Published:Updated:

புதிய முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம்... இழந்த தன் எழிலை மீட்டெடுக்குமா பொறியியல்?

ச.அ.ராஜ்குமார்
புதிய முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம்... இழந்த தன் எழிலை மீட்டெடுக்குமா பொறியியல்?
புதிய முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம்... இழந்த தன் எழிலை மீட்டெடுக்குமா பொறியியல்?

“வரும் கல்வி ஆண்டுமுதல், பொறியியல் தேர்வில் தோல்வி அடைந்தால் மறுமதிப்பீடு (Revaluation ) செய்ய முடியாது எனவும், மீண்டும் அடுத்த ஆண்டு மறுபதிவு செய்து, மறுமுறை தேர்வு எழுத வேண்டும்'' எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல் பாடத்திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013-ல் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், மீண்டும் இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கிரேடு முறையிலும் சில மாற்றங்களைக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்விக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்துதான், ''வரும் கல்வி ஆண்டுமுதல், பொறியியல் தேர்வில் தோல்வி அடைந்தால் மறுமதிப்பீடு (Revaluation ) செய்ய முடியாது எனவும், மீண்டும் அடுத்த ஆண்டு மறுபதிவு செய்து, மறுமுறை தேர்வு எழுத வேண்டும்'' எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

''இதன்மூலம் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தைப் படிக்கச் சற்று அதிக நேரம் கிட்டும் என்று கூறப்பட்டாலும், இந்தப் புதிய முயற்சிக்குப் பலதரப்பட்ட கருத்துகள் எழுகின்றன. அதில், குறிப்பாக அனைவரும் விமர்சிப்பது 'விடைத்தாள்' திருத்தும் முறையையே. நன்றாக எழுதிய தேர்வில் தோல்வி அடைவதும், மோசமாக எழுதிய தேர்வில் தேர்ச்சி அடைவதுமாக விடைத்தாள் திருத்தம் அமைகிறது. இதில், மறுமதிப்பீடு என்று கூறி ஒவ்வொரு தாளுக்கும் 700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால், நடுத்தர மற்றும் அதற்குக் கீழுள்ள குடும்ப மாணர்வர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதையும் தாண்டி, நன்றாகத் தேர்வு எழுதி... அதிலும் தோல்வியுறும் மாணவர்கள் மீண்டும் மறுமதிப்பீட்டுக்குப் பதிவுசெய்கிறார்கள். பிறகு, அதன் முடிவுகள் வெளிவருவதற்குள் தேர்வெழுதிய அந்த மாணவர்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அவ்வாறு நன்றாக எழுதிய தேர்வை மறுமதிப்பீடு செய்வதும், ஒருசிலரின் கவனக்குறைவான விடைத்தாள் திருத்தத்தால் தேர்ச்சி பெறாமல் போவதும் அந்த மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கிவிடுகிறது. சிறப்பாகத் தேர்வு எழுதியும் தோல்வி அடைவதால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வுவரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதேபோல், சில மாணவர்கள் நன்றாக எழுதாத தேர்விலும் தேர்ச்சிபெறுகின்றனர். இதை உற்றுநோக்கும்போது, இந்தத் தேர்வு முறையானது ஒரு மாணவனின், அறிவையும் திறமையையும மதிப்பிடுகிறதா அல்லது அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் மதிப்பிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்தச் சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கும் திட்டம் இருக்கும்'' என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதுகுறித்து சில மாணவர்கள், "இந்தப் புதிய திட்டத்தை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அதேசமயம், அந்த ஒருமுறை செய்யப்படும் மதிப்பீடானது மிகவும் திருத்தமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்'' என்கின்றனர். அதேவேளையில் இன்னும் பிற மாணவர்கள், ''தமிழகத்தில் கொண்டுவரப்படும் சில பொதுவான நடைமுறைகளை மாற்றவே முடியாது. அவ்வாறு மாற்றினாலும் பயனுள்ளதாக அமையாது. அதற்கு, அண்ணா பல்கலைக்கழகமும் ஓர் எடுத்துக்காட்டு'' என்று வேதனைப்படுகின்றனர் அவர்கள்.

ஒருகாலத்தில், பொறியியல் என்ற படிப்புக்கு இருந்த மரியாதை இப்போது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், இவ்வாறு மேற்கொள்ளப்படும் புதுமையான திட்டங்களால்... இழந்த தன் எழிலைப் பொறியியல் படிப்பு மீட்டெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!