Published:Updated:

ராணாவுக்கு குவியும் பாலிவுட் வாய்ப்புகள்..!

எம்.குணா
ராணாவுக்கு குவியும் பாலிவுட் வாய்ப்புகள்..!
ராணாவுக்கு குவியும் பாலிவுட் வாய்ப்புகள்..!

ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் விதமாக ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் பெரும் பெயரையும், புகழையும் வசூலையும் ஒருசேர வாரிக்கொடுத்தது. தென்னிந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தெலுங்கு சினிமா உலகினருக்கு மட்டுமே தெரிந்துவந்த பிரபாஸை உலக அளவில் புகழ்பெற்ற ஹீரோவாக பிரபலப்படுத்தியது. பிரபாஸ் பாலிவுட்டுக்கு பிரவேசம் செய்வதை இந்தியில் இருக்கும் பிரபல நடிகர்கள் ஏனோ ரசிக்கவில்லை ஆனால் இந்திபட இயக்குநர்கள் சிலர் இந்திப் படத்தில் நடிப்பதற்கு பிரபாஸை அழைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

ராணாவுக்கு குவியும் பாலிவுட் வாய்ப்புகள்..!

'பாகுபலியில் நடித்த ராணாவுக்கு வில்லன் நடிப்புக்காக ஆரம்பத்தில் குவிந்த பாராட்டுகள் இப்போதும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் ராணா புதிதாக ஒப்புக்கொண்ட இரண்டு படங்களில் ராணா ஆன்ட்டி- ஹீரோ வேடத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்கிறார்கள். அந்தளவுக்கு வில்லன்வேட மோகம் ராணாவை ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கு பூமியில் ஆகஸ்ட் 11-ம் தேதி  ராணா ஹீரோவாக நடித்த  'நேனு ராஜா நேனு மந்திரி' திரைப்படம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ராணா படத்துக்கு இன்னும் சென்சார் சர்டிபிகேட் கிடைக்காததால் தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ராணாவின் அதேபடம்  தமிழில் 'நான் ஆணையிட்டால்' என்கிற எம்.ஜி.ஆர்பட டைட்டிலுடன் ஆகஸ்ட் 11-ம்தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். பிரபாஸ் தெலுங்கில் தயாராகிவரும் 'சாகோ' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் 'சாஹோ' என்றைழைக்கப்படும் வார்த்தைக்குத் தமிழில் 'வெற்றி' எனப் பொருள்படும் என்று சொல்கிறார்கள். 'பாகுபலி'யில் நடித்ததற்காக பிரபாஸ் புகழ் உலகளவில் பரவிக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திபட உலகில் 'பாகுபலி'யில் வில்லனாக நடித்த ராணாவின் புகழ்கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கிறது என்று சொல்கிறார்கள்.