முதலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்கிரிப்ட்... அடுத்து வீடியோ… HBOவை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்!

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

அது கொஞ்சம் மந்தமான ஞாயிற்றுக்கிழமை காலை. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு, அதுவும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு குறித்து எழுதுபவர்களுக்கு ஒரு வித்தியாசமான இ-மெயில் ‘இன்பாக்ஸ்’ கதவைத் தட்டுகிறது. இந்த நாளிலும் அலுவலகத்திலிருந்து மெயிலோ என்று சோம்பலை முறித்துப் பார்த்தால் அதன் தலைப்பே பதற வைத்தது. “1.5 TB of HBO data just leaked!!!” அதாவது 1.5TB அளவுக்கு HBO தொலைக்காட்சியின் டேட்டா, (கேம் ஆஃப் த்ரோன்ஸ் உட்பட) வெளியில் கசிந்திருக்கிறதாம். உள்ளே சென்று பார்த்தால் அதில் கூறப்பட்டிருந்த செய்தி இதுதான்.

“மனிதக் குலத்திற்கு வணக்கம்! இந்த சைபர் ஸ்பேஸ் யுகத்தின் மிகப்பெரிய டேட்டா லீக் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் பெயர் என்ன தெரியுமா? HBO மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ்! நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள், ஏன் தெரியுமா? நீங்கள் தான் அந்த லீக்கான விஷயங்களை முதலில் பார்க்கப்போகிறீர்கள்! சந்தோசமாகக் கண்டுகளித்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலை பரப்புங்கள். யார் எல்லாம் இதைச் சிறப்பாக செய்கிறீர்களோ, அவர்களை நாங்கள் பிரத்யேக பேட்டி எடுக்கத் தயாராக உள்ளோம். HBOவின் வீழ்ச்சி ஆரம்பம்!”

டவுன்லோடு செய்ய லிங்க்ஸ்

இந்த மெயிலிலேயே கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் அடுத்த வார எபிசோடின் முழு நீள ஸ்கிரிப்ட், பாலர்ஸ், இன்செக்யூர், ரூம் 104 மற்றும் பேரி ஆகிய நாடகங்களின் வெளிவராத எபிசொடுகளின் முழுமையான வீடியோக்கள் என முழுவதையும் தரவிறக்கம் செய்ய லிங்க்ஸ் பகிரப்பட்டிருந்தன. மிகுந்த அக்கறையுடன் அந்த மெயிலின் ஃபுட்டரில், மேலும் பல தகவல்கள், வீடியோக்கள் வெளிவரத் தயார் நிலையில் இருக்கிறது என்ற குறிப்பு வேறு! அதன்பிறகு எங்கே வீக்கெண்ட் எல்லாம்? அந்த நாள் அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் ஒரு பரபரப்பான ஃபீல்ட் டே!

ஐயர்ன் த்ரோன்

“ஃபர்ஸ்ட் ஜூஸு, அப்பறம் ட்ரீட்டு” என்று ஏதோ அய்யாச்சாமி போலப் பாசமாக முதலில் ஸ்கிரிப்ட் அப்புறம் முழு வீடியோ என்று வந்த மெயிலால் HBO நிறுவனமே சற்று ஆடி தான் போயிருக்கிறது. மேலும் கிலி ஏற்படுத்தும் விதமாக, வெறும் படங்கள், நாடகங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல, HBO நிறுவனத்தின் பணியாளர்கள், அலுவல்கள் குறித்த பல தகவல்கள் கைவசம் இருப்பதாக மிரட்டியிருக்கிறார்கள் ஹேக்கர்கள்.

மௌனம் கலைத்த HBO

இதுபோன்ற விஷயங்களில் எப்போதும் மௌனம் சாதிக்கும் HBO நிறுவனம், இந்த முறை வாயைத் திறந்து பேசியுள்ளது, “அந்த சைபர் அட்டாக் நிகழ்ந்தது உண்மைதான். முழுக்க முழுக்க HBOவை குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் தனி உரிமைத் தகவல், ப்ரோக்ராமிங் கோடுகள் என நிறையக் களவாடப்பட்டு இருக்கின்றன” என்று அறிக்கை ஒன்றை வருத்தத்துடன் இ-மெயிலில் வெளியிட்டுள்ளார் HBO தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் பிளெப்ளர்.

இதனால் HBO மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

TRPயில் அடி

மிகவும் புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் 7-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த லீக் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடான கோடி ரசிகர்கள் உலகம் முழுவதும் அடுத்த எபிசொட் எப்போது வரும் என்று காத்திருக்கும் போது ஆன்லைனில் முன்னரே அது வெளியானால், சேனலின் TRP பெரிதும் பாதிக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன், இதேபோல் ஹேக்கர்கள், இந்த நாடகத்தின் முதல் 4 எபிசோடுகளை ஆன்லைனில் உலவ விட, ரசிகர்களுக்கு ஏக குஷி! ஆனால் அப்போதும் 8 மில்லியன் பேர் டிவியில் பார்த்தார்கள் என்று கணக்கு காட்டி, எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்று சமாளித்தது HBO.

 

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கூட்டம் குறையும்

இந்த வருடம் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நாடகத்தின் டோரென்ட்கள் (Torrents) புழக்கம் சற்று குறைவு தான். ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் உயர்தரத்தில், சப்டைட்டில்களோடு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதால் பலர் அங்கே தான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். இருப்பினும், இந்த ஹேக் செய்யப்பட்ட எபிசோடுகள் முன்னரே ரிலீஸ் ஆனால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிலும் கூட்டம் குறைய வாய்ப்புண்டு.

குறையும் மதிப்பு

இது போன்று ஹேக்கர்களுக்கு தொடர்ந்து இரையாகும் பட்சத்தில், HBO வின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வகை இ-மெயில்கள் பங்குச்சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். டிவி நிறுவனத்துக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். அதன் ஊழியர்கள் உள்பட லீக்கான நாடகங்களில் நடித்தவர்களையும் கூட மறைமுகமாகப் பாதிக்கும். எனவே, மேலும் பல தகவல்கள், எபிசோடுகள் லீக்காகும் முன்னர் HBO ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!