வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/07/2017)

கடைசி தொடர்பு:19:40 (28/07/2017)

''கோடி நியாயங்கள் இருக்கலாம்... ஆனால், தர்மம் ஒன்றுதான்!'' - ராஜூ முருகன்

ஒரு பத்திரிகையாளர் கையாள வேண்டிய ஆச்சர்யங்கள், அதிசயங்கள், நுணுக்கங்கள் என விடுகதையின் புதிரை விடுவிப்பதைப் போல, பல விஷயங்களை நம் மாணவ பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர் இயக்குநர் ராம், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் மற்றும் இயக்குநர் ராஜூ முருகன். 

ராம் பத்திரிகையாளர்

இயக்குநர் ராம், ''யங்ஸ்டர்களுக்கு இந்த பிரின்ட் மீடியாவோட ரீச் தெரியுமானு எனக்கு சந்தேகமா இருக்கு. இன்னமும் எவ்வளவு காலம் பிரின்ட் மீடியா இருக்கும்னு தெரியலை. ஆனா, பிரின்ட் மீடியாலதான் இன்னமும் சுதந்திரம் இருக்கு. அடுத்து வெப் மீடியா. கருத்து சுதந்திரத்துல விஷூவல் மீடியாவுக்கு கடைசி இடம்தான். மீடியாவுக்கும் அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. மீடியாவைத் தன்னோட கருத்துகளைப் பரப்புறதுக்கான தளமா நல்லா பயன்படுத்திக்கிட்டது திராவிடர் கழகம்தான். அதன்வழி வந்த தி.மு.கவும் இதே வழிமுறையைப் பின்பற்றினாங்க. இப்போ பி.ஜே.பி கையில எடுத்துறக்குறதும் இந்த ஐடியாவைத்தான். 'கற்றது தமிழ்' எடுக்குறப்போ உலகமயமாக்கலோட தாக்கமோ விஷூவல் மீடியாக்களோட தாக்கமோ பெருசா தெரியலை. இந்த பத்தாண்டுகள்ல விஷூவல் மீடியாக்கள் பிரமாண்டமா வளர்ந்திருக்கு. இது கார்ப்பரேட்களால் வந்த உலகமயமாக்கலோட எதிர்வினைதான். அதனாலேயே ஊடக தர்மம் ரொம்ப குறைஞ்சுடுச்சு.

தனிநபர் சார்ந்த பெர்சனல் விஷயங்களை வெளிக்கொண்டு வர்றது, அதை வச்சு தாக்குறது மாதிரியான விஷயங்கள் அதிகமாயிருக்கு. தேவையில்லாத பொருள்களை உருவாக்கி அதை விற்கிற வணிக முறைதான் இது. மீடியா சார்ந்த படிப்புகள் பணம் கொழிக்கிற கோர்ஸ்களா மாறினதும் உலகமயமாக்கலோட விளைவுதான். அதே சமயம் ஆர்ட்ஸ் படிப்புகள் அப்படியே புறக்கணிக்கப்படுது. அந்த வலிதான் கற்றது தமிழ். கற்றது தமிழ்ல ஒரு பொண்ணை ஹீரோ தொடுற மாதிரி காட்சி இருக்கும். அந்த ஹீரோவோட செயலை நான் நியாயப்படுத்தலை. ஆனால் சமூகத்துல இருக்குற பாலியல் வறட்சி ஒரு மனிதனை எந்த அளவுக்கு மோசமா ஆக்கும்னு சொல்ல நினைச்சேன்.

தங்கமீன்களைப் பொறுத்தவரை, நாம சின்ன வயசுல இருந்தே அப்பா கூட ஒருமாதிரி பழகுவோம், அம்மா கூட ஒரு மாதிரி பழகுவோம். எனக்கு என் அப்பா ஹீரோவா தெரிஞ்சார். ஒரு வயசுக்கு அப்புறம் அவர் சொல்லுறதை நான் கேட்டுப்பேன். பதில் எதுவும் சொல்லமாட்டேன். இப்படிதான் நாம எல்லாருமே வளர்கிறோம். அடுத்து கமர்ஷியல் சினிமா மேல எனக்கு எந்த விமர்சனமும் இல்ல. கமர்ஷியல் சினிமாவும் ஒருவகை ஆர்ட்தான். அது இருக்குறதாலதான் சினிமா இப்போவரை சர்வைவ் ஆகுது. அதனால என் கருத்துக்கு நேர் எதிர்கருத்தோட ஒரு கமர்ஷியல் சினிமா வந்தாலும் நான் அதை வரவேற்கத்தான் செய்வேன்'' என மனம்விட்டுப் பேசினார் இயக்குநர் ராம்.

