Published:Updated:

தஞ்சை சேரலாதன், சந்தீப் நர்வால் கலக்கல்... மும்பைக்கு அதிர்ச்சியளித்த புனே! #MatchAnalysis

தஞ்சை சேரலாதன், சந்தீப் நர்வால் கலக்கல்... மும்பைக்கு அதிர்ச்சியளித்த புனே! #MatchAnalysis
தஞ்சை சேரலாதன், சந்தீப் நர்வால் கலக்கல்... மும்பைக்கு அதிர்ச்சியளித்த புனே! #MatchAnalysis

புரோ கபடித் தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், 'தமிழ் தலைவாஸ்' அணியை ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ். அதைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் யு மும்பா, புனேரி பால்டான் அணிகள் மோதின. கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனுப் குமார்தான் யூ மும்பா அணிக்கும் கேப்டன். ஈரான் அணியைச் சேர்ந்த ஹாடி ஓஷ்டிராக்கும் யு மும்பா அணியில் இடம்பெற்றிருந்தார். புனே அணிக்கு தீபக் ஹூடா தலைமை ஏற்றார்.

தஞ்சையைச் சேர்ந்த பிரபல கபடி வீரர் தர்மராஜன் சேரலாதன், சந்தீப் நர்வால் உள்ளிட்டவர்கள் புனேரி பால்டான் அணியில் இடம்பெற்றிருந்தனர். புரோ கபடியில் 'யு மும்பா' அணி எப்போதுமே வலுவான அணியாகவே இருந்திருக்கிறது. ஆனால், நேற்றைய போட்டியில் ஆட்டம் படு சொதப்பல். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை 'புனேரி பால்டான்' அணி நேர்த்தியாக ஆடி வென்றது. ஒரு இடத்தில்கூட யு மும்பா அணிக்கு சிறிய வாய்ப்பைகூட புனே அணி வழங்கவில்லை. 40 நிமிடமும் ஆக்ரோஷமாகவே ஆடியது. ஆட்ட நேர  முடிவில் 33 - 21 என்ற கணக்கில் வென்றது புனே அணி. 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றதால், ஆறுதல் புள்ளிகள்கூட மும்பை அணிக்குக் கிடைக்கவில்லை.

புரோ கபடியைப் பொறுத்தவரை, யு மும்பா அணியும் புனேரி பால்டான் அணியும் இதுவரை 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில், தற்போதுதான் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது புனேரி பால்டான். நேற்றைய தினம் அனுப் குமாரைத் தவிர மும்பை அணியில் அனைத்து வீரர்களுமே மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எடுத்த எடுப்பிலேயே  விறுவிறுவென புள்ளிகளை இழந்தது மட்டுமன்றி, ஆல் அவுட் ஆனது. ஆல் அவுட் ஆனபோது 4 - 11 என்ற நிலையில் இருந்தது யு மும்பா. அந்தத் தருணத்திலிருந்து மேட்சை தன் பிடிக்குள் கொண்டுவந்தது தீபக் ஹூடா அணி. 

தர்மராஜன் சேரலாதன், சந்தீப் நர்வால் இருவரும் புனே அணிக்கு அரணாக நின்றார்கள். இந்த இருவரின் பிடிக்குள் மாட்டிய சமயங்களில் அனுப் குமாரால்கூட தப்பிக்க முடியவில்லை. இரண்டு முறை அனுப் குமாரை டேக்கில் செய்து, புனே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் சந்தீப் நர்வால். சேரலாதன் நான்கு டேக்கில் புள்ளிகளையும்  கிரீஷ் எர்னாக் மற்றும் ரவி குமார் தலா மூன்று டேக்கில் புள்ளிகளையும் வென்றனர். முதல் பாதியில் புனேரி பால்டான் வீரர்கள்  எதிரணி வீரர்கள் ரெய்டு வரும்போது புள்ளிகளை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். முதல் பாதியில் எட்டு டேக்கில் புள்ளிகளைப் பெற்றது புனே அணி.  

மும்பை அணியைப்  பொறுத்தவரை கேப்டன் அனுப் குமார்  ஐந்து ரெய்டு புள்ளிகளை எடுத்தார். அதே சமயம், அவர் இரண்டு முறை சூப்பர் டேக்கிலில் மாட்டினார்.  புனே வீரர்கள் ரெய்டுக்கு வரும்போதும் அனுப் குமார் ஸ்கோர் செய்தார். அவர், மூன்று டேக்கில் புள்ளிகள் எடுத்தார். இதன்மூலம் நேற்றைய போட்டியில் எட்டுப் புள்ளிகளை  எடுத்திருந்தார் அனுப் குமார். ஒட்டுமொத்த போட்டியிலும் சேர்ந்து வெறும் ஏழு டேக்கில் புள்ளிகளை மட்டுமே எடுத்தது யு மும்பா. ரெய்டு, டேக்கில் என எல்லா வகையிலும் நேற்றும் புனேரி பால்டான் அணியிடம் தோற்றது யு மும்பா.  அடுத்த போட்டியில், ஹரியானாவை  அனுப் குமார் அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.