Published:Updated:

த்ரில் மேட்ச்... திருவள்ளூரை வீழ்த்தியது காரைக்குடி காளை! #TNPLUpdate

தா.ரமேஷ்
த்ரில் மேட்ச்... திருவள்ளூரை வீழ்த்தியது காரைக்குடி காளை! #TNPLUpdate
த்ரில் மேட்ச்... திருவள்ளூரை வீழ்த்தியது காரைக்குடி காளை! #TNPLUpdate

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2017-ம் ஆண்டு தொடருக்கான 13-வது போட்டி இன்று திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விபி திருவள்ளூர் வீரன்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதின.

டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்செய்த திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது.  எஸ்.சித்தார்த் 18 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய என்.எஸ்.சதுர்வேத் 31 பந்துகளில் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்தார். எஸ்.சுஜய் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த இரு விக்கெட்டுகளையும் சோனு யாதவ் கைப்பற்றினார்.

ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்றிருந்த திருவள்ளூர் வீரன்ஸ் அணி 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா அபராஜித் மற்றும் சஞ்சய் யாதவ், அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஸ்கோர் 133 ஆக இருந்தபோது பாபா அபராஜித் 33 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உட்பட 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சஞ்சய் யாதவ் 18 ரன்களில் வெளியேறினார். கடைசி அதிரடியாக விளையாடிய மலோலன் ரங்கராஜன் 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர் உட்பட 21 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. காரைக்குடி காளை அணி தரப்பில் அதிகப்பட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்பு களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களும் சிறப்பாகவே ரன் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு விஷால் வைத்யா, ஸ்ரீகாந்த் அனிருதா இருவரும் இணைந்து 54 ரன்கள் எடுத்தனர். விஷால் வைத்யா 17 பந்துகளில் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பத்ரிநாத் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய அனிருதா காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அவர், 33 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) 48 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்துவந்த ஷாஜஹான் 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசி மூன்று ஓவர்களில் 19 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 18-வது ஒவரில் ராஜ்குமார் ரவி அவுட் ஆனார். அந்த ஓவரில் 6 ரன்கள் எடுக்க 12 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது. அதேபோல் 19-வது ஓவரிலும் 6 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் விழுந்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சந்திரசேகர் கணபதி 15 பந்துகளில் (2 சிக்ஸர்கள்) 25 ரன்கள் எடுத்து வெளியேற மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய அனிருதா மீண்டும் திரும்பி வந்து சிக்ஸர் விளாசினார். இதனால் ஸ்கோர் சமமானது. அவரும் அரைச் சதம் கடந்தார். இறுதியில் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.