வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (25/07/2017)

கடைசி தொடர்பு:12:48 (25/07/2017)

புலிகளை ஏமாற்ற மாஸ்க்... ராணுவத்துக்கு உதவ பொம்மைத் துப்பாக்கி... உலகை அசத்திய சில தெர்மகோல் ஐடியாஸ்!

வைகை நதி நீர் ஆவியதைத் தடுக்க தெர்மகோல் போட்டு மூட முயற்சித்தார் ஓர் அமைச்சர். எண்ணூரில் எண்ணெய் சிந்தியபோது, பக்கெட் கொண்டு கடலை சுத்தம் செய்யச் சொன்னது ஒரு கூட்டம். இதெல்லாம் அடி முட்டாள்தனமான வேலைகளாகப் பார்க்கப்பட்டன. ஆனால், சமயங்களில் இது போன்ற ஐடியாக்கள் வெற்றி பெற்றுவிடுவதுமுண்டு... அப்படி உலகை ஆச்சர்யப்படுத்திய சில "தெர்மகோல்" ஐடியாக்கள் இவை... 

1. டால்பின் வயிற்றை சுத்தம் செய்த உயர்ந்த மனிதர் :

2006-ம் ஆண்டில் சீனாவிலிருந்த அக்வேரியத்தில் ( Aquarium ) இரண்டு டால்பின்கள் நிறைய பிளாஸ்டிக் துண்டுகளை தின்றுவிட்டன. அதை கத்தி கொண்டு ஆபரேஷன் செய்ய முடியாத சூழல், அப்போது உலகின் உயரமான மனிதராக இருந்த பாவ் ஜிஷூனை உதவிக்கு அழைத்தது அந்த அக்வேரிய நிர்வாகம். 7 அடி, 9 இன்ச் உயரம் கொண்ட பாவ்வின் கையின் நீளம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அவர் அந்தக் கையைக் கொண்டு டால்பினின் வயிற்றிலிருந்த பிளாஸ்டிக் துண்டுகளை வெளியே எடுத்தார். அதன்பின்னர், அந்த இரண்டு டால்பின்களும் சந்தோஷமாய் நீந்தத் தொடங்கின. 

டால்பினுக்கு மனிதன் ஆபரேஷன் - தெர்மகோல் ஐடியாஸ்

2. ப்ளே ஸ்டேஷன் கொண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் :

தொழில் பெருக, தொழில்நுட்பம் வளர உலகளவில் பல நிறுவனங்களுக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறன் அவசியம் தேவைப்பட்டது. ஆனால், சூப்பர் கம்ப்யூட்டர்களின் விலை சூப்பர், டூப்பர் உயரத்தில் இருந்தன. அதனால், சில நிறுவனங்கள் ஒரு வித்தியாச யோசனையைக் கொண்டு சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறனை வரவைத்தது. அதாவது, பல பிளேஸ்டேஷன் - 3 வீடியோ கேம்களின் பிராசஸர்களை ஒன்றிணைத்து, ஒரு  விநியோக கட்டமைப்பை ( GRID ) உருவாக்கின. இது அவர்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறனைக் கொடுத்தது. மசாசூயெட்ஸ் யூனிவர்சிட்டி முதல், அமெரிக்க விமானப்படை வரை பலரும் இந்த வகையில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை உபயோகப்படுத்துகின்றனர். அமெரிக்க விமானப்படை 1760 ப்ளேஸ்டேஷன்களைக் கொண்டு தன்னுடைய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. 

ப்ளே ஸ்டேஷன் சூப்பர் கம்ப்யூட்டர்- தெர்மகோல் ஐடியாஸ்

3. சுடு தண்ணியிலிருந்து சூட்டை உருவாக்கும் ஐஸ்லேண்ட் :

பெயருக்கேற்றார் போல் எந்நேரமும் குளிர்ச்சியாக இருக்கும் நாடு ஐஸ்லேண்ட். அதே சமயம் இயற்கையின் கொடையாக ஆங்காங்கே எரிமலைகள், நிலத்தின் அடியில் சுடு தண்ணீர் ஊற்றுகள் என இருந்தன. 1907-ல் ஒரு விவசாயி தன் நிலத்துக்கு அடியில் இருந்த சுடு நீர் ஊற்றிலிருந்து , குழாயின் வழி வீட்டுக்குக் கொண்டுவந்து அதன் மூலம் வீட்டை மிதமான வெப்பத்தில் வைத்திருப்பது, அந்த சூட்டைக் கொண்டே சமைப்பது போன்ற வேலைகளைச் செய்தார். இதை முன்னுதாரணமாகக் கொண்டு பலரும் இதை செய்யத் தொடங்க, இன்று ஐஸ்லேண்ட் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடாக மாறியிருக்கிறது. 

