Published:Updated:

சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

லட்சுமணன்.ஜி
சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ் உட்பட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயுஷ் (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) மருத்துவ படிப்புகளின் நடப்பு (2017-18) கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக 6 அரசு கல்லூரிகளில் 396 இடங்களும், 22 சுயநிதி கல்லூரிகளில் 859 இடங்களும் உள்ளன. விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கைடுகளை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளின் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். 

பொது பிரிவு மாணவர்கள் ரூ.500 மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்கள் ரூ.100 கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.