வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (31/07/2017)

கடைசி தொடர்பு:08:11 (31/07/2017)

சைக்கிள், ஜெயில், பஸ், ஏரி... இந்தியாவின் 10 வித்தியாசமான தீம் உணவகங்கள்!

உலகின் இரண்டாவது பெரிய வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்து வரும் ‘டிஸ்னி ரசிகர் கிளப்’ என்ற அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் D23 எக்ஸ்போவை நடத்தி வருகிறது. இதன் நோக்கம் பிரத்யேக வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகும். இதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்போ சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்த எக்ஸ்போவில் இடம்பெற்ற Space Restaurant And Mission என்ற கான்செப்ட் கொண்ட உணவகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Space Restaurant

இதன் சிறப்பு என்னவென்றால் உணவு உண்ண விண்வெளிக்குச் சென்று வரவேண்டுமாம். பொழுதுபோக்கு மற்றும் உற்சாகத்தை கருப்பொருளாகக் கொண்டு இயங்கினால் வணிக ரீதியாக வெற்றி பெறுவது சுலபம் என்பதையே இந்த எக்ஸ்போ பலருக்கு உணர்த்தியது. 

ஒரு கருப்பொருளை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் உணவகங்களுக்கு மக்களிடம் எப்போதுமே ஒருவித வரவேற்பு இருந்து வருகிறது. இதோ இந்தியாவின் டாப் தீம் உணவகங்களைப் பற்றி பார்ப்போம்!

குன்சம் டிராவல் கஃபே, “Pay What You Like”, புது டெல்லி

தீம் உணவகம்

டீ, காபி, பிஸ்கட் போன்ற எதற்கும் இங்கு விலை இல்லை, உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக் கொடுக்கலாம். இப்படி ஒரு கஃபே ஷாபை நீங்கள் கேள்விபட்டதுண்டா? குன்சம் டிராவல் கஃபே ஷாப் 2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் அஜய் ஜெயின் என்பவரால் தொடங்கப்பட்டது. பயணிகளையும், புத்தக வாசகர்களையும் குறி வைத்து நடத்தப்படும் இந்த கஃபே ஷாப்பில், வாடிக்கையாளர்கள் தங்களின் பயண அனுபவங்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது, பயணிகளுக்கு ஏதுவாக பொது ஹால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாலில் வாடிக்கையாளர்கள் கூட்டாக அமர்ந்து மணிக்கணக்கில் தங்களின் பயண அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிரலாம். பயணிகள் விரும்பும் நேரத்தில் டீ, காபி மற்றும் முழு தானிய பிஸ்கட்கள் வழங்கப்படும். இதுமட்டுமல்லாது குன்சம் டிராவல் கஃபே வழங்கும் புத்தகங்களை வாசிக்கலாம், பல அரிய பயண புகைப்படங்களை ரசிக்கலாம், அனைவரும் ஒன்று சேர்ந்து பாடல்கள் பாடலாம், இசைக் கருவிகளை வாசிக்கலாம். ஒத்த கருத்துடைய நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். ஒரு கஃபே ஷாப்பில் இவ்வளவு சலுகைகளா என்றுதானே நினைக்கிறீர்கள்?. குன்சம் டிராவல் கஃபேவை நிறுவிய அஜய் ஜெயின் அடிப்படையில் ஊர்சுற்றி. பயணங்களை அதிகம் நேசித்து அது தொடர்பான பல கட்டுரைகளை எழுதிவந்தார். புத்தகங்களை மட்டும் விற்பனை செய்து வந்த அஜய், தனது தனித்துவமான வியாபார யுக்தியால் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

 தீஹார் சிறைச்சாலை உணவகம் , புது டெல்லி

திகார் உணவகம்

வாழ்க்கையில் தவறுகள் நடக்கும், அதிலிருந்தே நாம் பக்குவப்பட முடியும். ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமானது அல்ல. மிகப்பெரிய குற்றங்கள் செய்த பலரும் இரண்டாவது வாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்படியான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது Tihar Jail food court. தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமான திகார் சிறைச்சாலை போலவே அமைந்திருக்கிறது இந்த உணவகத்தின் அமைப்பு. ‘உணவகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் குற்றவாளிகள்’ என்ற வாசகங்களுடன் மக்கள் இங்கு வரவேற்கப்படுகின்றனர். தனது சிறப்பான உணவு சேவையால் பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது திஹார் சிறைச்சாலை உணவகம்.

