வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (25/07/2017)

கடைசி தொடர்பு:21:11 (25/07/2017)

ஆக்டிவா வாங்கப் போறீங்களா? இதோ ஹோண்டாவில் இருந்து இன்னொரு ஸ்கூட்டர்! #cliq

இப்போதைக்கு இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆக்டிவாதான். ஹோண்டாவை நிமிர வைத்து, செம ஆக்டிவ் ஆக இருக்க வைத்ததும் ஆக்டிவாதான். இப்போது ஆக்டிவாவுக்குப் போட்டியாக, ஹோண்டாவில் இருந்தே இன்னொரு ஸ்கூட்டர் வரவிருக்கிறது. க்ளிக் என்னும் அந்த ஸ்கூட்டர், நேற்று இந்தியாவில் லாஞ்ச் ஆகிவிட்டது. க்ளிக் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ.

டிசைனில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்கள் க்ளிக் டிசைனர்கள். தூரத்தில் இருந்து பார்த்தவுடனே ‘க்ளிக் மாதிரியிருக்கே’ என்று எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் யூனிக்கான டிசைனில் இருக்கிறது க்ளிக். 

க்ளிக்

 

உயரமான ஆண்களும் இதை ஈஸியாக ஓட்டும் வகையில் இதன் ஃபுட் போர்டு அகலமாக இருக்கிறது. சில ஸ்கூட்டர்கள் ஓட்டும்போது, முழங்கால் முன்பக்க அப்ரானில் இடிக்கும். இதில் முன்பக்கம் உயரமாகவும், கீழே தட்டையாகவும் வடிவமைத்திருக்கிறார்கள். அனலாக் ஸ்பீடோ மீட்டர் டிசைன் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இருப்பதிலேயே சீட் அகலமான ஸ்கூட்டர் ஆக்ஸஸ்தான். இதில் ஆக்ஸஸுக்கு இணையான நீள/அகலத்தில் சீட் இருப்பதால், கணவன்-மனைவி-குழந்தை என்று ஒரு அழகான குடும்பம் வசதியாகப் பயணிக்கலாம். சீட்டின் உயரம் 743 மிமீ. உயரம் குறைவானவர்களுக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். 

வழக்கம்போல், சீட்டுக்கு அடியில் இடவசதி ஓகே! ஒரு சின்ன ஹெல்மெட் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் உள்ளே நுழையாது. ஆனால், உள்ளே போனை சார்ஜ் செய்வதற்காக USB போர்ட் இருக்கிறது. போனை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயணிக்கலாம். பின் பக்கம் ரெயில் கிராப், மெட்டல் ஓகே ரகம்தான். முரட்டுத்தனமான ஆசாமிகளுக்கு இது செட் ஆகாது. அதேபோல், முன் பக்கம் சில ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல், பைகள் மாட்டிக்கொள்ள ஹூக் வசதி இதில் இல்லை. மார்க்கெட் போய் காய்கறி ஷாப்பிங் பண்ணும் குடும்ப இஸ்திரிகளுக்கு  இது சிக்கல்தான்.

இதை செம ஈஸியாக ஹேண்ட்லிங் செய்யலாம். காரணம், இதன் எடை. வெறும் 102 கிலோதான். இது சாதாரண ஆக்டிவாவைவிட 6 கிலோ குறைவு. வெயிட்டான  பார்ட்டிகள், ஈஸியாகத் தூக்கி நிறுத்தி பார்க் செய்துவிடுவார்கள். அதேபோல், ஆக்டிவாவைவிட பெட்ரோல் டேங்க்கும் சிறிசு. இதில் இருப்பது வெறும் 3.5 லிட்டர்தான். ஆக்டிவாவில் 5.3 லிட்டர் கொள்ளளவு. க்ளிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் தருகிறது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் 140 கி.மீ-க்கு ஒருமுறை டேங்க்கை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க சிட்டி டிராவலுக்கு என்கிறது ஹோண்டா. அதனால் டேங்க்கில் கவனம் செலுத்தவில்லையாம்.

 

க்ளிக்cliq

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் இல்லை; சாதாரண ஹைட்ராலிக்தான். மற்றபடி ஆக்டிவாவில் இருக்கும் அதே 110 சிசி இன்ஜின்தான். 8..04 குதிரை சக்தி இருக்கிறது. இதன் சேஸியும் ஆக்டிவாவில் இருப்பதுபோலவே அண்டர்போன்-டைப் யூனிட். ஆனால், ஆக்டிவாவைவிட வீல்பேஸ் 3 மீமீ நீளம் அதிகம். அதாவது, முன் பக்க வீலுக்கும் பின் பக்க வீலுக்கும் உள்ள இடைவெளி. சில ஸ்கூட்டர்களில் முன் பக்கமும் பின் பக்கமும் வீல்களின் அளவு வேறு வேறாக இருக்கும். க்ளிக்கில் இரண்டு பக்கங்களும் 10 இன்ச் வீல்கள். வழக்கம்போல் ட்யூப்லெஸ் டயர்கள்தான். CEAT டயர்கள், ஏகப்பட்ட பட்டன்களோடு மிரட்டலாக இருக்கும். ரோடு கிரிப்புக்கு இது அருமையான சாய்ஸ். பெண்கள் ஸ்கூட்டர் என்பதால், டிஸ்க் தேவையில்லை என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ, இரண்டு பக்கமும் 130 மிமீ டிரம் பிரேக்ஸ்தான். இதில் ஹோண்டாவின் ஃபேவரைட்டான கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. அதாவது, வேகமாகச் செல்லும்போது திடீரென பிரேக் பிடிப்பதில் பதற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் எந்த பிரேக்கைப் பிடித்தாலும் இரண்டு வீல்களுக்கும் பவர் அப்ளை ஆகி, ஸ்கூட்டர் நிற்கும். 

ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் என்று இரு வேரியன்ட்களில் வருகிறது க்ளிக். ஆக்டிவாவின் புல்லட் ப்ரூஃப் ஃபார்முலாவைத்தான் இதன் கட்டுமானத்துக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். புல்லட் ப்ரூஃப் என்றதும், அரசியல்வாதிகளுக்கு இருப்பதுபோல் குண்டு துளைக்காத உலோகத்தில் தயாரித்திருப்பார்கள் என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. எதிலாவது இடித்தால், அவ்வளவு சீக்கிரம் டேமேஜ் ஆகாமல் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று சுற்றி வளைக்காமல் சொல்கிறது ஹோண்டா. 

ஏற்கெனவே ஹோண்டாவில் இருந்து நவி என்னும் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வருகிறது. பார்ப்பதற்கு கார்ட்டூன் ஸ்கூட்டர்போல இருந்ததால், பலரும் இதற்கு வாக்களிக்கவில்லை. க்ளிக்குக்கும் அதே தவறு நேர்ந்து விடாமல் ஹோண்டா பார்த்துக் கொள்ள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்