வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (24/07/2017)

கடைசி தொடர்பு:10:42 (24/07/2017)

அழியும் சதுப்பு நிலங்கள்... ஈராக் செய்து காட்டியதை சென்னையும் செய்யுமா?

நம் கதைக்கு முன் ஒரு கதை. 

அது ஒரு சபிக்கப்பட்ட பூமி. ஈராக்கிலிருக்கும், “அஹ்வார்” என்று சொல்லப்படும் அந்தப் பகுதியில்தான் கடவுள், “ஏதன் தோட்டத்தை” உருவாக்கினார் என்ற நம்பிக்கை உண்டு. ஆதாம், ஏவாள் ஆப்பிள் பறித்துத் தின்றது அங்கு தான். “அஹ்வார்” ஈராக்கின் பரந்த சதுப்பு நிலம். “மேடன்” எனப்படும் பழங்குடியினம் அங்கு வாழ்ந்து வந்தது. 

15 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவிலிருக்கும் அந்த சொதசொதப்பான நிலத்தில்  300 வகை பறவையினங்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்தன. 40 வகைப் பறவையினங்கள் சைபீரியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்குப் பறக்கும் வழியில் இந்த சதுப்பு நிலத்தின் அழகைக் கண்டு சில காலங்கள் தங்கிப் போவதுண்டு. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மேடன் இன மக்கள், அழகான கோரைப் புற்கள், பூச்சியினங்கள், மீன்  வகைகள் என அத்தனை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை அங்கிருந்தது. கோரைப்புற்களைக் கொண்டு அந்த மக்கள் கட்டும் வீடு இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுக்கே உரிய வீடு, இசை, உடை, உணவு என தனி கலாசார அடையாளங்களோடு அந்தப் பூர்வகுடிகள் அந்த ஈர மண்ணில் வாழ்ந்து வந்தனர். 

ஈராக் சதுப்புநிலம்

எல்லாம்... முதலாம் வளைகுடா போர் முடியும் வரைதான். போர் முடிந்த 1991 காலகட்டத்தில், இந்த சதுப்பு நிலப் பகுதியின் கோரைப் புற்களின் இடையே தன்னை எதிர்க்கும் போராளிகள் பதுங்கியிருக்கின்றனர் என்று சொல்லி... உலகின் மிகச் சிறந்த பொறியியலாளர்களைக் கொண்டு மொத்த சதுப்பு நிலத்தையும் மொட்டையடித்து பாலைவனமாக்கினார் அன்றைய ஈராக் அதிபர் சதாம் ஹுசைன். இந்த சதுப்பு நிலத்திற்கான நீர் டைக்ரிஸ் மற்றும் யுஃப்ரேட்ஸ் நதிகளின் கிளைகளிலிருந்து கிடைத்து வந்தது. முதலில் அந்த நதியின் நீர் வழித்தடங்களை மறித்து, நீர் வரத்தைக் குறைத்தார் சதாம் ஹுசைன். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக  கோரைப் புற்களை அறுத்தெறிந்து அதற்கு தீ வைத்தார். மொத்த இடத்தையும் பாலைவனமாக மாற்றினார். நீரையும், கோரைப் புற்களையும், மீன்களையும் நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்திருந்த அந்தப் பழங்குடியினம் அகதிகளாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கியது. இறுதியாக... உறுதியாக தங்கள் நிலத்திலேயே இருப்போம் என்று 600 பேர் மட்டுமே தங்கினர். அவர்கள் வாழ்வதும் பெரும் பாடாக இருந்தது. பசியும், வறட்சியும் அவர்களை வாட்டி வதைத்தது. ஒரு சொட்டு நீருக்காக ஒருவரையொருவர் குத்திக் கொலை செய்யும் நிலை அங்கு நிலவியது. 

ஈராக் சதுப்புநிலம்

"20 ஆம் நூற்றாண்டின் ஆகப் பெரும் சூழலியல் சீர்கேடு " என்று இதை அன்று குறிப்பிட்டது ஐநா சபை. ஆனால், இதே பகுதியை இன்று யுனெஸ்கோ  பாதுகாக்கப்பட வேண்டிய " உலக பாரம்பர்யக் களமாக" அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மொத்த உலகிற்குமான ஓர் படிப்பினை. 

மாற்றத்தின் கதை...

“அந்த வீடு முதலையின் வாயாக இல்லாத பட்சத்தில், யாரும் அந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள்” 

அகதிகளாய் வாழ்வது அளவிட முடியாத வலியைக் கொடுக்கக் கூடியது. அவர்களின் வீடு முதலையின் வாயில் சிக்கவே, அகதிகள் எனும் அடை மொழியோடு உலகம் சுற்றத் தொடங்கினர் அந்தப் பழங்குடிகள். இப்படியாக அந்த ஈர நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து போனவர்களில் அசாம் அல்வாஷும் ஒருவர். அமெரிக்காவில் பொறியியல் படிப்பை முடித்து வேலையில் இருந்தார். நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கைத்தான். ஆனால், அகதியாய் ஒதுங்கிய வேறொரு மண்ணில். தன் பாட்டனும், முப்பாட்டனும் வாழ்ந்த மண், அவர் பிறந்த மண் இன்று அனாதையாக்கப்பட்டிருந்ததன் வலி அவரை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. 2006-ம் ஆண்டு சதாம் ஹுசேனும் இறந்துவிட, தன் மண்ணை மீட்க வேண்டுமென்ற எண்ணம் அவரின் வாழ்நாள் நோக்கமாக உருவானது. தன் சக நண்பர்களிடம் பேசினார். முதலில் டைக்ரிஸ் மற்றும் யுஃப்ரேட்ஸ் நதிகளிலிருந்து சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வழிகளை ஆராய்ந்தனர். ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டினர். அந்த திட்டத்தை மக்களின் முன் வைத்தனர். மக்களை ஒன்றிணைத்தனர். 