பத்திரிகையாளர்

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், நித்யானந்த் ஜெயராமன், ''இயற்கைக்கு நீங்க இருந்தாலும் கவலையில்லை. இல்லாட்டியும் கவலையில்லை. ஆனா, நாம உயிர் வாழணும்னா இயற்கை நல்லா இருக்கணும். அதுக்காக இந்த இயற்கையைக் காப்பாத்தணும்னு நினைக்கிறோம். இன்று குப்பை கொட்டும் இடங்களில் கூட சாதி இருக்கிறது. ஏற்றத்தாழ்வு இருக்கு. குப்பை கொட்டும் இடங்கள் எல்லாம் சமூகப் படிநிலையில் கீழ் இருப்பவர்கள்தான் இருக்காங்க. இவர்கள்தான் பெரும்பான்மையானவங்க. நம் அரசும், நம் அரசியலும் இந்தப் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதரங்களைப் பிடுங்கி, அல்லது சுரண்டி சிறு குழுவின் சொகுசு வாழ்விற்கு கொடுக்கிறது. இன்று நம் புரிதலில் புறம்போக்கு நிலங்களாக இருப்பவை எல்லாம் மக்களுடையது. இந்த பிரக்ஞை நம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு நுணுக்கமான அரசியலுடன், புறம்போக்கு என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம புரிஞ்சுக்கணும். அதனால்தான் புறம்போக்கு நிலங்கள் சல்லிசான விலையில் பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது அதை நாம் கவனிக்காமல் இருக்கிறோம். விட்டுவிடுகிறோம்.  'புறம்போக்கு' என்ற வார்த்தையை மீள் வாசிப்பு செய்வதிலும், அந்தப் புறம்போக்கு நிலங்களை மீட்டு சாமானிய மக்களிடம் அளிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கு. அந்த அரசியலை நீங்க எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பத்திரிகையாளன் எப்போதும் சாமானிய மக்களின் குரலாகவே இருக்க வேண்டும்'' என்றவர். 'புறம்போக்கு' என்ற பாடலை மாணவர்களுக்குப் போட்டுக் காண்பித்தார்.

பத்திரிகையாளர்

ஊடகம் - நேற்றும் இன்றும் என்ற தலைப்பில் பேசிய இயக்குநர் ராஜூமுருகன், 'ஐம்பது ஆண்டுகளா ஊடகத்துறைல நடக்காத மாற்றம் கடந்த 15 ஆண்டுகள்ல அபரிமிதமா நடந்திருக்கு. காரணம், டிஜிட்டல் யுகம். இந்த யுகத்துல பத்திரிகையாளர்கள் இதற்கு முன்னால இல்லாத அளவுக்கு சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஸ்மார்ட்போன் வச்சிருக்கிற எல்லாருமே சமூக வலைதளங்கள்ல தாங்கள் நினைச்சதை எழுதுறாங்க. அவங்களைத் தாண்டி நீங்க எப்படி தனியாத் தெரியுறீங்க என்பதுதான் உங்களுக்கான முதல் சவால். மூன்று பேர் உயிரை கார் விபத்துல பலிவாங்கின நடிகர் சட்டத்துக்கு முன் எப்படி நடத்தப்படுகிறார், ஒரே ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்த சாமானியன் எப்படி நடத்தப்படுகிறார்? இந்த ஏழை - பணக்கார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நியாயமா எழுதுறவன்தான் உண்மையான பத்திரிகையாளன். இந்த ஏற்றத்தாழ்வுகளை நீங்க சும்மா எழுதிட முடியாது. நம்மளை சுத்தி இருக்குறவங்களை அப்சர்வ் பண்ணா மட்டும்தான் எழுத முடியும். அரசியலைப் பத்தி பதிவு பண்றப்போ நீங்க ஒரு அறிவாளியாவும், மனிதத்தைப் பத்தி எழுதுறப்போ நீங்க ஒரு குழந்தையாவும் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். 'இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி நியாயங்கள் இருக்கும். ஆனால் தர்மம் ஒன்றுதான்'னு புத்தர் சொன்னார். அந்தத் தர்மத்தை உங்க எழுத்துல கொண்டு வாங்க'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்