ஸ்ட்ரெஸ் பற்றிய கவலை வேண்டாம்... இந்த 8 அறிவியல் விஷயங்கள் உங்களுக்கு உதவும்!

“பிரச்னைய பார்க்காதே, பிரச்னைக்கான காரணத்தை பாரு!” என்று ஒரு ஞானி போல அட்வைஸ் செய்வார் 'வேதா’ விஜய் சேதுபதி. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியாதே பாஸ். ஒவ்வொரு காலையும் விடிகிறதோ இல்லையோ, கவலை மட்டும் உதயமாகி விடுகிறது. நேற்று அப்படிச் செய்து விட்டோமே, இன்று இப்படிச் செய்துகொண்டு இருக்கிறோமே, நாளை என்ன செய்ய போகிறோம் என்று முக்காலத்திற்கான கவலைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இதை எப்படித்தான் உதறித் தள்ளுவது? இந்த நொடியைச் சந்தோசமாக நாம் வாழ்ந்துவிட முடியாதா? கவலை அரக்கனைக் காவு வாங்கவே முடியாதா? “முடியுமே!” என்று கூறி சோகத்திலிருக்கும் தலைகளை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது அறிவியல்!

கவலை விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality)

VR என்றால் சிறுவர்கள் கேம் ஆடவும், பெருசுகள் படங்கள் பார்ப்பதற்கும்தான் உதவும் என்பதா உங்கள் எண்ணம்? இப்போதே அதை மாற்றிக் கொள்ளுங்கள்! ஏக்கம், பதற்றம், கவலை, பயம் போன்ற மனநிலைகளை உள்ளடக்கிய மன அழுத்தம் மற்றும் மனச் சிதைவு (Post Traumatic Stress Disorder (PTSD)) போன்ற பிரச்னைகளைக் களையவும் VR உதவுகிறது. மன அழுத்தம் ஏற்படுத்திய அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெய்நிகர் உலகம் ஒன்று உருவாக்கி அதில் பாதிப்படைந்தவர்களை உலவ விடுகிறார்கள். மற்றோரு முறையில் இல்லாத தெரபிஸ்ட்டை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உருவாக்கி சிகிச்சை அளிக்கிறார்கள்.

கிராவிட்டி ப்ளாங்கெட்

கிராவிட்டி ப்ளாங்கெட் (Gravity Blanket)

கவலையோடு தூக்கமே இல்லாமல் படுத்திருக்கும் போது, நானிருக்கிறேன் என்று யாராவது அரவணைக்கமாட்டார்களா என்று ஏங்குவது மனித இயல்பு. அதைத்தான் செய்கிறது இந்த கிராவிட்டி ப்ளாங்கெட்! அதிக எடை கொண்ட இந்தப் போர்வைகள் உயர் தர மைக்ரோஃபைபர்காலால் ஆனது. மென்மையான உணர்வு, அதிகபட்ச ஆறுதல் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடம்பிலிருக்கும் செரட்டோனின் மற்றும் மெலடோனின் அளவுகளை அதிகரிக்கச் செய்து ஓய்வளித்து நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது.

மூஸ் ஹெட்பேண்ட்

மூஸ் ஹெட்பேண்ட் (Muse Headband)

இது தியான ஸ்பெஷல்! இந்த மூஸ் ஹெட்பேண்டை மனச்சோர்வின் போது மாட்டிக்கொண்டால் நம் மனதோடு உணர்வுபூர்வமாக செயல்பட்டு இயல்பான நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இது EEG-Neurofeedback சென்சார்கள் கொண்டு படிப்படியாக அணிபவரைத் தியான நிலைக்கு அழைத்துச் சென்று மன அமைதி அளிக்கும் விந்தையை நிகழ்த்துகிறது.

emWave2

emWave2

20 வருடங்களாக மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் கருவிகளைத் தயாரித்து வருகிறது ஹார்ட்மேத் (HeartMath) நிறுவனம். இதன் ஒரு தயாரிப்புதான் இந்த emWave2. அதிகரிக்கப்பட்ட உடல்திறன், கவலையைக் குறைப்பது போன்ற நன்மைகளை அளிக்கும் இது, இதயத்தின் துடிப்பு, அது செயல்படும் விதம் குறித்து தகவல்களை அளித்துக்கொண்டேயிருக்கிறது. எப்போதாவது கோபப்படும் போதோ, அல்லது சோகமாக இருக்கும்போதோ, அலெர்ட் செய்து நம் என்ன ஓட்டங்களை மாற்றிவிடுகிறது.

