வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (28/07/2017)

கடைசி தொடர்பு:13:47 (28/07/2017)

டீ, சாப்பாடு, சம்பளம் கேட்காத சினிமா அப்ரசண்டிகள்..! #Dummies

சினிமா டம்மி

எந்திரன் படத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதிலும் அந்த ‘ப்ளாக் ஷீப்” காட்சியில், 2.0 அசுரனாக நக்கலும், நையாண்டியும் கலந்து பேசி பயத்தை ஏற்படுத்துவார் ரஜினி. அந்தக் காட்சியில் ரஜினியைப் போலத் தோற்றம் கொண்ட ரோபோக்கள் நிறைய நின்றுகொண்டு இருக்கும். இவற்றுள் பெரும்பாலானவை டம்மீஸ். அதாவது ரஜினியை போன்றே செய்யப்பட்ட பொம்மைகள். ரஜினியின் முகத்தை மட்டும் CGI (Computer Generated Imagery) தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கினார்கள். சில ரஜினி ரோபோக்களை நிஜ டம்மிகளிடமிருந்து பிரதியெடுத்து வைத்து கூட்டமாக இருப்பதாக மாயாஜாலம் காட்டினார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய நோக்கம் செலவைக் குறைப்பது மட்டுமே! நினைத்துப் பாருங்கள், சினிமாவில் ஒரு வசனமும் பேசப் போவது இல்லை, ஃபிரேமிலும் அவுட் ஆப் ஃபோகஸ்தான். பிறகு எதற்குத் தேவை இல்லாமல் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு செலவை அதிகப்படுத்த வேண்டும்? 

Mannequin பொம்மைகள் 

சினிமா டம்மி

ஜவுளிக் கடை பொம்மைகள் பார்த்திருப்பீர்கள். அதற்கும் இந்த டம்மிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன இங்கே காட்சியின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப, உடையும், மேக்கப்பும் போட்டிருப்பார்கள். ஹாலிவுட் படங்களில் இவ்வகை பொம்மை டம்மிக்கள் மிகப் பிரபலம். இவ்வகை பொம்மைகளை அச்சு அசலாக நிஜத்தைப் போலவே செய்து தரும் நிறுவனங்களில் ஒன்று Inflatable Crowd Company. அதை நடத்தும் ஜோ பிக்கின்ஸ் பேசுகையில், “சில சமயம் ஒரு படத்திற்கு, ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 7,000 டம்மிகள் வரை தேவைப்படும். அனைத்தும் ஒரே மாதிரி, குறையில்லாமல் கொடுத்திருக்கிறேன், உதாரணமாக ஒரு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடப்பது போல் காட்சி என்றால், அரங்கத்தை நிரப்ப மனிதர்கள் தேவையில்லை. கை மற்றும் கால்கள் இல்லாத என்னுடைய டம்மிகளே போதும். அதற்கு உயிர் கொடுக்க காற்று அடிக்கும் பம்பு போதும். ஒரு பொம்மைக்கு காற்று அடிக்க வெறும் 12 நொடிகள்தான் ஆகும்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

ஃபோனி டம்மிகள் (Phony Extras) 

சினிமா டம்மி

சில சமயங்களில் பொம்மைகளே இல்லாமல் மொத்த கூட்டத்தையும் வெறும் CGI மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்குவார்கள். பெரும்பாலான போர்க் காட்சிகள் இப்படித்தான் எடுக்கப்படும். டைட்டானிக் கப்பல் மூழ்கும் காட்சியில் மேலே கப்பலின் தளத்தில் இருக்கும் அனைவரும் டம்மிகள் தானாம்! இதன் முக்கிய பணியே கூட்டமே இல்லாமல் பெரிய கூட்டம் இருப்பது போல் காட்டுவது தான். ஆனால், அப்படி ஒரு பெருங்கூட்டம் கொண்ட காட்சி தத்ரூபமாக வர, வெறும் டம்மிகள் மட்டும் போதாது. அந்த டம்மிகளின் இடையே நிஜ மனிதர்கள் சிலரையும் உலவ விட வேண்டும். அப்போது தான் அந்தக் காட்சிக்கு உயிரூட்ட முடியும். 

செலவைக் குறைக்கும் 

பெரும்பாலான இயக்குநர்கள் இன்னமும் கூட்டம் என்றாலும் நிஜ மனிதர்களைத் தான் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிஜ மனிதர்கள் உருவாக்கும் எனர்ஜி, ஒருவித பரபரப்பு மற்றும் சலசலப்பு, டம்மிகளில் எப்படிக் கிடைக்கும் என்பது அவர்கள் வாதம். ஆனால், நிஜ மனிதர்களை நிறுத்தினால், அவர்களுக்கு என்று தனியாக உடைகள், உணவு, சம்பளம் எல்லாம் கொடுக்க வேண்டுமே? டம்மிகள் எனும் பட்சத்தில் டீ கேட்காது, பிரேக் வேணும் சார் என்று கெஞ்சாது, ஒரு நாளைக்குப் பொம்மையின் சொந்தக்காரருக்கு வாடகை மட்டும் கொடுத்தால் போதும். அது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியால், எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் பொம்மை என்று அப்பட்டமாகத் தெரியாத அளவிற்கு டம்மிகள் அப்கிரேடு ஆகிவிட்டார்கள். 

சினிமா டம்மி

ஜோ பிக்கின்ஸின் நிறுவனம் சமீபத்தில் ஒரு பீர் விளம்பரத்திற்காக 500 டம்மிகளை செய்து கொடுத்திருக்கிறார். அவரிடம் 15,000 வகை டம்மிகள் வெவ்வேறு நாட்டு மக்களின் சாயலில் இருக்கிறதாம். வேண்டிய முகத்தையும், உடையையும் மாட்டிவிட்டு வேலைக்கு அனுப்பி விடுகிறார் பிக்கின்ஸ். 

“டம்மிகள் மனிதர்களைப் போல அல்ல, அவர்கள் கோபப்பட்டு எழுந்து போக மாட்டார்கள். சம்பளம் அதிகமாகக் கேட்கமாட்டார்கள். எப்போதும் வாயையே திறக்க மாட்டார்கள். அதுதானே நமக்கு வேண்டும்?” என்று கலாய்க்கிறார் பிக்கின்ஸ். 

காண்ட்ராக்டர் நேசமணி, “அடடே, இது அப்ரசண்டிகளுக்கும் மேலே இருக்கிறதே!” என்று இந்நேரம் பிக்கின்ஸிற்கு ட்ரங்க் கால் போட்டிருப்பார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்