வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (30/07/2017)

கடைசி தொடர்பு:14:12 (30/07/2017)

இத்தனை பாம்புகளை ஒரே இடத்தில் பார்த்திருக்கிறீர்களா? #SnakeFestival

பாம்புகளை

பாம்பு, மனிதர்கள் அதிகம் பயப்படும் ஓர் உயிரினம். எல்லோரும் பயப்படுகிற ஓர் உயிரினத்தை ஒருவர்  லாவகமாக கையாளும் போது நின்று  வேடிக்கை பார்க்கத்தான் செய்வோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு  இணையத்தில் ஒரு வீடியோவை  பார்க்க நேரிட்டது. 100க்கும் மேற்பட்ட ஆண்கள்  கைகளில் பாம்புகளை வைத்துக் கொண்டு ஊர்வலம் போய்  கொண்டிருக்கிறார்கள். சாலையின் இரு  புறமும் நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  எந்தவித அச்சமும் இன்றி ஊர்வலத்தில் செல்வோரின்  கைகளிலும் கழுத்திலும் பாம்புகள் சர்வ சாதாரணமாக  பின்னி இருக்கின்றன. பார்க்கவே பக்கென்று இருக்கிற ஒரு நிமிட வீடியோ அது. அத்தனை பெரிய கூட்டத்தில் பாம்புகள் மிரண்டு போய் ஒருவரை கூடவா கடித்து விடாது?

இது குறித்த செய்திகளையும், காணொளிகளையும் இணையத்தில் தேடி பார்த்ததில் ஒவ்வொரு காணொளிகளும் திக், திக் ரகமாக இருக்கின்றன. பாம்புகள் குறித்த பயம் இருப்போர்  இக்காணொளிகளை தவிர்ப்பது நலம். காணொளியில் சிலர்  பாம்பு கூடையை கைகளில் வைத்திருக்கிறார்கள். பின்னணியில் பாரம்பர்ய இசை இசைக்கப்படுகிறது. இசைக்கேற்ற நடனம் ஆடுகிறார்கள். கூடையில் இருக்கிற ஒரு நாக பாம்பிடம் கைகளை காட்டி ஒருவர் பேசுகிறார். இன்னொருவர்  இசைக்கேற்ப ஆடிக்கொண்டே பாம்பை கூடையில் இருந்து எடுக்கிறார். சீறிக் கொண்டு ஒரு பாம்பு வெளியே வருகிறது. ஒருவர் ஒன்றுக்கு இரண்டு பாம்புகளை தோளில்  போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கிறார். அவர்கள் பாம்புகளை  கையாள்வதை பார்க்கும் போது  கணினி திரையையே ஐந்தடி தள்ளி நின்றுதான்  பார்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் விளையாடுகிற ஒவ்வொரு பாம்பும் அதீத விஷம் கொண்ட பாம்பாகவே  இருக்கின்றது. யார் இவர்கள்? எங்கே இருக்கிறார்கள்? எதற்காக பாம்பு ஊர்வலம்?

இந்தியா முழுவதிலும் பாம்புகளை வைத்து பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமான விழாக்கள் நாகபஞ்சமி மற்றும் ஜாபான். மேற்கு வங்க மாநிலத்தின் பிஷ்ணுபூர் மக்களின் முக்கிய விழாவாக ஜாபான்  கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பாம்புகளை வைத்து சில நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.  பாம்புகளை வைத்து வழிபடுவது பிஷ்ணுபூர் மக்களின் வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.

பிஷ்ணுபூர் கிராமத்தில் இருக்கிற மக்கள் மானஸா என்கிற தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். சிவபெருமானின் மகளாக கருதப்படும் மானசா தேவி என்பவருக்காக கொண்டாடப்படுகிற விழாவாக இவ்விழா  இருக்கிறது. மானசா தேவியை பாம்புகளின் கடவுளாக மக்கள் வழிப்படுகின்றனர் .

 

ஜாபான் விழா இரண்டு நாள்களுக்கு நடக்கிறது. முதல் நாள் மானசா தேவி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். மூங்கிலில் செய்த கூடைகளிலும் மண் பானைகளிலும் பாம்புகளை வைத்து ஊர்வலம் வருகிறார்கள். சிலர் வெறும் கைகளில் பாம்புகளை வைத்துக் கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருகிறார்கள். பாரம்பர்ய இசை இசைக்கப்படுகிறது. நடனமாடிக் கொண்டே வருகிறார்கள். குறிப்பிட்ட இடத்தில் பாம்புகள் இருக்கிற கூடைகளை வைத்து நாட்டுப்புறப்  பாடல்களையும் பாரம்பர்ய இசையையும் இசைகிறார்கள். அப்போது கூடைகளுக்குள் இருக்கிற பாம்புகள் வெளியே வருகின்றன. பாம்புகளோடு சேர்ந்து நடனமாடுவதுடன் அன்றைய விழா நிறைவு பெறுகிறது.

இரண்டாம் நாளில் மதிய வேலையில்  சங்கரி பஜார் என்கிற இடத்தில் பாம்பாட்டிகள் எல்லோரும் ஒரு குழுவாக  கூடுகிறார்கள். தேவி மானசா மகிமையை சொல்லுகிற பாடல்களை பாடுகிறார்கள். பாம்பாட்டி குழுக்கள் பாம்புகளை வைத்து  தந்திரங்களை  செய்ய ஆரம்பிக்கிறார்கள். கூடையில் இருக்கிற பாம்புகளை எடுத்து அவர்களது தாய்மொழியில் பாட ஆரம்பிக்கிறார்கள். பின் பாம்பின் முகத்தில் முத்தமிடுகிறார்கள். சுற்றி வேடிக்கை பார்க்கிற மக்களை பாம்புகளை தொட அழைக்கிறார்கள். விழாவிற்கு வருகிற எல்லோருக்கும் பாம்புகளை வைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறார்கள். அதோடு விழா நிறைவடைகிறது.  

எல்லோருடைய வீடுகளிலும் பாம்பு வளர்ப்பதாகவும் அப்பாம்புகள் அவர்களை எதுவும் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. மானசா தெய்வத்தின் ஆசி பாம்புகளோடு அவர்களுக்கு நல்ல நட்பை  ஏற்படுத்தித்  தருவதாக சொல்கிறார்கள். மழைக்காகவும், தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்காகவும் மக்கள் பாம்புகளை வைத்து வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து  வன அலுவலர் ஒருவரிடம் பேசியதில் “நானும் பார்த்தேன் அந்த நிகழ்வை திருவிழாவாக பார்க்க முடியவில்லை. வீடியோவை பார்க்கும்போது  பாம்புகளை வைத்து போராட்டம் நடப்பது போலத்தான் தெரிகிறது. மக்கள் கூடி இருக்கிற ஒரு பகுதியில் பாம்புகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு அந்த பகுதி வன அலுவலர்கள் காவல்துறையினர்  எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. வன உயிரினங்களுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. பாம்புகளை பிடிப்பதும், அவற்றை வைத்து வேடிக்கை காட்டுவதும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி குற்றமாகும். பாம்பாட்டிகள் யாரும் தற்போது இந்த தொழில் இல்லை. பாம்பாட்டிகள் என்ற பெயரில் சிலர்  பாம்பு கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்கிறார்.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்