வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (26/07/2017)

கடைசி தொடர்பு:14:15 (26/07/2017)

விஷம் உள்ளே... தங்கம் வெளியே... தங்கம் கக்கும் ஆச்சர்ய பாக்டீரியா!

தங்கம் பாக்டீரியா

இது நிச்சயம் குழந்தைகளுக்காக சொல்லப்படும் விசித்திரக் கதைகளில் ஒன்றல்ல! மேலே சேகரிக்கப்பட்டுள்ள தங்கம் ஏதோ சுரங்கம் அல்லது ஓடும் நதியில் இருந்து சேகரிக்கப்பட்டது என எண்ண வேண்டாம். இந்தத் தங்கத்தை தயாரித்தது ஒரு வகை பாக்டீரியா என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள். இந்த வகை பாக்டீரியாவானது நச்சுத்தன்மை கொண்ட சூழ்நிலையில் இருந்துகொண்டே 24 காரட் தங்கத்தை உருவாக்குகிறது. பல வருடங்களாக செய்தியில் இருக்கும் இது, சமீபத்தில் கணிசமான அளவிற்கு தங்கத்தை உருவாகியுள்ளது. இதற்கு பின்னாலிருக்கும் அறிவியலை அறிந்துக் கொள்வோமா?

எப்படி நிகழ்கிறது? 

Cupriavidus metallidurans என்றழைக்கப்படும் இந்த வகை பாக்டீரியாக்களின் கதை ‘தொட்டதெல்லாம் பொன்னாகிறது’ கதையைப் போலதான். இது நஞ்சைத் தங்கமாக மாற்றுவது ஒரு தற்காப்பு முயற்சியே. தங்க அயனிகள் தண்ணீரில் கரையும்போது நஞ்சாய் மாறி போகிறது. இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள delftibactin A என்ற புரதத்தை உருவாக்குகிறது. இது ஒரு கவசமாக செயல்பட்டு நஞ்சு கலந்த அயனிகளை, பாதிப்பு இல்லாத தங்கத் துகள்களாக மாறி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது. இது 99.9% தூயத் தங்கமாக இருப்பதே பெரிய ஆச்சர்யம். 

தங்கம் பாக்டீரியா

இது நுண்ணுயிர் ரசவாதம் 

இந்த ஆராய்ச்சிக்காக ஒரு சிறிய பரிசோதனை கூடத்தை உருவாக்கி இருப்பவர்கள் கஸெம் காஷெஃபி (Kazem Kashefi), நுண்ணுயிரியல் மற்றும் மூலக்கூறு மரபியல் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் ஆடம் பிரவுன் (Adam Brown), எலெக்ட்ரானிக் ஆர்ட் மற்றும் இன்டர்மிடியாவின் இணை பேராசிரியர். இது குறித்து காஷெஃபி பேசுகையில், “கோல்டு குளோரைடு வாங்கவும் செலவாகும் என்றாலும் ஒன்றுக்கும் உதவாத அதிலிருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்தப் பாக்டீரியா. நாங்கள் உருவாக்கியிருக்கும் இந்தப் பரிசோதனை கூடத்தின் பெயர் ‘The Great Work of the Metal Lover’. இதில் பாக்டீரியாவை வைத்துவிட்டு, கோல்ட் குளோரைடை உள்ளே செலுத்தினால் மீதி வேலையைப் பாக்டீரியா பார்த்துக்கொள்ளும். ஒரே வாரத்தில் அது அனைத்தையும் தங்கமாக மாற்றி விடுகிறது. ‘நுண்ணுயிர் ரசவாதம்’ என்றழைக்கப்படும் இது இயற்கையிலேயே நிகழும் ஒன்றுதான்” என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். 

தங்கம் பாக்டீரியா

இதனால் என்ன மாற்றம் வரும்? 

அந்தப் பாக்டீரியாவால் தங்கம் உருவாகத் தேவைப்படுவது கோல்டு குளோரைடு. தங்கத்தை விட அதன் விலை குறைவுதான் என்றாலும், அதை வாங்க கணிசமான பணம் தேவை. அதனால் இந்த பாக்டீரியாவைக் கொண்டு நிறையத் தங்கம் உருவாக்கலாம் என்பது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்வதனால் பின்னாளில் இந்தப் பாக்டீரியா அல்லது அது உருவாகும் புரதத்தைக் கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தைப் பிரித்து எடுக்க முடியும். கனிம வளங்கள் கொண்ட நதிகள் மற்றும் நீரோடைகளைக் கண்டறிய முடியும் என்று நம்பிக்கை அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற ரசவாதிகள், சாதாரண கற்களைத் தங்கமாக மற்றும் ‘ஃபிளாஸாபர் ஸ்டோன்’ ஒன்றைத் தேடி அலைந்தார்கள் என்று கூறுவார்கள். ஆனால் அது அவர்களின் கைகளுக்கு சிக்கவே இல்லை. ஒருவேளை அவர்கள் கற்களை விடுத்து, பாக்டீரியாவில் தேடி இருந்தால் நிச்சயம் சாதித்து இருக்கலாமோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்