வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (27/07/2017)

கடைசி தொடர்பு:16:57 (27/07/2017)

மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்குது? உங்கள் பைக்கிற்கு சூப்பர் மைலேஜ் கிடைக்க இதெல்லாம் பண்ணுங்க!

‘வ்வ்வர்ர்ரூம்’ பார்ட்டிகளுக்கு மைலேஜ் என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால், மிடில் க்ளாஸ் பட்ஜெட்காரர்கள் பைக் வாங்கும்போது கேட்கும் முதல் கேள்வி, ‘மைலேஜ் எவ்வளவுங்க?'

அதற்கு ஷோரூம்காரர்கள் சொல்லும் பதில், அது நடக்குதோ இல்லையோ,  கேட்பதற்கே அவ்வளவு இனிப்பாக இருக்கும். ‘‘இந்த பைக்ல போனீங்கன்னா, 102.3 கி.மீ கிடைக்கும். அதுவே 125 சிசினா கொஞ்சம்போல கம்மியாகும். 98.3 கி.மீ... 68.5..’’ என்று ரேடியோ ஃப்ரிக்வொன்ஸி அலைவரிசையைப்போல அள்ளிவிடுவார்கள். அப்புறம் என்ன... பைக்கை புக் பண்ணிவிட்டு, பைக்கைக் கிளப்பினால்... அவர்கள் சொல்வதில் பாதி மைலேஜ்கூட கிடைக்காது. ஷோரூம்காரர்களிடம் கேட்டால், ‘‘அது உங்க டிரைவிங் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி மாறும் சார்’’ என்று அடுத்த டெலிவரியைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

உண்மையில், மைலேஜ் விஷயத்தில் என்னதான் நடக்கிறது... கம்பெனிகள் ஏன் இப்படி மைலேஜ் விஷயத்தில் அள்ளிவிட வேண்டும்... மைலேஜை எப்படி டெஸ்ட் செய்கிறார்கள்?

பைக் வாங்கும்போது அதன் கேட்லாக்கைக் கவனித்தீர்கள் என்றால், மைலேஜ் என்ற காலத்தில் மட்டும் * (Star) வைத்திருப்பார்கள். அதாவது, 'கண்டிஷன்ஸ் அப்ளை'யாம்!  'இதை நம்பாதீங்க' என்பதுதான் இதற்கு அர்த்தம். மைலேஜ் விஷயத்தில், பைக் நிறுவனங்கள் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’யைப் பயன்படுத்துவதற்குக் காரணம், அது டெஸ்ட் செய்யப்படும் விதம் அப்படி. 

நீங்கள் நினைப்பதுபோல, ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பியோ, ரிஸர்வ் டு ரிஸர்வ் என்றோ, ஃபுல் டேங்க் நிரப்பியோ சாலைகளில் பைக்கை ஓடவிட்டு மைலேஜ் டெஸ்ட் செய்யப்படுவதில்லை. இதற்கு, ‘டைனோ டெஸ்டிங்’ என்று பெயர். அதாவது, பைக்கை குதிரைக்கு லாடம் கட்டுவதுபோல் ஒரு ட்ரெட்மில் போன்ற ஒரு மெஷினில் அட்டாச் செய்து கட்டிவிடுவார்கள். ட்ரெட்மில்லின் பின்பக்கம் சுழலும் வகையில் உள்ள ஒரு ரோலர் போன்றதொரு அமைப்பில், பைக்கின் பின் பக்க டயர் உட்காருமாறு பொருத்தி விடுவார்கள். பைக்கின் முன் பகுதி, ரப்பர் கயிறு வைத்து அசையாதவாறு கட்டப்பட்டு விடும். (பார்க்க: படம்)

மைலேஜ்

இப்போது பைக் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு பின்சக்கரம் சுழல... இந்தச் சுழற்சிக்கு ஏற்ற வகையில் ரோலர் சுற்ற ஆரம்பிக்கும். 

இத்தோடு முடிந்து விடுவதில்லை. இப்போது இன்ஜினை 45-50 கி.மீ (எக்கனாமி மோடு) வேகத்தில் இயங்க வைத்து, அதில் கிடைக்கக் கூடிய கி.மீ ரீடிங்கை வைத்துத்தான் மைலேஜ் டெஸ்ட்  செய்வார்கள்.

கவனிக்க: இந்த டெஸ்ட்டில் பைக்கில் அமர்ந்து யாரும் ஓட்டப் போவது இல்லை; ஆடு, மாடு குறுக்கே போகப் போவது இல்லை; க்ளட்ச் அப்ளை கிடையாது; யாரும் பிரேக் பிடிக்கப் போவது இல்லை... பைக்கின் எந்தப் பகுதியும் மேடு-பள்ளங்களில் குலுங்கப் போவது இல்லை; இதனால் பைக்கின் ஏரோடைனமிக் பொசிஷனும் மாறப்போவது இல்லை; மொத்தத்தில் எதுவுமே மேனுவல் இல்லை; எல்லாமே மெக்கானிசம்தான்.

இது காருக்கும் பொருந்தும் மக்களே! கூட்டிக் கழிச்சுப் பாருங்க... கணக்கு தப்பா வந்தா சரிதான்!

