நான்-ரிமூவபிள் பேட்டரி மொபைல்களைப் பயன்படுத்தலாமா? ப்ளஸ் மைனஸ் என்ன? | Pros and Cons of Mobile Phones with Non-Removable Batteries

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (31/07/2017)

கடைசி தொடர்பு:10:45 (31/07/2017)

நான்-ரிமூவபிள் பேட்டரி மொபைல்களைப் பயன்படுத்தலாமா? ப்ளஸ் மைனஸ் என்ன?

டச் ஸ்க்ரீன் மொபைல் போன் அறிமுகமான காலகட்டத்தில், அதை வாங்க பலபேர் சிறிது தயக்கம் காட்டினர். ஆனால் இன்று டச் ஸ்க்ரீன் இல்லாத பட்டன் கீபோர்டு மொபைல் போன்கள் பேக்கப்பிற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. நான்-ரிமூவபிள் பேட்டரி உள்ள மொபைல் போன்களின் கதையும் இதுதான்.

Smartphone Battery

நான்-ரிமூவபிள் பேட்டரி மொபைல் போன்கள் அறிமுகமானபோதும், ஏன் இன்றும்கூட பலரும் அதை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், பெரும்பாலான மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் நான்-ரிமூவபிள் பேட்டரி கொண்ட போன்களையே தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

பேட்டரி மற்றும் டிவைஸ்களுக்கு இடையேயிருக்கும் தேவையில்லாத இடைவெளியைக் குறைப்பதால், நான்-ரிமூவபிள் பேட்டரி கொண்ட டிவைஸ்கள் பொதுவாக ஸ்லிம்மாக இருக்கின்றன. பயனாளர்களால் கழற்ற முடியாது என்பதால் டேமேஜ் ஏற்படாதவகையில் இது பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. காரணம் ஒவ்வொரு முறையும் பேட்டரியைக் கழற்றி மாட்டும்போது தேவையில்லாத தூசி மற்றும் ஈரப்பதம் மொபைல் போனுக்குள் செல்லாது. மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், பேட்டரியைத் திடீரெனக் கழற்றுவதால் ஷார்ட் சர்க்யூட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. நான்-ரிமூவபிள் பேட்டரி கொண்ட மொபைல் போன்களில் இந்தப் பிரச்னை இல்லை.

நான்-ரிமூவபிள் பேட்டரி கொண்ட மி 4 மொபைல்

மொபைல் போன் உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் தந்திரம்தான் இது என்பது பலரின் குற்றச்சாட்டு. பொதுவாகவே பேட்டரியின் திறன் சில வருடங்களில் குறைவது வழக்கம். ரிமூவபிள் பேட்டரி என்றால், வாடிக்கையாளர்களே புதிய பேட்டரி மாற்றிப் பயன்படுத்துவர். நான்-ரிமூவபிள் பேட்டரி உள்ள மொபைல் போனில் இது சாத்தியமில்லை. சர்வீஸ் சென்டர் சென்று பேட்டரியை மாற்றுவதற்கு அதிக நேரமும், அதிக செலவும் ஆகுமென்பதால், வாடிக்கையாளர்கள் புதிய மொபைல் போன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் செயற்கையாகவே மொபைல் போனின் ஆயுள்காலம் குறைக்கப்படுகிறது என்பது பலரின் குற்றச்சாட்டு.

iPad2

ஆப்பிள் சாம்ராஜ்யத்தை வளர்த்தெடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் தான் இந்த ஐடியாவை முதல்முதலாக விதைத்தவர். ஐபாட் 2 மாடலில்தான் முதல்முதலாக வாடிக்கையாளர்களால் ரிமூவ் செய்யமுடியாத அளவுக்கு, உள்புறத்திலேயே பேட்டரி சீல் செய்யப்பட்டது. ஐபாட் 2 அறிமுகமானபோது இது பெரிய குறையாக விமர்சிக்கப்பட்டது என்றாலும், விற்பனையில் வழக்கம்போல் அந்த ஐபாட் மைல்கல்லை எட்டியது.

நான்-ரிமூவபிள் பேட்டரி கொண்ட மொபைல் போன்களுக்கென சில சிறப்புகள் இருந்தாலும், சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இவைகளுக்கு ரீ-சேல் வேல்யூ கிடையாது. சில வருடங்கள் பயன்படுத்தியதும் பேட்டரியின் திறன் குறைந்துவிடுமென்பதால், வேறு எவரும் இதை வாங்க முன்வருவதில்லை. வாடிக்கையாளர்களாலேயே சரிசெய்யக்கூடிய பேட்டரி சார்ந்த சின்னச்சின்ன பிரச்னைகளுக்கும், சர்வீஸ் சென்டருக்குச் செல்லவேண்டும். இதனால் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் செய்வதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகும் என்பதும் உண்மை. 'ஆண்ட்ராய்டு மொபைல்கள் என்றாலே ஸ்ட்ரக் ஆகும்' என்பது பொதுவாக இருக்கும் குற்றச்சாட்டு. சில நேரத்தில் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி ஆகும்பட்சத்தில், இந்தவகை மொபைல்களில் பேட்டரியைக் கழற்றி ரீபூட் செய்ய முடியாதென்பது மிகப்பெரிய குறை. சார்ஜ் தீரும்வரை மொபைலைப் பார்த்தபடி காத்திருக்க வேண்டும்.

எந்தவொரு பொருளுக்கும் சரிசமமான நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும். ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னதுபோல... மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறன்தான் புத்திசாலித்தனம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்