ஐஸ்லேண்ட் - தெர்மகோல் ஐடியாஸ்

4. தற்கொலைகளைக் குறைத்த நீல விளக்குகள் :

ஜப்பானின் டோக்கியோ நகரின் ரயில் நிலயங்களில் தற்கொலைகள் நடப்பது தினம், தினம் கூடிக் கொண்டேயிருந்ன. அதனைத் தடுக்கவும், கண்காணிக்கவும் போதுமான காவலர்களும் அங்கில்லை. யாரோ ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே சுழலும் நீல விளக்குகளை அமைத்தனர். நீல நிறம் மனதுக்கு அமைதியை கொடுக்கக் கூடியதாகவும், அது காவல்துறையின் அடையாளமாகவும் இருக்கும் என்று சொன்னார்கள். சொன்னபடியே, விளக்குகள் பொருத்தப்பட்டதற்குப் பிறகு, தற்கொலை எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

தற்கொலை குறைத்த நீல விளக்கு - தெர்மகோல் ஐடியாஸ்

5. கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியைப் பெற்ற கிராமம் :

இத்தாலியின் வடக்கிலிருக்கும் சிறு கிராமம் விகனெல்லா. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அடியில் அமைந்திருப்பதால்,  அதனுடைய பூகோள நிலைப்படி, வருடத்தில் 83 நாள்கள் ( நவம்பர் 11 - பிப்ரவரி 2 ) இங்கு மொத்தமாக வெயிலே வராத நிலை ஏற்படுகிறது. இதை மாற்ற ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு யோசனையை செயல்படுத்தினர். அதாவது மலையின் உச்சியில் ஒரு பெரிய கண்ணாடியை வைத்து, அதில் பட்டு  சூரிய ஒளி தங்கள் கிராமத்தின் பக்கமாக விழும்படி செய்தனர். அவர்களின் கிராமமும் இருட்டிலிருந்து விடுபட்டது.

கண்ணாடியில் சூரிய ஒளி - தெர்மகோல் ஐடியாஸ்

6. குழந்தைகளின் விளையாட்டு, ராணுவத்துக்கான பயிற்சியாக மாறியது :

சில்லி ஸ்ட்ரிங்க்ஸ் ( Silly Strings ) என்பது அமெரிக்க குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. பொம்மை துப்பாக்கியிலிருந்து ஒருவித மெல்லிய கம்பி போன்றவை வெளிவரும். அதைத் தொடர்ந்து சுடும்போது , அது நம்மைச் சுற்றி சிக்கலாக உருவாகும். போர்க்களங்களில் கம்பிகளின் சுருக்குகளில் மாட்டிக் கொள்ளும் ராணுவ வீரர்களுக்கு அதிலிருந்து விடுபட, இந்த பொம்மை துப்பாக்கிக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது. இது நடந்தது அமெரிக்க ராணுவத்தில். 

ராணுவப் பயிற்சி - தெர்மகோல் ஐடியாஸ்

7. ஒட்டுமொத்த காவலர்களையும் டிஸ்மிஸ் செய்த அதிபர் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜியார்ஜியா நாட்டில் டிராபிக் போலீஸின் அட்டூழியங்கள் படு மோசமாக இருந்தன. எங்குப் பார்த்தாலும் லஞ்சம், ஊழல் என சீர்கெட்டிருந்தது. அப்போது , புதிதாகப் பொறுப்பேற்றிருந்த அதிபர் மிகாயில் சாகஷ்விலி ஒரு யோசனையை முன்வைத்தார். தன் நாட்டில் பணியிலிருக்கும் 30 ஆயிரம் டிராபிக் போலீஸையும் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டார். இந்த யோசனையினால், மொத்த நாட்டின் சட்ட ஒழுங்கும் சீர்குலையும் என்று எல்லோரும் சொன்ன நிலையில், துணிந்து தன் முடிவை எடுத்தார். அதேபோல், அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு புதியவர்களை நியமிக்கும் அந்த 3 மாத காலமும் நாடு முழுக்க அத்தனை அமைதி நிலவியது. 

காவலர்கள் டிஸ்மிஸ் ஜார்ஜியா - தெர்மகோல் ஐடியாஸ்

8. புலியை ஏமாற்ற இரு முகம் :

1980களில் இந்தியாவின் கங்கை டெல்டா பகுதியில் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கும் வங்காளப் புலிகள் பெருமளவு தொல்லைக் கொடுத்து வந்தன. புலிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள வெளியே நடமாடும்போது, பின்னந்தலையில் ஒரு மாஸ்க்கை அணிந்து சுற்ற ஆரம்பித்தார்கள். இந்த இருமுகங்களைக் கண்டு புலி குழப்பமடைந்ததாகவும், இதனால் மனிதர்கள் மீது புலிகள் தாக்குவது பெருமளவு குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

புலி ஏமாற்ற இருமுகம் - தெர்மகோல் ஐடியாஸ்

 

ஒரு வேளை தெர்மகோல் ஐடியாவும், பக்கெட் ஐடியாவும் வெற்றி பெற்றிருந்தால் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும்....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்