திண்க்

திண்க் (Thync)

வேரபில் டிவைஸ்களில் (Wearble Devices) ஒன்றான இது MIT, ஹார்வர்டு  மற்றும் ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்களால் 5 வருட ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் வீதம் இதை மாட்டிக் கொண்டால் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறிய அளவிலான மின்வழி உணர்வுத் தூண்டல் நிகழ்த்தி எதிர்மறை எண்ணங்கள், கவலை போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

சென்சரி டெப்ரிவேஷன் டாங்க்

சென்சரி டெப்ரிவேஷன் டாங்க் (Sensory Deprivation Tank)

கவலையைக் குறைக்கும் தொட்டி என்றழைக்கப்படும் இது இப்போதே பெருமளவில் புழக்கத்தில் இருக்கிறது. இந்தத் தொட்டியில் 45 முதல் 90 நிமிடங்கள் அமர்ந்திருந்தால் மனம் சாந்தம் அடைந்து விடுகிறதாம். இருட்டான இந்தத் தொட்டிக்குள் இருப்பது என்னவோ உப்பு அதிகமான நீர் மட்டுமே! வெளித் தூண்டுதல் ஏதுமின்றி ஒருவித அமைதி கிடைப்பதால், இதற்கு வெளிநாடுகளில் செம வரவேற்பு என்கிறார்கள்.

ஹெட்ஸ்பேஸ்

ஹெட்ஸ்பேஸ் (HeadSpace)

மன அமைதி கிடைக்க எல்லா அறிவியல் துறைகளும் முயற்சிக்கும் போது மொபைல் ஆப்கள் மட்டும் சும்மா இருக்குமா? ஹெட்ஸ்பேஸ் என்றழைக்கப்படும் இந்த மொபைல் ஆப், ஹெட்பேண்ட் போலவே நமக்குத் தியானம் செய்வது எப்படி எனக் கற்றுத்தருகிறது. ‘ஞானத்தின் அறிவியல்’ (Science of Mindfulness) கோட்பாட்டின் படி செயல்படும் இது, ஒரு குரு நமக்கு அருகிலிருந்து வகுப்புகள் எடுத்தால் எப்படி இருக்குமோ அவ்வாறே இருப்பதாகக் கூறுகிறார்கள். உடனே உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து பாருங்களேன்.

க்ரயோதெரபி

க்ரயோதெரபி (Cryotherapy)

அதீதத் குளிரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை பல மருத்துவ சிகிச்சைகளைச் செய்வது க்ரயோதெரபி என்றழைக்கப்படும். பொதுவாக விளையாட்டு வீரர்கள் பலர் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக -151.1 டிகிரி செல்சியஸ் (-240 டிகிரி பாரன்ஹீட்) குளிரில் 3 நிமிடங்கள் வரை ஓய்வெடுப்பார்கள். இது கலோரிகளை எரிக்கவும், மனநிலையைச் சரி செய்யவும் உதவுகிறது. பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இது விரைவில் மக்களுக்காக பொதுதளத்திற்கு வரும் என்று கூறுகிறார்கள் அறிவியல் ஆர்வலர்கள்.

நீங்கள் இன்று சந்திக்கும் 4 பேரில் ஒருவருக்கு நிச்சயம் எதோ ஒரு பெரிய கவலை இருக்கிறது. அது அவரை முழுமையாகச் செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களைப் பார்க்க நேரிட்டால், இந்த 8 கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறி விடுங்கள். அதை எங்கே எப்படி வாங்குவது என்பது அவர்கள் கவலை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!