 

 

மைலேஜ்

 

கம்பெனியைக் குற்றம் சொல்வதை விட்டுட்டு, நாமளே களத்தில் இறங்கினால் நல்ல மைலேஜ் கிடைப்பது உறுதி. அதுக்கு இதையெல்லாம் பண்ணுங்க, ப்ளீஸ்!

* கியர்களும் கிளட்ச்சும் சும்மா இல்லை; இவைதான் மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்சே! இப்படிக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். 0-10 கி.மீ என்றால் முதல் கியர்; 10-20 கி.மீ என்றால் இரண்டாவது கியர்; 20-30 கி.மீ என்றால் மூன்றாவது கியர்; 30-40 நான்காவது கியர்; 50-க்கு மேல் ஐந்தாவது கியர். ஸ்பீடோமீட்டரில் இதைக் கணக்கு வைத்து ஓட்டினால், பைக்குக்கும் சேஃப்டி; மைலேஜும் உறுதி.

* விரட்டி ஓட்டுவது பைக்குக்கு எப்போதும் நல்லதில்லை. சில ஜாலிப் பேர்வழிகள், 'டப் டப்' என கிளட்ச் ரிலீஸ் செய்வது; தடால் பிரேக்கிங் செய்வது, வீலிங் செய்வது என்று ஃபன் செய்வார்கள். இவையெல்லாமே மைலேஜின் முக்கிய எதிரிகள்.

* சிக்னலில் நிற்கும்போது, நிறைய பேரைக் கவனித்திருக்கலாம். சிக்னல் போடுவதற்கு இன்னும் 100 விநாடிகள் இருந்தாலும், அதுவரை கிளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பார்கள். இது ரொம்பத் தப்பு பாஸ். உடனே நியூட்ரலுக்குக் கொண்டு வந்து விடுவதுதான் நல்லது. ஒரு விநாடி நீங்கள் கிளட்ச்சைப் பிடித்துக்கொண்டு நின்றால், ஒரு சொட்டு பெட்ரோல் காலியாகலாம். 

* குறைந்த கியரில் அதிக வேகங்களில் செல்வது; அதிக கியரில் குறைந்த வேகங்களில் செல்வது - இரண்டுமே கூடாது.

* டயர்களும் மைலேஜுக்கு ஒரு முக்கிய காரணம். ‘நாளைக்குக் காத்தடிச்சுக்கலாம்’ என்று டயர்களில் குறைவான காற்றழுத்தத்தில் பயணித்தீர்கள் என்றால், இன்றே உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். குறைவான பிரஷர் கொண்ட டயர்களில், சுழலும் தன்மை மாறிவிடும். இது மைலேஜுக்கும் பெப்பே காட்டிவிடும். டயர் பிரஷர் - ரொம்ப முக்கியம் நண்பர்களே!

* சிலர் ரிஸர்வில் வைத்தே எப்போதும் பைக்கை ஓட்டுவார்கள். இன்னும் சிலர், உண்டியலை உடைத்து கடைசி காயின் வரை செலவழிப்பதுபோல், கடைசித் துளி காலியாகும் வரை ஓட்டி, பைக்கை தள்ளிக்கொண்டு வாக்கிங் செல்கிறவர்களும் உண்டு. இது எல்லாமே பைக் இன்ஜினுக்கு நல்லதில்லை... ஆமா!

* பைக்குக்கு லேடன் வெயிட் என்றொரு விதிமுறை உண்டு. இத்தனை கிலோ பைக்கில் இத்தனை கிலோ எடையை மட்டும்தான் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான் விதி. ட்ரிபிள்ஸ், ஃபோர்ஸ் என்று பயணித்துவிட்டு, ‘மைலேஜே வரமாட்டேங்குது’ என்று சொன்னால் கம்பெனி எப்படி பாஸ் பொறுப்பாக முடியும்?

* பைக்கின் ஸ்பீடோ மீட்டரை எப்போதாவது உன்னிப்பாகக் கவனித்திருக்கிறீர்களா? பச்சை லைன், ரெட் லைன் - இரண்டு விஷயங்கள் இருக்கும். இதில் பச்சை லைனுக்குள்ளான வேகத்திலேயே பயணித்தால், நல்ல மைலேஜ் உறுதி. அதாவது, 40-60 கி.மீ-க்குள்ளாகவே பயணித்தால்... கம்பெனி மைலேஜை நெருங்கலாம். ரெட் லைன் - டெட் லைன்!

* சிக்னல் விழப் போகிறது; ஸ்பீடு பிரேக்கர் தெரிகிறது... ‘பக்கத்துல போய் பிரேக் அடிச்சுக்கலாம்’ என்று பைக்கைப் படுத்தி எடுக்காதீர்கள். இதனால் இரண்டு மடங்கு கூடுதல் எரிபொருள் செலவாகும்.

* முக்கியமாக, நம் ஊர் பெட்ரோல் பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்று உங்களுக்கே தெரியும். முடிந்தவரை நல்ல பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பப் பழகுங்கள். ஓகேவா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்