Published:Updated:

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி மரணத்தில் மர்மம்!

விகடன் விமர்சனக்குழு
ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி மரணத்தில் மர்மம்!
ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி மரணத்தில் மர்மம்!
ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மனைவி மரணத்தில் மர்மம்!

சண்டிகர்: ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வரின் மனைவி ஃபிஸா முகமதின் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். 

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வரின் மனைவி ஃபிஸா முகமதின் அழுகிய உடல் மொஹாலியில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் நேற்று காணப்பட்டது. அவர் இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியிருக்கலாம் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனுராதா பாலி என்கிற ஃபிஸா முகமது மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்.இவரது உடல் தலைநகர் சண்டிகர் அருகே உள்ளே மொஹாலியில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

அவருடைய வீட்டினுள்ளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல்வாசிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் ஃபிஸா முகமதின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

ஃபிஸா முகமது, கடந்த 2008 நவம்பரில் ஹரியானாவின் துணை முதல்வராக பதவி வகித்து வந்த சந்தர்மோகனைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது சந்தர்மோகனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது. ஃபிஸாவும் ஏற்கெனவே மணமாகி விவாகரத்து பெற்றவர்.

இரண்டாவது திருமணத்துக்காக இருவரும் மதம் மாறி இஸ்லாமியர் ஆகினர். சந்தர்மோகன், சந்த் முகமதாகவும் அனுராதா பாலி, ஃபிஸா முகமதாகவும் பெயர்கள் பெற்றனர். இவர்களுடைய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

திருமணம் ஆவதை முன்னிட்டு தனது துணை அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் ஃபிஸா. சந்தர்மோகன் இரண்டாம் மணம்புரிந்ததும் அவர் தனது மகனே அல்ல என்று அவரது தந்தையான முன்னாள் முதல்வர் பஜன் லால் அறிவித்தார்.

தலைமறைவான பின்னர் இவர்கள் திருமணம் நடைபெற்றது.பல நாட்கள் சந்தர்மோகன் அரசு அலுவல்களை கவனிக்கவில்லை என்பதால் இவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் இவர்கள் இருவரும் சுமார் 40 நாள்கள் மட்டுமே சேர்ந்து இருந்தனர்.

##~~##
சந்தர்மோகன் ஒரு நாள் திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது முதல் மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். பின்னர், 2009-ம் ஆண்டு ஜூலை மாதம், மூத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் அவர் மீண்டும் ஹிந்து சமயத்தை ஏற்றுக் கொண்டார்.
அதற்கு முன்பாக, மார்ச் மாதம் தொலைபேசியில் ஃபிஸாவை அழைத்து "தலாக்' சொல்லி திருமணத்தை முறித்துக் கொண்டார்.மேலும் அது குறித்து செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
அவர்களின் பிரிவுக்குப் பின்னர், சந்தர்மோகன் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, மத உணர்வுகளை புண்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி ஃபிஸா வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது.கடந்த 2009 ஆம் ஆண்டு ஹரியானா சட்டசபைத் தேர்தலில் சந்தர்மோகன் குடும்பத்தினருக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இப்போது ஃபிஸா மர்மமான முறையில் இறந்துள்ளார்.