வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (25/07/2017)

கடைசி தொடர்பு:13:55 (25/07/2017)

நாம் முட்டாள்களாக்கப்பட்ட கதை..! கண்முன்னே அழிக்கப்படும் எண்ணூர் #SaveEnnore

இதை ஒரு கதையாகப் படியுங்கள். 

முதல் கதை - முன்கதை. 

சென்னையின் வடக்கிலிருக்கும் எண்ணூர் பகுதி. அங்கு கடலில் கலக்க ஆர்ப்பரித்து வருகின்றன கொசஸ்தலை ஆறும், ஆரணி ஆறும். அது கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியைத் தான் " எண்ணூர் க்ரீக் " ( Ennore Creek  ) என்று ஆங்கிலத்திலும், " எண்ணூர் கடற்கழி" என்று தமிழிலும் சொல்கிறோம். கிட்டத்தட்ட இந்த சிற்றோடை 16 கிமீ நீளம், 6,500 ஏக்கர் பரப்பளவு என  பரந்து விரிந்திருக்கிறது. மீனவர்கள் இங்கு மீன் பிடிப்பர். நீர்ச்சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. பெரு வெள்ளங்களின்போது வெள்ள நீர், ஊருக்குள் புகாமல் தடுக்கும் அரண் இந்த கடற்கழி. சுனாமி போன்ற பேரலைகளின்போதும், மிக முக்கிய அரணாக செயல்படக் கூடியது. 

எண்ணூர் க்ரீக் - கடற்கழி

வழக்கமான கதைதான். இவ்வளவு உயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியை வழக்கம்போல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் சில அக்கிரமக்காரர்கள். சோகம் என்னவென்றால், ஆக்கிரப்பு செய்திருப்பது அனைத்துமே அரசு நிறுவனங்கள்தான். இந்த ஆக்கிரமிப்பிற்காக மிகப் பெரிய ஏமாற்று வேலையைச் செய்திருக்கிறது 'தமிழ்நாடு கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம்'  ( Tamilnadu State Coastal Zone Management Authority ). மிகப் பெரிய ஏமாற்று வேலை என்றால்...  உங்களையும், என்னையும் , நம்மையும் மிகப் பெரிய முட்டாள்களாக்கியிருக்கிறது இந்த ஆணையம். 

இரண்டாவது கதை - நாம் முட்டாள்கள் ஆன கதை

உயர் அலை எழும் பகுதியை ஒட்டியிருக்கும் 500மீ தூர கடற்கரை மற்றும் கடலின் அருகே இருக்கும் சிற்றோடைகள் , கடற்கழிகள் ஆகியவற்றின் 100மீ தூர கரையை  'கடலோர கட்டுப்பாட்டு மண்டலம்'  ( Coastal Regulation Zone - CRZ ) என்று சொல்கிறார்கள்.இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டு இதை CRZ 1, CRZ 2, CRZ 3 மற்றும் CRZ 4 என நான்கு வகைப்படுத்துகின்றனர். இதில் நம் எண்ணூர் CRZ - 1ன் கீழ் வருகிறது. அதாவது, மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. 

எண்ணூரில் காமராஜர் துறைமுகம் அமைந்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அமைந்திருக்கிறது. முக்கியமாக, வள்ளூர் அனல்மின் நிலையம் (Vallur Thermal Power Plant) இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு அரசு சார் நிறுவனங்களுமே அந்தப் பகுதியின் உயிர்ச்சூழலைக் கெடுக்கும் விதமாக, கடற்கழி ஆக்கிரமிப்பு தொடங்கி சாம்பல் கழிவுகள் உட்பட கழிவுகளை நீர் நிலைகளில் கலப்பது என பல செயல்களைச் செய்து வருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதி மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

எண்ணூர் க்ரீக் - Ennore Creek

இந்தப் பிரச்னைகளை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, ஜேசு ரத்தினம் எனும் சூழலியலாளர் மூன்று வருட தொடர் போராட்டத்துக்குப் பிறகு, 2009ல்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எண்ணூர் பகுதியின் CRZ - 1 வரைபடத்தைக் கேட்டு வாங்குகிறார். அது 1996ல் வடிவமைக்கப்பட்டு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். 

அடுத்து, இந்த வருடம் (2017), சென்னையைச் சேர்ந்த சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராம் அதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதே எண்ணூர் வரைபடத்தைக் கேட்டு வாங்குகிறார். அவருக்கு அதிர்ச்சி... அதில் 16 கிமீ நீளமுள்ள " எண்ணூர் கடற்கழி"யைக் காணவில்லை. அதே சமயம், கடற்கழி இல்லாத இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து காமராஜர் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதியளிக்கிறது, தமிழ்நாடு கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம்.

