வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (28/07/2017)

கடைசி தொடர்பு:09:32 (28/07/2017)

ஆண்ட்ராய்டை விட கூடுதல் வசதிகள் தரும் மெர்சல் ஜியோமி..! #Mi5X

ந்திய மொபைல் போன் சந்தையில் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம்தான், தற்போது பிக் பாஸ்! மொபைல் போன் விற்பனையிலும், மாதமொரு மொபைல் போனை அறிமுகப்படுத்துவதிலும் இந்நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. மலிவு விலை மொபைல் போன்களால் சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது இந்நிறுவனம்.

Xiaomi

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, பட்ஜெட் விலையில் புரொஜெக்டர், பேட்டரியில் இயங்கும் வண்டி மற்றும் எலக்ட்ரானிக் டூத்பிரஷ் போன்றவற்றைச் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்திய இந்நிறுவனம், நேற்று மேலும் சில தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடந்த இந்த அறிமுக விழாவில், தனது மூன்று முக்கியமான தயாரிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

மி 5X (MI 5X) :

ஜியோமி மி 5X (Xiaomi Mi 5X)

ஜியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவு இந்த மி 5X (MI 5X) மொபைல் போன். அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டமான MIUI9 இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான். டூயல் கேமரா, மெட்டல் பாடியுடன் ஸ்லிம் மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மி 6 (Mi 6), ரெட்மி நோட் 4 (Redmi Note 4), மற்றும் மி மேக்ஸ் 2 (Mi Max 2) ஆகிய மாடல்களின் வசதிகள் அனைத்தும் கலந்த கலவையாக இந்த மொபைல் போன் வெளியாகியுள்ளது.

5 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 3080 mAh பேட்டரி, 4ஜி மற்றும் வோல்ட் (VoLTE) என இதன் ஸ்பெக்ஸ் அசத்துகிறது. 12 மெகா பிக்ஸல் திறன் கொண்ட டூயல் கேமரா மற்றும் டூயல் ஃப்ளாஷ் இதன் பின்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கேமராவின் லென்ஸ் பொதுவானதாகவும், மற்றொன்று டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகவும் செயல்படும். இந்த ஸ்மார்ட்போனால் குறைந்த ஒளியிலும் தரமான மற்றும் துல்லியமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.

குவால்கோம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 625 SoC (Snapdragon 625 SoC) பிராஸசர் இதில் உள்ளது. இதனால் பெர்ஃபார்மன்ஸ் விஷயத்தில் இது சிறப்பாகவே செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. இதன் டிஸ்ப்ளேயில் ஆன்ட்டி-ஃபிங்கர்பிரின்ட் கோட்டிங் இருப்பதால், உறுத்தும்வகையில் கைரேகை படியாது. இதன் விலை 1,499 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,300) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டை விட கூடுதல் வசதிகள் :

MIUI 9

ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக்கொண்டு, மேலும் சில வசதிகளைச் சேர்த்து MIUI என்றழைக்கப்படும் தனக்கென ஓர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஜியோமி நிறுவனம் பயன்படுத்துகிறது. ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிடும்போதெல்லாம், ஜியோமியும் தனது ஆபரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்து வெளியிடும். 2010-ம் ஆண்டு அறிமுகமான MIUI வகை ஆபரேட்டிங் சிஸ்டத்தைத் தற்போது 142 நாடுகளைச் சேர்ந்த சுமார் 280 கோடிப்பேர் பயன்படுத்துகின்றனர்.

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டமான நெளகட் வெர்ஷனை அடிப்படையாகக்கொண்டு, உருவாக்கியுள்ள MIUI9 ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. நெளகட் வெர்ஷனில் உள்ள அத்தனை அம்சங்களும் இதில் இடம்பெறும். இதில் உள்ள ஸ்மார்ட் ஆப் லாஞ்சர், திரையில் உள்ள தகவல்களுக்கேற்ப, அதைப்பயன்படுத்தும் அப்ளிகேஷனைப் பரிந்துரைக்கும்.

உதாரணத்துக்கு, கூகுளில் ஓர் இடத்தைத் தேடினால், திரையின் கீழே மேப்ஸ் ஆப்பில் அந்த இடத்தின் மேப் தோன்றும். ஆள், இடம் போன்றவற்றின் அடிப்படையில் கேலரியில் சர்ச் செய்துகொள்ளும் வசதி, நோட்ஸ் உள்ளிட்ட சில அப்ளிகேஷன்களை கமாண்ட் மூலம் இயக்க ஸ்மார்ட் அசிஸ்டன்ட் போன்ற 15 கூடுதல் வசதிகளையும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில் சேர்த்திருக்கிறது ஜியோமி.

 

செயற்கை நுண்ணறிவுத்திறன் ஸ்பீக்கர் (Mi AI speaker) :

Mi AI Speaker

செயற்கை நுண்ணறிவுத்திறன் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை முன்னணி நிறுவனங்கள் பலவும் வெளியிட்டுள்ளன. அமேசான் எக்கோ, கூகுள் நிறுவனத்தின் ஹோம், ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் போன்றவை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. கேள்விகளுக்கு இணையத்தில் தேடி பதில் சொல்வது, பாடல்களை ப்ளே செய்வது, இணையத்தின் மூலம் செயல்படும் பொருள்களை இயக்குவது எனப் பல்வேறு வேலைகளை இந்த ஸ்பீக்கர்கள் செய்யக்கூடியவை. இந்த வரிசையில் ஜியோமி நிறுவனம் நேற்று புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது. Mi AI speaker எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் குறித்த முழு விவரங்களையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இதன் விலை 299 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,900) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் இதுதான் விலை குறைவானதாகும்.

சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் படிப்படியாக மற்ற நாடுகளிலும், ஜியோமி நிறுவனத்தால் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்