச் சிறந்த இந்த இயற்கையைத் தொழுதிட வேண்டும். எல்லா ஜீவன்களுக்குமான உயிராதரமாகத் திகழும் இந்தப் புனித மண்ணைக் காத்திட வேண்டும் " என்பது தான். 
விவசாய மண்ணை சீரழிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து இவர்கள் எத்தனையோ போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. ஆனால், அரசும், அதோடு கைகோர்க்கும் பெருநிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் இவர்களை ஏதாவது வழியில் வீழ்த்திக் கொண்டேயிருந்தன.

அமெரிக்காவின் ஷேல் கேஸ் பைப்லைன்

இறுதியாக தற்போது ஒரு முக்கியப் போராட்ட முன்னெடுப்பை எடுத்தனர். இது தான் ஈவா சொன்ன யோசனை. 

தங்களுக்குச் சொந்தமான சோளக்காட்டின் நடுவே ஒரு " வெளிப்புற தேவாலயத்தை " உருவாக்கினார்கள். அங்கு ஒரே நாளில் 300 கன்னியாஸ்திரிகள் கூடி , தொழுது அதை முழுமையான தேவாலயமாகவே மாற்றிவிட்டனர். தற்போது, " மத்திய மத நம்பிக்கைகள் மீட்பு " சட்டத்தின் கீழ், தங்கள் மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலும், எங்கள் புனித ஸ்தலத்தின் வழியிலும் கொண்டு போக இருக்கும் இந்த குழாய்ப் பதிப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் வில்லியம்ஸ் நிறுவனம் கன்னியாஸ்திரிகளிடம் மற்ற நிலங்களைவிடவும், அவர்களுக்கு அதிக பணம் தருவதாக பேரம் பேசியதையும் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இதனால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்த அந்த நிறுவனத்திற்கு, இந்த 23 ஏக்கர் நிலம் மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. 

" அட்லாண்டிக் சன்ரைஸ் " எனும் பெயர் கொண்ட இந்தத் திட்டத்திற்கு மட்டுமல்ல, ஏற்கனவே " டகோடா பைப்லைன் " திட்டத்திற்கும் கூட அமெரிக்காவில் மிகப் பெரியளவிலான போராட்டம் நடந்தது. இந்த இரண்டு திட்டங்களுமே அமெரிக்காவின் பூர்வகுடி மக்களின் விவசாய நிலங்களையே குறிவைத்து செயல்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியா உட்பட பல நாடுகளும் இது போன்ற திட்டங்களை விவசாயிகள் போன்ற எளிய மக்களை பாதிக்கும் வகையிலேயே செயல்படுத்துகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணம், அவர்களை மிக எளிதாக அடக்கிவிட முடியும் என்று அவர்கள் நினைப்பது தான். 

அமெரிக்காவின் திட்டத்தை எதிர்க்கும் மக்கள்

" எங்கள் நிலத்தின் மீது ஒரு பெரிய கோட்டை வரைந்து, அதில் விஷத்தைச் செலுத்துகிறது ஒரு நிறுவனம். இதற்கு அரசாங்கமும் கைகோத்து நிற்கும் சூழலில்... எதிர்க்க திராணியற்று எங்கள் நிலங்களின் மரணத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..."

" இந்த அரசியல் அமைப்பு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றால்... இது சொல்லும் எதற்கும் நீங்கள் இல்லை.. முடியாது... என்று எதையும் சொல்லமுடியாது" 

இது அந்தப் பகுதி மக்களின் குரல்.

" தேசத்தின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள். இந்தத் திட்டத்தை அனுமதித்தால் உங்கள் ஊர் அமெரிக்கா போன்று, துபாய் போன்று வளர்ச்சியடைந்த இடமாக மாறும்... இது தெரியாமல் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்காதீர்கள்..." 

இது நம் அரசியல்வாதிகளின் குரல்.

அந்த நாடாக இந்த நாடு மாறும் என்று எந்த நாட்டைச்  சொல்கிறீர்களோ, அந்த நாட்டு மக்களே இது போன்ற திட்டங்களுக்கு தொடர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவது ஏன் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை ? காரணம், நீங்கள் வளர்ச்சியைப் பணமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை மண்ணாகப் பார்க்கிறோம். மண்ணைப் பணமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் மண்ணை எங்கள் உயிராகப் பார்க்கிறோம். எல்லாம் புரிகிறது எங்களுக்கு, ஒன்றேயொன்றைத் தவிர...  எங்கள் உயிரை நீங்கள் என்னவாக பார்க்கிறீர்கள் ?

இது ஒரு சாமானியனின் குரல். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close