ஏற்கெனவே, அனுமதியே இல்லாமல் 1090 ஏக்கர் பரப்பளவை காமராஜர் துறைமுகம் ஆக்கிரமித்துள்ளது. இப்போது மீண்டும் ஆயிரம் ஏக்கர் விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆக்கிரமித்திருப்பது முழுக்கவே 6,500 பரப்பளவிலிருந்த எண்ணூர் கடற்கழி பகுதியைத்தான். ஒரு மிக நீளமான ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கழிவுகளைக் கொட்டி சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ennore Creek - அழியும் எண்ணூர் கடற்கழி 

சரி... அடுத்தப் போராட்டம். அது எப்படி, ஒரே இடத்தின் வரைபடம் ... 2009ல் கடற்கழி இருக்கிறது, 2017ல் இல்லை ?! எப்படி சாத்தியமானது?!. இந்தக் கேள்விக்கு  தமிழ்நாடு கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், டாக்டர். மல்லேஷப்பா ஒரு பதிலளிக்கிறார்.

அதாவது, "1997ல் எண்ணூர் பகுதியில் ஹைட்ரோகிராபர் (HydroGrapher) எனச் சொல்லப்படும் நீர்பரப்பு வரையாளரைக் கொண்டு, இடத்தை அளந்து புது வரைபடம் வரையப்பட்டது. இதற்கு மத்திய அரசு அங்கீகாரமும் பெறப்பட்டது " என்று சொல்கிறார். 

துண்டுபிரசுரம் விநியோகித்த மாணவர் மீதே குண்டர் சட்டத்தைப் போடும் அரசாங்கத்தின் சொற்களை யாரும் அப்படியே நம்பிட முடியாது அல்லவா ? எனவே, அடுத்ததாக தகவல் அறியும் சட்டத்தின் மற்றுமொரு கேள்வியை முன்வைக்கிறார் நித்யானந்த் ஜெயராம். 

" எதன் அடிப்படையில் இந்த வரைபடம் மாற்றியமைக்கப்பட்டது ? எந்த ஹைட்ரோகிராபர் இதை ஆராய்ச்சி செய்தார்? போன்ற விவரங்கள் வேண்டும்" என்ற கேள்விக்கும் சமீபத்தில் அவருக்குப் பதில் கிடைத்தது. அதில், " மத்திய அரசு எந்த ஹைட்ரோகிராபரையும் அனுப்பவில்லை, புதிய வரைபடம் எதையும் அங்கீகரிக்கவில்லை " என்று பதில் சொல்லியுள்ளது. 

அப்படியென்றால், 1997ல் மறுச்சீரமைக்கப்பட்டதாக சொல்லப்படும் வரைபடம் முற்றிலும் பொய் என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொய் தகவல்களைக் கொடுத்துள்ளது மிகப் பெரிய குற்றம். 

எண்ணூர் - அழிவின் விளிம்பில்

இந்தப் பொய்யான வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு, அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வரைபடத்தின் கடற்கழி  பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும், எண்ணூர் கடற்கழியில் கலக்கப்படும் சாம்பல் கழிவுகளை சுத்தப்படுத்தி, இனி எந்தக் கழிவுகள் கலக்கப்படாமல் அந்த நீர் நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் சூழலியலாளர்கள். 

மூன்றாவது கதை - முக்கியக் கதை  "- சென்னையைக் காப்பாற்ற , எண்ணூர் கடற்கழியைக் காப்பாற்றுங்கள் "

கொசஸ்தலை ஆறு நொடிக்கு 1,25,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலை விட அதிகம். 2015ல் அடையாறு வெள்ளத்தையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. எண்ணூரில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் சென்னையின் முக்கியப் பகுதிகள்  'நீர் கல்லறையாக' மாறும் வாய்ப்புகள் அதிகம். 

இன்று, இந்த நாள், இந்த நிமிடம் நாம் நலமாக இருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமல்ல. நாளை, நாளை மறுநாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த நூற்றாண்டு வாழும் நம் சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பது மிக முக்கியம். காரணம், 

" இந்த பூமி நம் மூதாதையர்களின் சொத்தல்ல, அது நம் எதிர்கால சந்ததியிடமிருந்து பெறப்பட்டிருக்கும் கடன்." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்