Published:Updated:

தென் மாவட்டங்களைக் கதிகலக்கும் விண்ட் மில் கொள்ளையர்கள்!

தென் மாவட்டங்களைக் கதிகலக்கும் விண்ட் மில் கொள்ளையர்கள்!
தென் மாவட்டங்களைக் கதிகலக்கும் விண்ட் மில் கொள்ளையர்கள்!

தென் மாவட்டங்களில் செயல்படும் காற்றாலைகளில், காப்பர் வயர்களைக் கொள்ளையடிக்கும் கும்பலால் அவை செயலிழக்கின்றன. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

தென் மாவட்டங்களைக் கதிகலக்கும் விண்ட் மில் கொள்ளையர்கள்!

நாட்டின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் 7,598 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அளவுக்குக் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ள போதிலும், காற்றின் வேகம் உள்ளிட்ட காரணிகளால் அதிகபட்சமாக 4,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இதில், பெரும்பகுதி நெல்லை, குமரி மாவட்டங்களில் உற்பத்தியாகிறது. தமிழகத்தின் மின் தேவையில் சுமார் 30 சதவிகிதம், காற்றாலை மின் உற்பத்தி மூலமாகவே தற்போது பூர்த்திசெய்யப்பட்டுவருகிறது.

நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் காற்று வீசுவதால், இங்கு விண்ட் மில் அமைக்கப் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் சுமார் 4,000-க்கும் அதிகமான விண்ட் மில்கள் செயல்பட்டுவருகின்றன. சிறிய ரக காற்றாலை அமைக்க 1.5 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், 5 கோடி ரூபாய் அளவிலான பெரிய ரக காற்றாலைகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

விண்ட் மில்  நிறுவனங்களிடம், உள்ளூரைச் சேர்ந்த ரவுடிகள் மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நடுக்காட்டில், பெரிய அளவில் முதலீடுசெய்துள்ள நிறுவனங்கள், உள்ளூர் நபர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாததால், போலீஸில் புகார்செய்வதில்லை. இதை உள்ளூர் ரவுடிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். பணம் கொடுக்க மறுக்கும் காற்றலைகளுக்கு ரவுடிக் கும்பல் தீவைத்துவிடுகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுவதால், விண்ட் மில் நிறுவனங்கள் ரவுடிக் கும்பலைப் பகைத்துக்கொள்வதில்லை. இந்த நிலையில், பணம் கொடுக்க மறுக்கும் காற்றாலைகளில் காப்பர் வயர்களைக் களவாடிச்சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், மின் உற்பத்தியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவருவதாக நிறுவனத்தினர் புலம்புகின்றனர். 

ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று காற்றாலைகளில், மர்ம நபர்கள் காப்பர் வயர்களை அள்ளிச்சென்றுவிட்டனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பாதுகாவலர் மனோகரன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ‘’காற்றாலை நிறுவனங்கள் பாதுகாப்புக்காக 2 அல்லது 3  விண்ட் மில்லுக்கு ஒரு வாட்ச்மேன் நியமிக்கின்றனர். அதனால், ஆள் இல்லாத இடங்களில் சமூக விரோதிகள் காப்பர் வயரை திருடிச் சென்கின்றனர். நாங்களும் இந்த விவகாரத்தில் தீவிர கண்காணிப்பிலேயே இருக்கிறோம்’’ என்று சொல்லி முடித்துக்கொண்டனர்.