Published:Updated:

ஆண்டாள் படியுங்கள், ஆண்டவனை எளிதாக உணரலாம்

ஆண்டாள் படியுங்கள், ஆண்டவனை எளிதாக உணரலாம்
ஆண்டாள் படியுங்கள், ஆண்டவனை எளிதாக உணரலாம்

ஜூலை 26-ம் தேதி அதாவது நாளை வரும் விஷேசம் வைணவர்களுக்கு மட்டுமல்ல, அது தமிழுக்கே மிக மிக சந்தோசமான நாள்தான். ஆம், சூடிக்கொடுத்து அரங்கனோடு தமிழையும் ஆண்ட ஆண்டாளின் திரு அவதார திருநாள்தான் அன்று. திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனும் இரண்டு நூல்களால் பாற்கடல் உறையும் பரந்தாமனை மட்டுமல்லாமல், தமிழ்ச்சுவை தேடி அலையும் எளிய மனிதர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர் ஆண்டாள். கலியுகத்தின் நள ஆண்டில் ஆடி மாத சுக்லபக்ஷ சனிக்கிழமை நாளில் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் பெரியாழ்வார் உருவாக்கிய துளசி தோட்டத்தில் பூதேவியின் அம்சமாகத் தோன்றினார் தமிழ்க்கோதை. கோதை என்றால் பூமாலை என்றும் வாக்கை தருபவள் என்றும் தமிழ் கூறுகிறது. இரண்டு அர்த்தமும் இவருக்கு மிக சரியானது என்றே அவரது வாழ்க்கை கூறுகிறது. அரங்கனுக்கு மாலையான கோதை நம் அன்னை தமிழுக்கு அநேக வாக்கையும் அளித்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண், திருமாலுக்குத் தம்மை ஒப்படைத்த பெண்களில் இவரே முன்னோடி என்பதையெல்லாம் தாண்டி தமிழ் இலக்கியத்தில் ஆண்டாள் அற்புதமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்றே போற்றப்படுகிறார். பதினைந்து வயதிலேயே அரங்கனோடு கலந்து விட்ட ஆண்டாள் இத்தனை அழகான பாடல்களை எழுதியுள்ளார் என்பது திருமாலின் கிருபை என்றுதான் சொல்ல வேண்டும்.

சங்கத் தமிழ்மாலை என்று தமிழ் கொண்டாடும் திருப்பாவைப் பாடல்கள் ஆண்டாளை அழியா நிலையில் என்றுமே வைத்துள்ளது. முப்பது தேன்சொட்டும் பாடல்களால் ஆண்டாள் அத்தனை பேர்களையும் ஆள்கிறார். ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்த திருப்பாவைப் பாடல்கள் ஆன்மிக தத்துவங்களை மட்டும் சொல்லவில்லை. அந்தக் காலத்து வாழ்க்கை முறை, அருமையான அறிவியல் கருத்துகளையும் சொல்கிறது. உதாரணமாக மழை எப்படிப் பெய்கிறது என்று கோதை சொன்னதை இன்றைய வானிலை நிபுணர்கள் வியந்து போற்றுகிறார்கள். 'ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்' பாடல் ஒன்று போதும் அறிவியலும், தமிழும், அரங்கன் காதலும் பின்னிப்பிணைந்த ஜாலத்தை சொல்லும். ஆண்டாளின் சொல்நயமும் புதுமையும் எட்டாம் நூற்றாண்டில் இது எழுதப்பட்டது என்பதையே மறக்கச் செய்கிறது. அத்தனை புதுப்புது வார்த்தைப் பிரயோகங்கள் ஆண்டாளால் அருளப்பட்டது. கீச்கீச் எனும் சொல் எல்லாம் ஆண்டாளுக்கு முன்னர் யாருமே உபயோகிக்கவில்லை என்றே சொல்லலாம். ஆதி காலம்தொட்டே நடந்து வரும் தமிழ்ப்பெண்களின் அதிகாலை நீராடலை திருப்பாவை வந்த பின்னர்தான் புனிதமான விஷயமாக மாற்றிவிட்டது. மார்கழி அதிகாலையில் நீராடச் சென்ற ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரே ஆயர்பாடியாகவும், தானே ராதையாகவும், வடபத்ரசாயி கிருஷ்ணராகவும் எண்ணிப் பாடினார். ஆண்டாளின் இந்தத் திருப்பாவை பாடலை பாடிப்பாடி சொக்கிப்போனவர் ஸ்ரீ ராமானுஜர். இதனாலே தன்னை திருப்பாவை ஜீயர் என்று அழைத்தால் மகிழ்ந்து போவாராம். பெரியவாச்சான் பிள்ளை, மணவாள மாமுனிகள், ஜெகந்நாத ஆச்சாரியார் போன்ற பல மஹான்கள் இந்தத் திருப்பாவைக்கு நேயர்களாகவே இருந்தனர். முப்பது பாடலையும் படித்துப்பாருங்கள். ஆண்டாளுக்கு அடிமையாகவே மாறிவிடுவோம்.

திருப்பாவை தேன்மழை என்றால், நாச்சியார் திருமொழி சர்க்கரை பந்தல் எனலாம். 143 பாடல்களைக் கொண்ட நாச்சியார் திருமொழி, கண்ணனை அடைவது ஒன்றே தமது வாழ்நாள் லட்சியம் என ஆண்டாள் கூறும் பாடல்களாகவே உள்ளது. "வாரண மாயிரம் சூழவ லம்செய்து' 'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ' போன்ற பாடல்கள் படிப்பவர் நாவில் தித்திப்பை வரச்செய்யும் இனிமை கொண்டவை. ஆண்டாளின் வாழ்வும் தமிழ் படைப்புகளும் ஆச்சர்யமானவை. பிறந்து, வீணே வாழ்ந்து மடியும் நிலைக்கு எதிரான ஆண்டாள், தமது சொந்த விருப்பங்களை மட்டும் பாடல்களில் சொல்லாமல், நாடும் நாட்டு மக்களும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறார். நலமாக இருக்க தெய்வ பக்தி ஒன்றே வழி என்றும் காரணம் சொல்கிறார். ஆண்டாளின் தமிழ் சுயநலமில்லாத பாடல்களைக் கொடுத்தது. பிறர் நலத்துக்குப் பாடப்படும் எந்தப் படைப்பும் சிரஞ்சீவித்தன்மை பெற்றுவிடும் அல்லவா? 

ஆண்டாள் மட்டுமல்ல, அவரது பாடல்களும் அழியாத தன்மை கொண்டதே. இந்த ஆண்டாள் திரு அவதார நாளில் அவரை வணங்குவதோடு நிறுத்தி விடாமல், அவர் எழுதிய பாடலையும் படித்துப் பாருங்கள். தமிழ் இத்தனை அழகா என்று வியந்து போவீர்கள்! பகவானையே எழுப்பிய அந்த தெய்வப்பெண் உங்கள் விருப்பங்களை கேட்கச்செய்வார். ஆண்டாளைப் படியுங்கள், ஆண்டவனை எளிதாக உணரலாம்.