Published:Updated:

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் 'கெடு’

Vikatan Correspondent
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் 'கெடு’
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் 'கெடு’
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் 'கெடு’

புதுடெல்லி:  கடந்த 2004 ம் ஆண்டு நிகழ்ந்த கும்பகோணம் பளளி தீ விபத்து தொடர்பான  வழக்கை இன்னும் 6 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று  உச்ச  நீதிமன்றம் 'கெடு’விதித்துள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டு, ஜூலை 16 ம் தேதி கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த  பள்ளியில் ஏற்பட்ட  தீவிபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பலியாயினர்.இச்சம்பவம்  தொடர்பாக வட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட 25 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 8  ஆண்டுகளாக, இந்த வழக்கு தஞ்சாவூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், தன்னை  இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்திருந்தார்.

அம்மனுவில்,தீ விபத்து சம்பவம் நடைபெறுவதற்கு 1 ஆண்டிற்கு முன்னதாகவே, தான்  அம்மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்று விட்டதாகவும், எனவே, தன்  மீது தவறில்லை எனக்கூறி, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர்  கோரியிருந்தார்.

ஆனால் பாலகிருஷ்ணன் பணியில் இருந்தபோது, பள்ளி விபத்து தடுப்பு  நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தால், இவ்விபத்தை தவிர்த்திருக்கலாம்  என்று கூறி அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை,  இன்னும் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் செசன்ஸ்  நீதிமன்றத்திற்கு  உத்தரவிட்டது. 

##~~##