Published:Updated:

விகடனின் தொடர் முயற்சி..! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

சி.ய.ஆனந்தகுமார்
விகடனின் தொடர் முயற்சி..! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
விகடனின் தொடர் முயற்சி..! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

விகடனின் தொடர் முயற்சியால், மணப்பாறை ராக்கெட் லாஞ்சர் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு அறிவித்த நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டி பகுதியிலிருந்த மாதா டிரேடர்ஸ் பழைய இரும்புக் கடையில், கடந்த 29-ம் தேதி மர்மப் பொருள் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அது ராணுவத்தினர் பயிற்சிக்குப் பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. இந்த விபத்தில், பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையின் உரிமையாளர் அருள்ஆனந்த், எதிர்வீட்டுக்காரர் கனகராஜ், ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும், பக்கத்து கடைக்காரர் பாலசுப்ரமணியன் என்பவர் சிறு காயம் அடைந்தார். 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதாரப் பிரச்னையில் சிரமப்பட்டநிலையில், விகடன் சார்பில் அவர்களுக்கு உதவ முயற்சிகள் எடுக்கப்பட்டது. அவர்களுடைய நிலைமைகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் விளக்கப்பட்டது. உடனே அவர், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவை ஏற்பதாக உறுதியளித்தார். அடுத்து, திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டுசென்றோம். அவரும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பலியான மாரியப்பன் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும், மற்றொருவருக்கு 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இந்த விபத்துகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று உறுதியளித்தார். காயமடைந்தவர்களுக்கான தலா 2.50 லட்ச ரூபாய் மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இன்று,

வெடிவிபத்தில் உயிரிழந்தவர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு  2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.பி-க்கள் டி.ரத்தினவேல், ப.குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர் ஆகியோர் சகிதமாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விகடனின் தொடர் முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர்.