Published:Updated:

'முதலில் இதை நிறைவேற்றுங்கள்'- என்.எல்.சி-க்கு சி.ஐ.டி.யூ எச்சரிக்கை!

ராகினி ஆத்ம வெண்டி மு.
'முதலில் இதை நிறைவேற்றுங்கள்'- என்.எல்.சி-க்கு சி.ஐ.டி.யூ எச்சரிக்கை!
'முதலில் இதை நிறைவேற்றுங்கள்'- என்.எல்.சி-க்கு சி.ஐ.டி.யூ எச்சரிக்கை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் என்.எல்.சி. தொழிலாளர்களுடன் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும் என சி.ஐ.டி.யூ. அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், கடந்த 20 ஆண்டுகளாகப் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைபார்த்துவருகின்றனர். அவர்களின் 26 நாள்கள் வேலை என்பதை 19 நாள்களாகக் குறைத்திருக்கிறது நிர்வாகம். இதைக் கண்டித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

’என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சி.ஐ.டி.யூ-வினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதில், ‘அவுட்சோர்ஸிங் முறையில் தனியாருக்கு விடப்பட்டுள்ள பணிகளை நிர்வாகமே ஏற்றுக்கொண்டு, நேரடியாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும்.

மேலும், தமிழக அரசு டாக்கா நிறுவனத்திடம் தொடர்ந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதன் மூலமும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கைச் செலுத்திவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வு காண முன்வர வேண்டும்’ என  குறிப்பிடப்பட்டுள்ளது.