வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (03/08/2017)

கடைசி தொடர்பு:10:24 (03/08/2017)

“பிரதமர், முதல்வர்களைப் பாதுகாக்க வேண்டாம்... சதுப்பு நிலங்களைப் பாதுகாத்து வைங்க!” - ரியல் ‘ஜோக்கர்’ சேகர்

“போராட்டங்களுக்கும் வழக்குகளுக்கும் விலையாக இவர் கொடுத்திருப்பது அவரது வாழ்க்கையைத்தான். திருமணம் செய்தால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்பதால் திருமணம் செய்யாமலே இருந்திருக்கிறார். வீட்டுக்குள் விஷப் பாம்பைக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். இரண்டு முறை இவரது வீட்டை இடித்திருக்கிறார்கள். சைக்கிளைத் திருடி இருக்கிறார்கள். கடத்திக்கொண்டுபோய் அடித்திருக்கிறார்கள். ஆனாலும் ஆவணங்களோடு நீதிமன்றம் போய் கொண்டிருக்கிறார்" 

தனிமனிதராகப் போராடும் அவரது பெயர் சேகர். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். 30 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்புநிலங்களை, கடற்கரையை  மீட்க வேண்டுமென  நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடுத்திருக்கிறார். அநேக  வழக்குகளில் தீர்ப்பும், சில வழக்குகளில் இடைக்காலத் தடை உத்தரவும் வாங்கி இருக்கிறார். 

சேகர் முதன்முதலில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார். யாரும் பதில் சொல்வதாய் இல்லை. எப்படி இதைத் தடுப்பது என யோசித்தவர் 1991 வருடம் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை எதிர்த்து முதல் வழக்கு தொடுக்கிறார். பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு நீதிபதி மீனா குமாரி அவர்கள் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யக்கூடாது எனத் தீர்ப்பளிக்கிறார்.

சேகர்

1996 வருடம் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையைச் சிலர் ஆக்கிரமிக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட 4.6 கிலோமீட்டர் பகுதிகளை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் சேகர். வழக்கினை விசாரித்த நீதிபதி திரு KS.ஸ்வாமி கடற்கரையின் 500 மீட்டருக்குள் எந்தவித ஆக்கிரபிப்புகளும் இருக்கக் கூடாதென 1997-ம் வருடம் தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பைக் கேட்ட எதிர்தரப்பு சேகருக்குப் பல்வேறு இன்னல்களைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு முறை இவர் இருக்கிற இடத்திற்கு விஷப்  பாம்புகளைக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து அதே 1997  வருடம்  மீண்டும் நீதி மன்றம் செல்கிறார். தன்  நண்பர் மாணிக்கராஜ் என்பவரின்  பெயரில் மீண்டும் ஒரு வழக்குத் தொடுக்கிறார். அந்த  வழக்கை விசாரித்த நீதிபதி AP ஷா ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமெனத் தீர்ப்பளிக்கிறார். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படாமலே இருக்கிறது. வழக்குத் தொடுத்த மாணிக்கராஜ் ஆக்கிரமிப்பாளர்களால் மிரட்டப்பட்டு  ஊரை விட்டு போகிறார்.

சேகரை ஜோக்கராய் நினைத்து மீண்டும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அந்த வருடத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்படுகிறார். சேகர் கடலுக்குச் சென்று  மீன்பிடிக்கத் தடை விதிக்கிறார்கள். அவரது வீடு இடிக்கப்படுகிறது. மனம் தளராமல் மீண்டும் மீண்டும் போராட ஆரம்பிக்கிறார். வருடங்கள் சென்று கொண்டிருக்கிறதே தவிர ஆக்கிரமிப்புகள் மீட்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் நீதிமன்றம் செல்கிறார். 2007 ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஏகே கங்குலி 2008 ஆண்டு ஏழை பணக்காரர் என யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்பை உடனே காலி செய்யவேண்டுமென உத்தரவிடுகிறார். இப்போதும் யாரும் கண்டுகொள்வதாய் இல்லை. அதிகாரிகளிடம் முறையிடுகிறார். ஆனாலும் பயனில்லை. 2012 என வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றாலும் ஆக்கிரமிப்புகள் மீட்கபடாமலே இருந்திருக்கிறது.  2014 ஆம் வருடம்  இந்த வழக்கை பசுமை தீர்ப்பாயத்திடம் கொண்டு போயிருக்கிறார்.  1996 வருடம்  ஆக்கிரமிப்புகளுக்கு  எதிராகப் பதியப்பட்ட ஒரு  வழக்கு  இப்போது வரை நிலுவையில் இருக்கிறது. 

சேகர்

 2015 வருடம் சோழிங்கநல்லூர் அக்கரைப் பகுதியில் இருக்கிற சதுப்பு நிலத்தில் மாநகராட்சி குப்பையைக் கொட்டி நிலத்தைச் சமன்படுத்தி இருக்கிறார்கள். சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். விசாரித்த நீதிபதி மாவட்ட கலெக்ட்டருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்.

2013 வருடம் ஈஞ்சம்பாக்கம் 165 ஏக்கர் கழிவெளி (சதுப்புநிலம்) நிலத்தில் 65 ஏக்கரை ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கிறார்கள். சதுப்பு நிலத்தில் வீடு கட்டப்பட்டிருப்பதாக சேகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். 2013 வருடம் 63 வீடுகள் இருந்த இடத்தில் 2017 வருடம் 3383 வீடுகள் இருப்பதாக ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதுப்புநிலத்தில் வீடுகள் கட்டப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை தரும்படி சென்னை ஐஐடி வசம் ஒப்படைத்திருக்கிறார்கள். 
 
2016 வருடம் காரப்பாக்கம் சதுப்பு நிலத்தில் இந்திய அறிவு சார் பல்கலைக்கழகம் 38 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பியிருக்கிறது. நீதிமன்றம் போன சேகர் பெரிய போராட்டத்திற்கு பிறகு தடை வாங்கியிருக்கிறார். 
 
இப்போது நண்பர் ஒருவரின் முயற்சியால் இடிக்கப்பட்ட வீட்டை  புதிப்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் வீடு முழுவதும் அவரோடு ஆவணங்கள் மட்டுமே வசிக்கின்றன. 2016 வருடம் நீதிமன்றம் சேகருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தனக்குப் பாதுகாப்பு வேண்டாமென சொல்லித் தவிர்த்து விட்டார். அவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பிரதமர், முதல்வர்கள் பாதுகாப்பதை விட, சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கச் சொல்லுங்கள் என்கிறார். இப்போது அடுத்த வழக்குக்கான ஆவணங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் சேகர்.

தினம் போகிற சாலையில் போராட்டம் நடக்கிறதென, மாற்றுச்  சாலையில் பயணிக்கிற ஒவ்வொருவருக்காகவும் எங்கோ  ஒரு ஜோக்கர்   போராடிக்கொண்டே இருக்கிறார். போராட்டங்களின் பெயர்  தெரிந்த அளவிற்கு  போராடுபவர்களின் முகங்கள் தெரிவதே இல்லை. நாம் பயன்படுத்துகிற பேருந்தில் தொடங்கி புதிதாய் போடப்படுகிற தண்ணீர்க் குழாய் வரை  தினம் பயன்படுத்துகிற  ஒன்றின்  பின்னால் ஜோல்னா பை  மாட்டிய  யாரோ ஒரு ஜோக்கர் நிச்சயம்  இருப்பார். ஒரு நிமிடம் யோசியுங்கள். அவர்  சேகராக  இருக்கலாம்.

 டிரெண்டிங் @ விகடன்