விவசாயம் முதல் வெண்டிங் மிஷின் வரை... தானே உருவாக்கி விற்கும் ஜப்பான் விவசாயி! | A Farmer Named Tadashi From Japan Uses Vending Machine to load Rice and Curry

வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (24/07/2017)

கடைசி தொடர்பு:10:34 (24/07/2017)

விவசாயம் முதல் வெண்டிங் மிஷின் வரை... தானே உருவாக்கி விற்கும் ஜப்பான் விவசாயி!

வெண்டிங் மெஷின்களுக்குப் (Vending Machine) புகழ்பெற்ற நாடு ஜப்பான். இங்கு வெண்டிங் மெஷின்களில் கிடைக்காத பொருள்களே கிடையாது. பத்திரிகைகள் தொடங்கி, முட்டை, காய்கறி, சோயா, நூடுல்ஸ் என எல்லாவற்றுக்குமே வெண்டிங் மெஷின்கள் இருக்கின்றன. இப்படி ஒரு வெண்டிங் மெஷினை வைத்து, தனக்கான பொருளாதார சந்தையை உருவாக்கி , அழகான தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஜப்பானின் 74 வயது விவசாயி ஒருவர். 

ஜப்பானின் ஷிகோகு தீவிலிருக்கிறது அவா ஷி எனும் ஊர். இங்கு தடாஷி யோஷிமோடோ எனும் விவசாயி பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் நூடுல்ஸிற்காகவும், முட்டைகளுக்காகவும் மக்கள் வரிசையில் நின்று வெண்டிங் மெஷினை உபயோகிப்பதைப் பார்த்து வந்தார். ஜப்பான் முழுக்க எங்குப் பயணித்தாலும், இந்தக் காட்சிகள் அவர் கண்களில் பட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால், எங்குமே அரிசி சாப்பாட்டுக்கு என ஒரு வெண்டிங் மெஷின் இருந்ததை அவர் பார்த்ததில்லை. நாம்தான் நெல் சாகுபடி செய்கிறோமே, நாம் ஏன் அரிசி சாப்பாட்டுக்கு என தனி வெண்டிங்மெஷினை வைக்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு வந்தது. இதெல்லாம் நடந்தது  40 ஆண்டுகளுக்கு முன்பு. அன்று ஒரு வெண்டிங் மெஷினை வாங்கி வைத்தார். 

ஜப்பான் - வெண்டிங் மெஷின் - Japan Vending Machine

காலை எழுந்ததும் வயலுக்குச் சென்றுவிடுவார். அன்றைய அறுவடை வேலைகளை மேற்பார்வையிட்டு விட்டு, வீட்டுக்குத் திரும்பி சமைக்கத் தொடங்கிவிடுவார். முதலில் அரை மணி நேரம் அரிசியைக் கழுவி ஊற வைத்துவிடுவார். பின்னர், 45 நிமிடம் வரை அரிசியை வேக வைப்பார். " ஹினுஹிகாரி " ( HinuHikari ) எனும் அரிசி வகையை இவர் தயாரிக்கிறார். அரிசி சோற்றை தயார் செய்தவுடன், காய்கறிகளைக் கொண்ட குழம்பையும் சமைக்கிறார். இரண்டையும் தனித்தனியாக ஒரு பெட்டியில் அடைத்து, ஸ்பூனோடு சேர்த்து அதைப் பேக் செய்து, தன்னுடைய வெள்ளை நிற மினி ட்ரக்கில் ஏற்றுகிறார். 

சில நிமிட பயணத்துக்குப் பின்னர், வெண்டிங் மெஷின் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார். அந்த சிகப்பு நிற மெஷினைத் திறந்து சாப்பாட்டுப் பொட்டலங்களை அடுக்குகிறார். மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார். பின்பு, மீண்டும் மாலையில் இதே வேலை. ஒரு சாப்பாட்டுக்கு 300 ஜப்பான் யென் (Yen) . இந்திய ரூபாய் மதிப்புக்கு 173 ரூபாய். அந்தச் சாலையில் வண்டியில் போகும் பலருக்கும் இந்த உணவு பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. ஜப்பானில் அதிக மக்கள் விரும்பும் உணவாக இருப்பது  அரிசிச் சோறும், குழம்பும்தான் என்று சொல்லப்படுகிறது. சாலையில் போகும் டிரைவர்கள் மட்டுமின்றி, ஊருக்குள் இருக்கும் வீடுகளிலிருந்தும் கூட பெண்கள் வந்து இந்த சாப்பாட்டை வாங்கிப் போகிறார்கள். 

வெண்டிங் மெஷின்,   கிட்டத்தட்ட 70 டிகிரி செல்ஷியசில் சாப்பாட்டை சூடாக வைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ புது புது மெஷின்கள் வந்திருந்தாலும் கூட, தன்னுடைய பழைய மெஷினை இன்று வரை உபயோகப்படுத்துகிறார் தடாஷி. அதில் ஏதாவது பிரச்னை என்றால் அவரே சரி செய்கிறார். 

ஜப்பான் - வெண்டிங் மெஷின் - Japan Vending Machine

"என் உடலும், என்னோட வெண்டிங் மெஷினும் நலமாக இருக்கும் வரை நான் என்னுடைய இந்த வேலையைத் தொடர்ந்து கொண்டேதானிருப்பேன் " என்று சொல்லி சிரிக்கிறார் தடாஷி. 

ஒரு ஏக்கர் நிலம், விவசாயம், அழகான வீடு, ஒரு சின்ன ட்ரக், தானே உணவைத் தயாரித்து, தானே விற்பனை செய்யும் முழுமை என இந்த பூமியின் பெரும்பாலான மனிதர்கள் வாழ முயற்சிக்கும் ஒரு வாழ்வை மிகச் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தடாஷி.  உற்பத்தி செய்பவர்களுக்கு ஒருபோதும் அதற்கான லாபமும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. கொள்ளை லாபத்தை இடைத்தரகர்கள்தான் அனுபவிக்கிறார்கள். தற்சார்பு வாழ்க்கையும், தன் பொருளுக்கான சந்தையை தானே முன்நின்று செய்வதுமாக தடாஷி மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்