‘வேலி ஏரி’ மிதக்கும் உணவகம், திருவனந்தபுரம்

Veli Lake Hotel

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேலி சுற்றுலா கிராமம், ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். குழந்தைகளுக்கான பார்க், நீச்சல் குளம், மற்றும் குதிரை சவாரி, ஷாப்பிங் ஸ்டால் போன்ற பல இடங்கள் இருந்தாலும், பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது மிதக்கும் பாலமும், மிதக்கும் உணவகமும். வேலி ஏரியின் தெற்கு கரையில் உள்ள இந்த ஒட்டுமொத்த தோட்டத்தை வேலி கடற்கரையோடு இணைக்கிறது மிதக்கும் பாலம். கடற்கரையோடு இணைக்கும் இந்த மிதக்கும் பாலத்தின் வழியாகத்தான் மிதக்கும் உணவகத்திற்கு செல்ல வேண்டும். இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் அதே பகுதியின் சுவையை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துகிறது.

கைதி கிச்சன், சென்னை

kaidhi kitchen

உங்களுக்குச் சிறை செல்ல ஆசையா? சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள கைதி கிச்சனுக்கு சென்றாலே போதும், உங்களுக்கு சிறைக்கு சென்றுவிட்ட உணர்வே கிடைக்கும். முழுக்க முழுக்க சிறை அமைப்பை கொண்டு இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஊழியர்கள் கைதிகள் போல ஆடை அணிந்திருப்பார்கள். உங்களுக்கும் ஏதோ சிறையில் உணவு சாப்பிடுவது போல உணர்வே கிடைக்கும். இந்த உணவகத்தின் கூடுதல் சிறப்பு மெக்சிகன், இத்தாலிய, தாய், சீன மற்றும் இந்திய உணவு வகைகளை அனைத்தும் கிடைக்கும்.

11 ஈஸ்ட் ஸ்ட்ரீட் கஃபே, புனே

East Street Cafe

இந்த உணவகத்திற்குள் நுழைந்தால், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் தலைமையிடமான லண்டன் நகருக்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு  கிடைக்கும். 11 ஈஸ்ட் ஸ்ட்ரீட் கஃபேவிற்கு வரும் வாடிக்கையாளர்கள், பிரிட்டிஷாரின் உணவு கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கலாம், பிரிட்டிஷாரின் உணவு அறை, பாத்திரங்கள், மரச்சாமான்கள் போன்ற அனைத்தும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வாடிக்கையாளர்களும் தாங்கள் ஏதோ எலிசபெதின் பேரப்பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டே உணவருந்தலாம். இந்த இடத்தின் வேடிக்கை என்னவென்றால், இங்கு 3D எஃபெக்ட்டில் பிரிட்டிஷாரின் சில உருவங்களையும் ரசிக்கலாம். 

‘ஓரி'ஸ் 70 mm, ஹைதராபாத்

Ohris 70 mm

சென்னையில் தொடங்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பீட்சாவிற்கு முன்னோடி இந்த ஓரிஸ் 70 mm உணவகம். பாலிவுட் ரசிகர்களுக்கு இதைவிட ஒரு சிறப்பான உணவகம் இருக்க முடியாது. ஒட்டுமொத்த பாலிவுட் திரைத்துறையின் வளர்ச்சியை இந்த உணவகம் நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் சிறுவயதில் பார்த்த படங்களையும், பாடிய பாடல்களை இந்த இடம் உங்களுக்கு நினைவுபடுத்தும். பாலிவுட்டின் பசுமையான நினைவுகளை ஏந்திவரும் திரைப்படங்கள், நடிகர்கள், பற்றிய புகைப்படங்களும், முன்னாள் நடிகர்களின் சிலைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிஸ் 70 mm உணவகத்தில் நீங்கள் உண்ணும் உணவின் சுவையோடு இந்த நினைவுகளும் உங்களை விட்டு எப்போதும் நீங்காது.

