Published:Updated:

சாயம் வெளுத்த பச்சைப்பட்டாணி..! நிறத்துக்காக சாயம் சேர்க்கப்பட்டதா..?

சாயம் வெளுத்த பச்சைப்பட்டாணி..!   நிறத்துக்காக சாயம் சேர்க்கப்பட்டதா..?
சாயம் வெளுத்த பச்சைப்பட்டாணி..! நிறத்துக்காக சாயம் சேர்க்கப்பட்டதா..?

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், வாரச் சந்தையில் விற்பனையான பச்சைப்பட்டாணியை வீட்டுக்கு வாங்கிச்சென்று தண்ணீரில் ஊற வைக்கும்போது, பட்டாணி சாயம்போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .

செய்துங்கநல்லூரில் வாரச்சந்தை மிகவும் சிறப்பு வாய்ந்தது. காய்கறிகள், தேங்காய், கீரைகள், பழங்கள், மீன், கருவாடு, கோழி, முட்டை, மசாலா பொருள்கள், திண்பண்டங்கள், அரிசி வகைகள், பூ வகைகள்  ஆகியவற்றை  நீளமான விரிப்புகளில் அடுக்கிவைத்து,  ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வரிசைப்படுத்தி, வாங்குபவர் எளிதில் அடையாளம் காணும்படி வைத்திருப்பார்கள் வியாபாரிகள்.  வீட்டுக்குத் தேவைப்படும் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள், இங்கு வந்து வாங்கிச்செல்வது வழக்கம்.  

இந்தச் சந்தையிலுள்ள ஒரு காய்கறிக் கடையில் காய்கறிகள், கீரைகளோடு பச்சைப்பட்டாணி பாக்கெட்டையும் இதே செய்துங்கநல்லூர் , தென்னஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் சமையலுக்காக வாங்கிச் சென்றுள்ளார். சமைப்பதற்கு முன்னால், பாத்திரத்தில் போட்டு தண்ணீரை ஊற்றியதும், தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி பட்டாணி நிறம் இழந்து வெளுத்துப் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதி, பட்டாணி வாங்கிய காய்கறி வியாபாரியிடமே உடனே கொண்டுபோய் கொடுத்ததும் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாணியைப் பெற்றுக்கொண்ட வியாபாரி, ‘’நான் ஒரு சில்லறை வியாபாரி, இன்னொரு மொத்த வியாபாரியிடம்தான் சில்லறை விலைக்கு 100 பாக்கெட்டுகள் வாங்கிவந்தேன், ஒரு பாக்கெட் விற்றால் எனக்கு 2 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். பட்டாணி சாயம் போனது பற்றி எனக்குத் தெரியாது.’’ என்றார்.

கிராமப் பகுதிகளில் நடக்கும் வாரச்சந்தை என்பதால், சில மொத்தவியாபாரிகள் பட்டாணி பார்க்கப் பச்சைப்பசேலென இருந்தால்தான் மக்கள் வாங்கிச் செல்வார்கள் என்ற எண்ணத்தில், இப்படிப் பச்சை நிற சாயத்தைக் கலந்து ஏமாற்றி விற்பனை செய்துவிடுகிறார்கள்.  உணவுத்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட கிராமப் பகுதி சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம்குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பட்டாணியில் சாயம் போன சம்பவம், செய்துங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாணிக்குப் பச்சை சாயமா..?