Published:Updated:

வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு.. வருத்தத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு.. வருத்தத்துடன் திரும்பிய பொதுமக்கள்!
வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு.. வருத்தத்துடன் திரும்பிய பொதுமக்கள்!

வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாடிய மக்கள், பெரும் வேதனை அடைந்தார்கள். இதனால், திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு விழா களையிழந்தது.

ஆடி மாதத்தில் ஆறுகளில் புதுவெள்ளம் பாயும் என்பது ஐதீகம். அதையொட்டி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை எனப் பல மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், சிந்தாமணி ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் படித்துறைப் பகுதிகளுக்கு வருகை தந்து, விவசாயம் செழித்திடவும் புதுமணத் தம்பதிகள் சகல செல்வங்களையும் பெற்று வாழவும் பொதுமக்கள் பசி, பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு பெற்றிடவும் தண்ணீரை வழங்கும் காவிரித் தாயை ஆடிப்பெருக்கு நாளில் வழிபடுவது வழக்கம்.

வருடந்தோறும், ஆடி மாதம் 18-ம் தேதி, இந்த விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். மக்கள் கூட்டம் காவிரியில் குவியும். ஆனால் தற்போது, வறண்டுபோன காவிரியால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

கடந்த ஆண்டு, காவிரியாற்றில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கொஞ்சம் உற்சாகத்துடன் பொதுமக்கள் ஆடிப்பெருக்கைக் கொண்டாடினர். ஆனால் இப்போது, ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், அந்தத் தண்ணீர் இன்னும் கரூரைக் கடக்கவில்லை. ஆனாலும் முன்னேற்பாடாக, திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் போர்வெல் மூலம் குழாய்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்துவிட்டதால், காவிரி ஆறு வறண்டதும், ஆடிப்பெருக்குக்குக் காவிரியில் கூடும் பக்தர்களின் குறையைப் போக்கிட, திருச்சி மாநகராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறுகள்மூலம் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது, காவிரியில் நிலத்தடி நீர்மட்டம் மிக அதலபாதாளத்துக்குப் போய்விட்டதால், பல இடங்களில் போர்வெல் போட முடியவில்லை. அதனால், குளிப்பதற்கே பரவலாக ஏற்பாடுகள் செய்யமுடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தடுமாறிப்போனது.

வழக்கமாகத் தண்ணீர் பாய்ந்தோடும் காவிரியில் விடப்படும் முளைப்பாரியைப் புதுமணத் தம்பதிகள் எடுத்துவந்து, திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையைக் காவிரியாற்றின் மணல் பகுதியில் வைத்தபோது, காவிரியின் நிலமை கண்டு பலர் கலங்கினர். பிறகு வழியில்லாமல், திருச்சி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழாய்களில் நீராடி, வழிபாடு நடத்தினர்.

இதுபோல, திருமணமான பெண்கள் புதுத் தாலிக்கயிற்றை மாற்றிக் கட்டிக்கொண்டனர். மேலும், திருமணமாகாத பெண்கள் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நூலைக் கழுத்தில் அணிந்து கொண்டனர். பல இடங்களில் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீஸாரும் தாலிமாற்றிக்கொண்டனர். பிறகு, ஆற்றங்கரையிலுள்ள வேம்பு மற்றும் அரச மரத்தைச் சுற்றிவந்து மஞ்சள் கயிற்றைக் கட்டினர். மேலும், வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், வளையல் மற்றும் பழங்கள், வெற்றிலை பாக்கு, பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை கருகமணி, காப்பரிசி உள்ளிட்டவற்றை வைத்து, தீபமேற்றி மக்கள் காவிரித் தாயை வழிபட்டனர்.

மேலும்,அந்தப் பகுதியில் குறிப்பிட்ட தொலைவுக்கு மணல் பகுதிக்குள் பிளாஸ்டிக் விரிப்பு விரிக்கப்பட்டிருக்க, அந்த பிளாஸ்டிக் விரிப்புகளில் பூஜைப் பொருள்களை வைத்தும் வழிபட்டனர். பிறகு, இதே பகுதியில்தான் புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த பழைய மாலைகளை பிளாஸ்டிக் விரிப்பில் ஓடிய தண்ணீரில் விட்டுவிட்டுச் சென்றனர்.

வழக்கமாக, காவிரியாற்றின் இருகரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டோடும். அதுபோல உற்சாக வெள்ளம் மக்கள் மனங்களிலும் பெருக்கெடுக்கும். அத்தகைய காவியின் இன்றைய நிலையை எண்ணி வேதனையை விளக்க முடியாமல் விம்மலுடன் சென்றனர்.

இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் பார்க்கப் போகிறோமோ.