ஈராக் சதுப்புநிலம்

கொஞ்சம், கொஞ்சமாக வெடித்துச் சிதறியிருந்த நிலத்தின் நரம்புகளில் தண்ணீர் பாய ஆரம்பித்தது. பாலைவனமாக்கப்பட்டிருந்த அந்த நிலத்தை இன்று திரும்ப மீட்டெடுத்து விட்டார்கள். புலம் பெயர்ந்தவர்கள், நிலம் திரும்பினார்கள். தொலைந்த வாழ்க்கைத் திரும்பக் கிடைத்தது. 

நறுமணத்திலிருந்து நாற்றத்திற்கு... 

ஈராக்கின் இந்த நறுமணத்தைக் கடந்து, சென்னையின் நாற்றத்தைக் கொஞ்சம் நுகரலாம். 

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூழலியல் சீர்கேட்டை நம் கண் முன்னே நாம் நடத்திக் காட்டியிருக்கிறோம். சென்னை மாநகரின் பாதுகாப்பு அரணாகவும், நிலத்தடி நீருக்கான உயிர் ஆதாரமாகவும்  இருந்த அந்த நீர்நிலையின் மீது, கற்களை எறிந்தும், விஷம் கொடுத்தும் கொன்றுவிட்டு... அதற்கு குப்பைகளால் கட்டப்பட்ட மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். மரணத்தின் தருவாயில், தாங்கிடவே முடிந்திடாத ஒரு பெரும் வலியில்  தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம்

தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அரசு கட்டடங்களின் ஆக்கிரமிப்புகள், ஒட்டு மொத்த சென்னையின் குப்பைக் கிடங்கு என மூச்சுக் கூட விட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை. 

ஒரு நாளில் சென்னைப் பெருநகரில் 5 ஆயிரன் டன் குப்பைகள் எடுக்கப்பட்டுகின்றன. அவை வடசென்னையின் கொடுங்கையூரிலும், தென்சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைந்திருக்கும் கிடங்கிலும் பிரித்துக் கொட்டப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி பள்ளிக்கரணையில் ஒரு நாளைக்கு 2600 டன் வரைக்குமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதல்லாமல், ஒரு நாளைக்கு 380 டன் அளவிற்கான கட்டட இடிமானக் குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் அளவிற்கான கழிவு நீரும் பள்ளிக்கரணையில் விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  2002ல் 140 ஏக்கர் பரப்பளவிலிருந்த குப்பைக்கிடங்கு, 2007ல் 340 ஏக்கர் பரப்பளவாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் 10 ஏக்கர் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

குப்பைகள் கொட்டப்படுவதால் பள்ளிக்கரணையின் நிலத்தடி நீர் எந்தளவிற்கு மாசடைந்திருக்கிறது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த "நீர் ஆதார அமைப்பு" ஓர் ஆய்வறிக்கை 2010-ம் ஆண்டிலேயே சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நீரில் டிடிஎஸ், குளோரைட், சல்ஃபைட், பைகார்பனேட் போன்றவைகளின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இது பள்ளிக்கரணையைச் சுற்றியிருக்கும் பகுதிகளின் நிலத்தடி நீரையும் சேர்த்து மாசுப்படுத்துகிறது. உடனடியாக, இங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. 

தடை செய்யப்பட்ட குட்காவை லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய அனுமதிக்கும் தமிழக அரசிடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை சரியான வகையில் கையாள்வதற்கு எந்தத் திட்டங்களும் இல்லை. ஆக்கிரமிப்பு செய்திருக்கும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் ஒரு போதும், ஒன்றும் செய்திடப் போவதில்லை. எல்லாவற்றிருக்கும் கூடுதலாக பல அரசாங்க கட்டடங்களே ஆக்கிரமிப்பில் தானிருக்கின்றன. இதையெல்லாம் எதிர்த்து சமூகப் போராளிகளும், மக்களும் போராடிக் கொண்டுதானிருக்கின்றனர். ஆனால், அரசாங்கமும், அதிகார வர்க்கமும், தனியார் நிறுவனங்களும் இரும்புப் பிடியோடு நசுக்கும்போது மக்களும் எத்தனை விஷயங்களுக்கு, எத்தனை நாள்களுக்குத்தான் போராட முடியும்? 

பள்ளிக்கரணை சதுப்புநிலம்

சமீபகாலங்களில் தமிழக முதல்வர் குறித்த பெரும்பாலான புகைப்படங்களில் அந்த நீல நிற தண்ணீர் பாட்டிலைப் பார்க்க முடிகிறது. நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடனே தொடரும் அந்த நீலநிற தண்ணீர் பாட்டிலைத் திறக்கும் போதெல்லாம், “பள்ளிக்கரணை என்றொரு சதுப்பு நிலம் மரணித்துக் கொண்டிருக்கிறது. அதை மீட்க நாம் இன்னும் ஒன்றுமே செய்திடவில்லை” என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் தமிழக முதல்வர் அவர்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்