டேஸ்ட் ஆஃப் டார்க்னஸ் , ஹைதராபாத்

taste of Darkness

இங்கு விளக்குகள் கிடையாது, முழுக்க முழுக்க இருளில் நடத்தப்படுகிறது Taste of Darkness உணவகம். வேண்டும் என்றால் மெழுகுவத்தி தருவார்கள், முகமூடி அணிந்து கொண்டுதான் உணவு சேவை வழங்கப்படும். உங்களின் பக்கத்து டேபிளில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இப்படி ஓர் உணவகத்திற்கு என்ன அவசியம் என்று பார்த்தால், பார்வை குறைபாடுள்ளவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி ஓர்  உணவகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உணவகத்தில் குலுங்கும் பாலமும், பூங்காவும் இருக்கிறது. இதுவும் முழுக்க இருளில்தான் உள்ளது. வாடிக்கையாளர்கள் இருளில் அந்த குலுங்கும் பாலத்தில் நடந்து சென்றுதான் உணவருந்த வேண்டும்.

ஹைஜாக் கஃபே, அஹமதாபாத்

Hijack Cafe

இது புதுமாதிரியான மொபைல் கஃபே ஷாப். இந்த உணவகம் ஒரே இடத்தில் இருக்காது, ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அதாவது Double Decker பஸ் உணவகம். உணவக அமைப்புடைய இந்தப் பேருந்தில் நீங்கள் ஏறியபின் குறைந்தது 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் அஹமதாபாத் பகுதியில் இந்தப் பேருந்து சுற்றிவரும். இந்தப் பயணத்தை ரசித்தபடியே நீங்கள் ஆர்டர் செய்த உணவையும் ரசிக்கலாம். 

நேச்சர்ஸ் டாய்லட் கஃபே, அகமதாபாத்

Toilet Cafe

பொதுவாக உணவு உண்ணும்போது கழிப்பறைகளைப் பற்றி யோசிப்பது கடினமான ஒன்றுதான். ஆனால், ஒர் உணவகமே கழிப்பறை வடிவங்களால் ஆனது என்றால் நம்புவீர்களா? Nature's toilet cafe இந்தியாவின் முதல் கழிப்பறை பின்னணியிலான உணவகம். இந்த உணவகத்தில் பலவித கழிப்பறை சாதனங்களை நீங்கள் பார்க்கலாம், உணவகத்தின் டேபிள், நாற்காலி, உணவு உண்ணும் பாத்திரங்கள், வாஷ் பேஸின் இப்படி அமைத்தும் கழிப்பறை வடிவங்களால் ஆனது. மட்டுமல்லாது 1950 களுக்குப் பின்னால்  பயன்பாட்டிற்கு வந்த மழைநீர் சேகரிப்புகள் மற்றும் கழிவறைகளின் தொகுப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு செல்வது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சிக்லொ கஃபே , சென்னை

சிக்லோ கஃபே

சிறுவயதில் நீங்கள் அதிகம் விரும்பிய பொருள்களில் ஒன்று சைக்கிள். உங்களின் நண்பர்களோடு சேர்ந்து பல கி.மீ தூரம் நீங்கள் சைக்கிளில் பயணித்து இருப்பீர்கள். இப்படி உங்களின் ஆழ்மனதிற்கு நெருக்கமான சைக்கிளை நினைவுபடுத்துகிறது Ciclo Cafe. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இந்த உணவகத்திற்குள் நுழைந்ததும், உங்களின் சிறுவயது சைக்கிள் நினைவுகள் உங்களுக்கு வந்துவிடும். காரணம் உணவகம் முழுக்க பல வகையான சைக்கிள்களைப் பார்க்கலாம். இதுமட்டுமல்ல உணவகத்திற்குள்ளே இருக்கும் பல பொருள்கள் பழைமையான சைக்கிள் பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்