Published:Updated:

"துரைமுருகன் இப்போதுதான் வாய் திறக்கிறார்"- ஜி.கே.மணி சாடல்

தி.ஜெயப்பிரகாஷ்
"துரைமுருகன் இப்போதுதான் வாய் திறக்கிறார்"- ஜி.கே.மணி சாடல்
"துரைமுருகன் இப்போதுதான் வாய் திறக்கிறார்"- ஜி.கே.மணி சாடல்

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, "தொடரும் நீர்பற்றாக்குறை பிரச்னையால், மிகக் கடுமையான வறட்சி மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் மிக முக்கிய கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டம் ஆட்சியாளர்களால் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை வெகுவிரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக பா.ம.க சார்பில் வாகனப் பேரணியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் சில மாற்றங்கள் நடைபெற்றிருக்கிறது. ஆனால், இன்னும் அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய சூழ்நிலை. ஆனால், நிரந்தரமாக நீட் தேர்வு முறையை தடைசெய்ய வேண்டும் என்பதே பா.ம.க-வின் நிலைப்பாடு. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையாக தமிழகத்தின் சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே சிறப்பான கல்விக் கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். ஜெயலலிதா மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையில், பா.ம.க தான் தமிழ்நாட்டில் உயிரோட்டமான கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ராமதாஸும், அன்புமணியும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக நாள்தோறும் அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது தெரியாமல் தி.மு.க-வின் துரைமுருகன் இப்போதுதான் வாய் திறக்கிறார். எங்கள்மீது பழி சுமத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே, உள்நோக்கத்துடன் அவர் பேசி வருகிறார். மதுவுக்கு எதிராக எங்கள் கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாடு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவை உருவாக்கியிருக்கிறது. இளைஞர்கள் அதிகமாக நாடும் கட்சியாக பா.ம.க விளங்குகிறது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்கள் மற்றும் நடுநிலையாளர்களின் ஆதரவால் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை அமைக்கும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், வராமல் போவதும் அவரவர் விருப்பம். அதைப்பற்றி எல்லாம் பெரிதுப்படுத்திப் பேச வேண்டியதில்லை. ஆனால், நம் அண்டை மாநிலமான கேரளாவில் எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது'' என்றார்.